ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் ஒருபோதும் மாற்றம் ஏற்பட போவதில்லை. எத்தனை கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும் யானை சின்னத்துடனேயே பயணிப்போம். தேர்தலுக்கு அஞ்சுவதன் காரணத்தினாலேயே எதிர்த்தரப்பினர் ஒவ்வொருவரின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக அடையாளப்படுத்தி வருகின்றனர். ஆனால் உரிய நேரத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரை அறிவிப்போம் என கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் ஆயத்த நிலைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் மாற்றங்கள் இருக்கவில்லை. கட்சியின் பாரம்பரிய சின்னமாக யானை சின்னமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் பல்வேறுபட்ட சின்னங்களை கொண்ட கட்சிகளுடன் கூட்டிணைந்து தேர்தல்களில் போட்டியிட்டிருந்தோம். அந்த சந்தர்ப்பத்திலும் கட்சி சின்னத்தில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
எனவே இடம்பெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போதும் கட்சி சின்னத்தில் மாற்றங்கள் எதுவும் கொண்டுவரப்படாது. ஏனைய கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டாலும் சின்னத்தில் மாற்றம் ஏற்படாது.
இதேவேளை, தேர்தலை கண்டு அஞ்சி எதிர்த்தரப்பினரின் ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக ஒவ்வொரு நபர்களின் பெயர்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளர் யார் என அறிவிப்பதற்கான அவசியம் தற்போது இல்லை. உரிய சந்தர்ப்பத்தில் வேட்பாளரை அறிவிப்போம் என்றார்.
-Vidivelli