ரமல்லாஹ்வுக்கு வடகிழக்கே அமைந்துள்ள அல்-முக்ஹைர் கிராமத்தில் குடியேற்றவாசிகளுக்கும் இஸ்ரேலியப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததோடு டசின்கணக்கானோர் காயமடைந்தனர்.
ஹம்தி நஸ்ஸான் என அடையாளம் காணப்பட்ட 38 வயதான நபர் முதுகுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை தெரிவித்தனர்.
ஹம்தி நஸ்ஸான் தனது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுடள் வாழ்ந்து வந்ததார். இஸ்ரேலிய இராணுவத்தினர் வருவதற்கு முன்னதாக குடியேற்றவாசிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக அல்-முக்ஹைர் கிராம சபைத் தலைவர் அமீன் அபூ அல்யா தெரிவித்தார்.
முதலில் குடியேற்றவாசிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர், அதனையடுத்து இராணுவத்தினர் வந்தனர் அதன்பின்னர் கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டது என அவர் தெரிவித்தார்.
இந்த மோதலின்போது குடியேற்றவாசிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள் என்பதை இஸ்ரேலிய அதிகாரியொருவர் ஹாரெட்ஸ் செய்தித்தாளுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்போது குறைந்தது 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என செம்பிறைந் சங்கம் தெரிவித்துள்ளது. கிராமத்தில் காயமடைந்த பலரை மீட்பதில் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபட்டதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
உண்மையான துப்பாக்கி ரவைகளினால் குறைந்தது ஆறு பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவத்தினரின் உதவியுடன் யூதக் குடியேற்றவாசிகள் கிராமத்தில் தேடுதல் நடத்த முனைந்த வேளையிலேயே இந்த மோதல் ஆரம்பமானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறியேற்றவாசிகளினால் மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதலை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் கண்டித்துள்ளதாக அவரது அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகன்ற இஸ்ரேல் என்ற இஸ்ரேலியக் கொள்கையினை மீள உறுதிப்படுத்துவதாக இச் சம்பவம் அமைந்துள்ளது என வபா செய்தி முகவரகத்தினால் வெளியிடப்பட்ட ஜனாதிபதி அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாரிய விளைவுகள் ஏற்படும். மேலும் பதற்ற நிலையுடன் கூடிய ஆபத்தானதும் கட்டுப்படுத்த முடியாததுமான சூழ்நிலை ஏற்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன ஆள்புலப் பிரதேசங்களான கிழக்கு ஜெரூசலம், மேற்குக்கரை மற்றும் காஸா பிரதேசங்களில் 600,000 தொடக்கம் 750,000 பேர் வரையான இஸ்ரேலியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பலஸ்தீன மண்ணில் அமைக்கப்பட்டள்ள யூதர்களுக்கு மட்டுமான சட்டவிரோதக் குடியேற்றங்களில் வசித்து வருகின்றனர்.
பலஸ்தீன நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியேற்றவாசிகள் வசித்து வருவது நாளாந்த செயற்பாடுகளில் சமூகங்களுக்கிடையே முறுகல் நிலையினைத் தோற்றுவிக்கின்றது.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்தும் விரிவுபடுத்தி வருகின்றமை பலஸ்தீன தலைமைத்துவங்களுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும், இச் செயற்பாடு சமாதான முன்னெடுப்புக்களுக்கு பாரிய முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்குக்கரையும் கிழக்கு ஜெரூசலமும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என சர்வதேச சட்டம் பார்ப்பதோடு அந்த மண்ணில் மேற்கொள்ளப்படும் யூதக் குடியேற்றங்கள் அனைத்தையும் சட்ட விரோதமானவையாகவே கருதுகின்றது.
-Vidivelli