பாகிஸ்தானில் மதநிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்தவ பெண்ணொருவரை விடுதலை செய்து வழங்கப்பட்ட தீர்ப்பு நாடு முழுவதும் பல நாட்கள் அமைதியின்மையையும், ஆர்ப்பாட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளதோடு குறித்த பெண்ணுக்கு கொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன. இந் நிலையில் அத் தீர்ப்பினை பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் மீளாய்வு செய்யவுள்ளது.
மதநிந்தனைக் குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளைச் சிறையில் கழித்த ஆசியா பீவி என்ற பெண் கடந்த ஒக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டார். அந்த விடுதலைக்கு எதிரக முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டையே உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
இஸ்லாத்தினை மதநிந்தனை செய்தல் பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய குற்றமாகும். கடந்த காலங்களில் இக் குற்றத்தை ஒருவர் இழைத்துள்ளார் என்ற வதந்திகள் கூட மரணதண்டனைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஆசியா பீவியின் விவகாரத்தை பாகிஸ்தானின் கடும்போக்குவாதிகள் தமது ஆர்பாட்டங்களுக்கு கருப்பொருளாக மாற்றிக்கொண்டுள்ளனர்
1990 ஆம் ஆண்டு தொடக்கம் மதநிந்தனைக் குற்றச்சாட்டு தொடர்பில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் முன்னர் வழங்கிய பீவிக்கான தீர்ப்பினை மீள உறுதிப்படுத்துமானால் ஏலவே அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள கனடாவிலுள்ள தனது மகள்மாருடன் இணைந்து கொள்ளும் சுதந்திரத்தைப் பெறுவார். தற்போது அவரது சொந்தப் பாதுகாப்பின் நிமித்தமாக பாகிஸ்தானிலுள்ள இரகசிய இடமொன்றில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளார்.
பீபி விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் காரணமாக அவரது சட்டத்தரணி சைபுல் மலூக் நாட்டைவிட்டு தப்பியோடியிருந்தார். அவர் செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக மீண்டும் இஸ்லாமாபாத்திற்கு திரும்பியுள்ளார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது ஒரு நகைப்புக்கிடமான மேன்முறையீடாகும். இந்த மேன்முறையீட்டைச் செய்தவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்படும். ஒரு சில நிமிடங்களில் இந்த வழக்கு விசாரணை முடிந்துவிடுமென நான் எதிர்பார்க்கின்றேன். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுமென மலூக் தெரிவித்தார்.
கிழக்கு பஞ்சாப் மாகாணத்திலுள்ள கிராமமொன்றில் கிறிஸ்தவர் ஒருவரால் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் குவளையை பயன்படுத்தி தண்ணீர் அருந்துவதற்கு பண்ணைப் பணியாளர்களான இரு முஸ்லிம் பெண்கள் மறுப்புத் தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின்போது மதநிந்தனை செய்ததாக ஐந்து பிள்ளைகளின் தாயான 54 வயதான ஆசியா பீவி என்ற கிறிஸ்தவ பெண்மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli