மத்ரஸா, இயக்கங்களுக்கும் பதிவு கட்டாயமானதாகும்

வக்பு சபை தலைவர் யாசின் திட்டவட்டம்

0 836

அரபுக் கல்லூரிகள் மாத்திரமல்ல ஹிப்ளு மத்ரஸா, குர்ஆன் மத்ரஸா மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கட்டாயமாக வக்பு சபையின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவுகள் இன்மையால் அவற்றைக் கண்காணிப்பதற்கு சட்டரீதியாக இயலாமல் இருக்கிறது என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசீன் தெரிவித்தார்.

அரபுக் கல்லூரிகள் வக்பு சபையின்கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான அமைப்புகளும் கல்லூரிகளும் வக்பு சபையின் கீழ் பதிவு செய்யப்படாதுள்ளதால் அவற்றில் ஒழுங்கான நிர்வாகக் கட்டமைப்பொன்று இல்லை. அவற்றிடம் இருக்கும் வக்பு சொத்துகள் யாரிடம் இருக்கிறது. அவற்றின் கணக்கு விபரங்கள் பற்றி அறிய முடியாதுள்ளது. அவர்கள் கணக்கு விபரங்களை சட்டரீதியாக எவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஏற்பாடுகளும் இல்லை. வக்பு சட்டத்தின் விளக்கத்தின்படி இவை எல்லாம் இஸ்லாத்தின் பார்வையில் நன்மையான காரியங்கள். அந்த நன்மையான காரியங்கள் அனைத்தும் வக்பு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதே சட்டமாகும்.

நாட்டின் இன்றைய சூழ்நிலையில் எம்மிடையே வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். நாம் எதிலும் இரகசியம் பேணத்தேவையில்லை. நாட்டில் சட்டரீதியான பாதுகாப்புகள் எமக்குண்டு.

அரபுக் கல்லூரிகளும், இயக்கங்களும் வக்பு சபையில் பதிவு செய்யப்படவேண்டும் என்று நாம் அறிவித்ததையடுத்து பல அரபுக் கல்லூரிகள் பதிவுக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளன.

பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட சில சொத்துகள் பதிவு செய்யப்படாத மத்ரஸாக்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வக்பு சபைக்கு முறைப்பாடு கிட்டியுள்ளது. அரபுக் கல்லூரிகள் வக்பு சபையில் பதிவு செய்வது எமது சமூகத்திற்கு நன்மையே பயக்கும். இதில் எவரும் அரசியல் பின்னணியில் நோக்கக்கூடாது என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.