முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: அவசரப்படாது ஆறுதலாக திருத்தம் செய்வது சிறந்தது

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப்

0 597

‘முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் சமூகத்துக்கு நன்மை பயக்கும் திருத்தங்களே மேற்கொள்ளப்பட வேண்டும். அதனால் அவசரப்படாது ஆறுதலாகத் திருத்தங்களைச் செய்வதே சிறந்ததாகும். இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் பல சிவில் சமூக அமைப்புகள் தொடர்ந்தும் தங்களது ஆலோசனைகளை முன்வைத்து வருகின்றன’ என முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தெரிவித்தார்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள அடுத்த மாதம் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளார் எனவும் அவர் கூறினார்.

வை.எம்.எம்.ஏ. இயக்கத்தின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் உட்பட்ட குழுவினர் முன்னாள் நீதியரசரும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவருமான சலீம் மர்சூபை அவரது இல்லத்தில் சந்தித்து முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் உட்படுத்தப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக தங்கள் ஆலோசனைகளடங்கிய அறிக்கையொன்றினைக் கையளித்தனர்.

இச்சந்திப்பு தொடர்பில் வினவியபோதே சலீம் மர்சூப் இவ்வாறு கூறினார். முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்த சிபாரிசு குழுவினருக்கு இடையில் நிலவிய சில முரண்பாடான கருத்துகளுக்கு சலீம் மர்சூப் தெளிவுகளை வழங்கினார்.

வை.எம்.எம்.ஏ. இயக்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம். ரிஸ்மி கலந்துரையாடலின்போது வை.எம்.எம்.ஏ.யினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் விளக்கமளித்தார்.

காதி நீதிபதிகள், முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள், முன்னாள் காதி நீதிபதிகள் சிரேஷ்ட சட்டத்தரணிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், உலமாக்கள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் 166 பேர் அடங்கிய மாநாடொன்றில் அவர்களது ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டு வை.எம்.எம்.ஏயின் அறிக்கை தயாரிக்கப்பட்டது. அறிக்கை வரைபுக் குழு 22 அமர்வுகளை நடாத்தியே தனது அறிக்கையைப் பூரணப்படுத்தியது.

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் முக்கியமான 10 விடயங்கள் தொடர்பில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையைப் பரிசீலனை செய்து தனது தீர்மானத்தை அறிவிப்பதாக சலீம் மர்சூப் தெரிவித்திருக்கிறார்.

வை.எம்.எம்.ஏ. பிரதிநிதிகள், முஸ்லிம் விவாக, விவாக ரத்துச் சட்டத்தின் திருத்த சிபாரிசுகளில் சில மாற்றுக் கருத்துக்களை வழங்கியுள்ள பாயிஸ் முஸ்தபாவையும் விரைவில் சந்திக்கவுள்ளனர். அவரிடமும் எங்களது அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.

சிபாரிசுக் குழுவில் முரண்பட்டுள்ள இரு தரப்பினரையும் ஒரு பொதுவான இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர முடியுமென்ற நம்பிக்கையுள்ளது என்றார்.

இதேவேளை, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் தாமதியாது திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பெண்கள் அமைப்புகள் தலைநகரில் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

சலீம் மர்சூபுடனான சந்திப்பில் வை.எம்.எம்.ஏ.யின் தேசிய தலைவர் எம்.என்.எம். நபீல், தேசிய பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம். ரிஸ்மி, தேசிய விவகாரங்களுக்கான தலைவர் கே.என். டீன் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஜாவித் யூசுப், சபீர் ஜவாத் ஆகியோர் பங்கு கொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.