போலியான ஆவணங்களைத் தயாரித்து காணிகளை மோசடியான முறையில் விற்பனை செய்யும் போலி முகவர்களுடைய தொகையும் அதனால், பாதிக்கப்படுபவர்களுடைய தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு இது போன்ற குற்றங்கள் நாட்டில் பரவலாக நடைபெற்று வருவதாக கொழும்பு மோசடித் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
பல்வேறு தருணங்களில் காணி உரிமையாளர்கள் தமது காணியை விற்கும் அவசரத்தில் காணி வரைபடங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களை தரகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். சில வேளைகளில் ஆவணங்கள் தவறவிடப்படுவதை மோசடிக்காரர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக மோசடி தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ரொஹான் பிரேமரத்ன தெரிவிக்கிறார்.
காணி தொடர்பான ஆவணங்களை சட்டத்துக்கு முரணான முறையில் நகலெடுத்து அதன் மூலம் தரகர்கள் காணிகளை விற்று மில்லியன் கணக்கான பணத்தைச் சம்பாதிக்கின்றனர்.
குற்றவாளிகளான போலி காணி விற்பனையாளர்கள், காணிகளின் மூலப் பிரதிகளையும் கைப்பற்றுவதோடு தானே குறித்த காணியின் உரிமையாளர் போன்று பாசாங்கு செய்வதாக பிரேமரத்ன தெரிவிக்கிறார். இதற்காக வேண்டி போலியான அடையாள அட்டை உட்பட பல்வேறு விடயங்களை மோசடிக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இலங்கையில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பான அறிக்கைகளின் படி, 2017 இல், போலி ஆவண மோசடிகள் 180 மற்றும் ஏமாற்று மோசடிகள் 66 உம் உட்பட மொத்தமாக 988 சொத்து மோசடிகள் பதிவாகியிருந்தன. பதிவாகிய 988 மோசடி குற்றச்சாட்டுக்களில் 734 குற்றச்சாட்டுகளுக்கே தீர்வு காணப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டில் மொத்தமாக 523 மோசடி குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்தன. அவற்றுள் மோசடி குற்றச்சாட்டுகள் 146 உம் ஏமாற்று மோசடிகள் 28 உம் அடங்கும்.
மோசடிக்காரர்கள் எத்துணை தைரியமாக திட்டமிட்ட முறையில் செயற்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக முல்லேரியாவின் அங்கொடையில் சட்டவிரோதமான முறையில் காணி விற்கப்பட்ட ஒரு சம்பவத்தைக் கூறலாம்.
சட்டவிரோதமாக விற்கப்பட்ட முல்லேரியாவின் இரு காணிகளின் உண்மையான உரிமையாளர் வெளிநாட்டில் கல்வி கற்கும் ஓர் இளம் யுவதியாவார். அது அவருக்கு அன்பளிப்பாகக் கிடைத்த காணியாகும்.
குறித்த யுவதி வெளிநாட்டில் இருப்பதை அறிந்து கொண்ட ஒருவர் காணிகள் தனக்கு விற்கப்பட்டது போன்று ஆவணங்களைச் சோடித்து சட்ட விரோதமாக காணியின் உரிமையாளரானார்.
இவ்வாறு போலியான காணி அனுமதிப்பத்திரம், போலியான அடையாள அட்டை, போலியான கையொப்பங்கள் மூலம் காணிகளுக்குப் போலியான உரிமையாளரானவர் அடம்பராகே யொஹான் ஷமிந்த அலிஸ் என்பவர் ஆவார்.
இந்தப் போலி உரிமையாளர் அலிஸ் மற்றுமொருவருக்குக் காணிகளை விற்ற பின்னரே பிரச்சினை சிக்கலாக மாறியது. காணிகளின் புதிய உரிமையாளர், குறித்த காணியில் மதில் ஒன்றை கட்ட முனைந்தபோது காணியின் உண்மையான உரிமையாளரான குறித்த யுவதியின் தந்தைக்கும் புதிய உரிமையாளருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது.
காணியின் புதிய உரிமையாளர் ரூபா 6 மில்லியன் தொகையினை வழங்கி காணியை பிறிதொ-ருவரிடமிருந்து கொள்வனவு செய்ததாக வாதிட்டார். அவருடைய ஆவணங்களில் குறித்த யுவதியின் போலியான கையொப்பங்களும் காணப்பட்டன.
தனது மகள் நீண்ட காலமாக வெளிநாட்டில் இருப்பதாகவும் யாருக்கும் காணிகளை விற்கவில்லை என்றும் குறித்த யுவதியின் தந்தை வாதிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த முறைப்பாடு கொழும்பு மோசடித் தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டில் கொழும்பு மோசடித் தடுப்புப் பிரிவு, கையொப்பங்களில் மாத்திரமின்றி –ஆவணங்கள், புகைப்படங்கள் எனப் பல்வேறு விடயங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது. இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
நடைபெற்ற மோசடி சம்பவத்தைத் தொடர்ந்து, காணிகளின் மூலப்பிரதி தொடர்பான தனிப்பட்ட விபரங்களை தரகர்களிடம் வெளியிட வேண்டாம் என மோசடி தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரேமரத்ன எச்சரிக்கை விடுக்கிறார்.
கடந்த ஜூன் மாதத்திலும் இது போன்றதொரு மோசடி சம்பவம் நடைபெற்றது. கொழும்புக்கு அண்மையில் 10 பேர்ச்சஸ் அளவிலான காணியொன்று தரகரால் சட்டவிரோதமாக ரூபா 3 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
இதன்போது ஜயதிஸ்ஸ என்ற போலியான பெயரைப் பயன்படுத்தி குறித்த முகவர் காணி விற்பனைக்குள்ளதாக பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளார். குறித்த காணி தன்னுடைய மனைவியின் காணி என்றும் நம்ப வைத்துள்ளார்.
பத்திரிகையில் விளம்பரத்தைப் பார்த்து காணியை கொள்வனவு செய்ய விருப்பம் கொண்ட பன்னிப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் ‘ஜயதிஸ்ஸ’ வை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
குறித்த தொலைபேசி உரையாடலின் போது அவசர பணத் தேவைக்காக வேண்டி விரைவில் காணி விற்கப்படவுள்ளதாக பன்னிப்பிட்டியவைச் சேர்ந்தவருக்கு தெரிவித்திருக்கிறார்.
காணியை கொள்வனவு செய்தவர் புதிய காணியைப் பார்வையிட வந்த வேளையில்தான் தனக்கு காணியை விற்றவர் அந்த காணியின் உரிமையாளர் இல்லை என்பதை அயலவர்கள் மூலம் தெரிந்து கொண்டார்.
குறித்த காணியின் உரிமையாளர் காணியை விற்கும் பொறுப்பை ஒரு தரகரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த தரகருக்கு முற்பணமாக 10000 ரூபாவும் வழங்கப்பட்டிருந்தது.
கைவிடப்பட்ட ஆவணங்கள் மோசடிக்காரர்களின் கைகளுக்கு கிடைக்கும்போது சட்ட விரோதமான முறையில் அவர்களுக்கு ஏற்றதுபோல் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
வீடுகள் மற்றும் காணிகள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு ரூபா 5 மில்லியன் தொடக்கம் 350 மில்லியன் வரை மோசடி செய்யப்படுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இது போன்று 75 முறைப்பாடுகள் தொடர்ந்து விசாரணையில் இருப்பதாக சி.ஐ.டி. தெரிவித்துள்ளது. தற்போது அதிகமான காணி மற்றும் வீடு விற்பனை மோசடிகள் விற்பனை முகவர்களால் நடைபெறுவதில்லை. தனியாட்கள் இதற்காக கிளம்பியுள்ளார்கள். காணி உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருக்கும்போதே அதிகமான மோசடிகள் நடைபெறுகின்றன.
பெரும்பாலும் காணிகள் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் கட்டாயமாக முற்பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். முற்பணத்தை வாங்கிய பின்னர் காணி முகவர்கள் தலைமறைவாகும் நிலை காணப்படுகிறது. தெஹிவளை, கல்கிசை, பத்தரமுல்லை, அத்துருகிரிய போன்ற பகுதிகளிலேயே இது போன்ற மோசடிகள் பற்றி அதிகமாக முறைப்பாடு கிடைப்பதாகக் சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.
அரசாங்க அலுவல ர்கள், ஆசிரியர்கள் என பலர் அவசரம் கருதி வீடுகளைக் கொள்வனவு செய்து இவ்வாறான மோசடிகளில் சிக்கியுள்ளதாக சி.ஐ.டி. சுட்டிக்காட்டியுள்ளது. நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள வீடுகள் மற்றும் காணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை (ஆர்.டி.ஏ.) கொள்வனவு செய்துள்ளது. இதற்காக வேண்டி உரிமையாளர்களுக்கு ஆர்.டி.ஏ. நட்டஈடாக ஒரு தொகை பணத்தை வழங்கும்.
நட்டஈட்டை பெற்றுக் கொண்ட உரிமையாளர்கள் தமது காணி அல்லது வீடுகளை விற்று விடுவார்கள். வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வேலைகள் தொடங்கப்படுவதற்கு முன்னர் புதிய உரிமையாளர்கள் தமது புதிய காணியில் வீடு கட்ட முனையும்போது பிரச்சினைகள் தோன்றுகின்றன.
ஒரு சில குற்றவாளிகள் சூழ்ச்சி செய்து காணிகளைச் சட்ட விரோதமாக போலி ஆவணங்கள் மூலம் உரிமையாக்கிவிட்டு மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்று தமது காணி என வாதாடும் நிலைமையும் காணப்படுகிறது. காணிகளின் உட் பிரிவுகள் தொடர்பாக நோக்கும் போது நீதி மன்றமும் இந்த முறைப்பாடுகளால் சிக்கலான நிலைமையை எதிர்நோக்குகிறது.
காணிகளைக் கொள்வனவு செய்யும்போது வாடிக்கையாளர்கள் காணி உரிமையாளர் மற்றும் காணி உரிமைப்பத்திரம் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் காணி விற்கும் முகவருடைய புகைப்படம் ஒன்றையும் கண்டிப்பாக பெற்றுக் கொள்ள வேண்டும் என சி.ஐ.டி. வலியுறுத்தியுள்ளது. தொடர்மாடி குடியிருப்புகளில் வீடுகளை வாங்கும்போது அதிக நாட்கள் வாழ்வதற்குச் சாத்தியமான வீடுகளைக் கொள்வனவு செய்யவேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் காணி மற்றும் வீட்டின் பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் விற்பனை முகவர்களுடைய விபரம், கிராம சேவகரின் உறுதிப்படுத்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். இணைய வழியினூடாகவும் தற்போது காணிகள் மோசடியாக விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காகவே பல இணையத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இணைய வழியூடாக காணிகளை வாங்கும்போதும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
-Vidivelli