ஞானசாரருக்கு மன்னிப்பளித்தால் ஜனாதிபதியும் பக்கச்சார்பாக இனவாதியாகவே கருதப்படுவார்
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவாராக இருந்தால் அவர் ஒருபக்க சார்பில் செயற்படும் இனவாதியாகவே கருதப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பு சுதந்திர தினத்தன்று ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்குவதாகத் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நீண்ட காலமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நாம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்த போதும், அதற்கு அவர் சரியான பதில் எதனையும் வழங்கவில்லை. அவ்வாறிருக்கையில் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் ஜனாதிபதி மாபெரும் தவறொன்றை இழைக்கவுள்ளார் என்றே கருத வேண்டும்.
அத்தோடு அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களித்திருந்தனர். இந்நிலையில் அவர் தனது இனம் சார்பாக செயற்படக்கூடாது. சுமார் 15 வருடங்களுக்கும் அதிகமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அரசியல் கைதிகள் குறித்தும் அவர் கவனத்தில்கொள்ள வேண்டும்.
பொது மன்னிப்பை எல்லாருக்கும் வழங்க முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுகுறித்து சிந்திக்க வேண்டும். மாறாக அவர் தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கினால் இனவாதியாகவே கருதப்படுவார் என்றார்.
-Vidivelli