நாட்டின் ஜனநாயகம் கடந்தவருட இறுதியில் கேள்விக்குறிக்குள்ளானது. இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தால் அரசியல் யாப்பும், ஜனநாயகமும் பாதுகாக்கப்பட்டது. அத்தகைய நாட்டின் மேன்மைதங்கிய துறையாக இருக்கும் நீதித்துறையை அவமதித்தவர் பாரிய குற்றமிழைத்தவராகவே கருதப்படுவார்.
பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுகளில் சிக்கி 6 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஞானசார தேரர் பாரிய குற்றம் இழைத்தமையினாலேயே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
2016 ஜனவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தின்போது, சந்யா எக்னலிகொடவை திட்டிய ஞானசார தேரர் தொடர்பில், எக்னலிகொட சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களால் நீதவானிடம் முறையிடப்பட்டது. அத்துடன், நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தெரிவித்து ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க ஞானசாரவை கைது செய்வதற்கான பிடியாணையையும் வழங்கியிருந்தார். இதன்படி 2016 ஜனவரி 26 இல் கைதுசெய்யப்பட்ட ஞானசார தேரர் குறுகிய காலத்திற்குள் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சந்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய வழக்கில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார, குற்றவாளியனக் கடந்த வருடம் மே மாத இறுதியில் ஹோமாகம நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஹோமாகம நீதவான் நீதிமன்றில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், சந்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பான வழக்கின் அடிப்படையிலேயே அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன், இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு மற்றும் ஞானசார தேரருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை தொடர்பில் 2018 ஜூன் 14 ஆம் திகதி அறிவிக்கப்படது.
பின்னர் கைதுசெய்யப்பட்ட ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்ட போதிலும் அது நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு சூல்நிலையில் ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க பலதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ உள்ளிட்டோர் இந்தக் காரியத்தில் ஈடுபட்டனர். இதுதவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள், தற்போதைய மேல்மாகான ஆளுநர், ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள் என்போரும் பொதுபலசேனாவுடன் பேச்சுவார்த்தை என்ற பெயரில் இந்தக் காரியத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நெருக்கமாகவுள்ள தரப்பினரே இந்த விடயத்தில் இறங்கியிருந்தனர். அத்துடன், சில இந்து அமைப்புகளும் ஞானசாரரை விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தன.
இப்போது இவ்விடயம் மும்முரமாக மேற்கொள்ளப்படுகின்றது. எதிர்வரும் சுதந்திர தினத்தன்று ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க பல்வேறுமட்டத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது இப்படியிருக்க “கலகொட அத்தே ஞானசார தேரர் பாரியதொரு குற்றத்தைப் புரிந்தவர் அல்ல. அவர் நாட்டுக்காகவும், இராணுவ வீரர்களுக்காகவும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவராவார். எனவே அவரை விடுவிப்பதில் தவறில்லை” என சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
பௌத்தர்கள் தொடர்பில் பல்வேறு குறிப்பிடத்தக்க செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலைக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே ஞானசார தேரர் பௌத்தர்கள் விவகாரங்களிலும், நாட்டில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் முன்நின்று செயற்பட்டவர் என்ற ரீதியில் நாடு முழுவதிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபராவார் எனவும் துமிந்த திஸாநாயக்க எம்.பி. குறிப்பிட்டிருந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது இனவாத சக்திகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்திருந்தார். 2015 பொதுத் தேர்தலின்போது சுதந்திரக் கட்சியை ஆதரிக்கும் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் துமிந்த திஸாநாயக்கவை ஆதரித்திருந்தனர். இவ்வாறானதொரு சூழலில் அவரின் இன்றைய நிலைப்பாடானது பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்துகின்றது.
“கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று அரசியலமைப்பிற்கிணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதாக வாக்குறுதியளித்துள்ளார்” என பொதுபல சேனா அமைப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாலொன்றை சில தினங்களுக்கு முன்னர் பொதுபல சேன அமைப்பினர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இலத்தில் நடத்தியிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது அஸ்கிரிய மற்றும் மல்வத்து மஹாநாயக்க தேரர்களது கடிதங்களையும் ஏனைய அமைப்புக்களின் கடிதங்களையும் அவரிடம் கையளித்தனர். அதே வேளை எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
“ஞானசார தேரரின் தண்டனை விடயம் தொடர்பில் தான் அதிர்ச்சியடைவதாகவும், எவ்வாறிருப்பினும் ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதாகவும் ஜனாதிபதி எமக்கு உறுதியளித்தார்” என இந்த சந்திப்பின் பின்னர் பொதுபலசேனா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், “விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது, இராணுவ வீரர்கள் பற்றி கருத்து தெரிவித்த ஞானசார தேரரை கைது செய்து சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை நியாயமற்றது” என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயளாலர் மகல்கந்த சுதத்த தேரர் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அச்சமயத்தில் ஏற்பட்ட ஆவேசமான மனநிலையின் வெளிப்பாடாகவே அவருடைய செயற்பாடு அமைந்திருந்தது என்பதைக் கருத்திற்கொண்டு அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அஸ்கிரிய – மல்வத்து பீடங்கள் கோரியுள்ளன.
“நாட்டின் வரலாற்றின் ஆரம்ப காலப்பகுதியில் இருந்தே மகாநாயக்க தேரர்கள் பௌத்த மதத்தின் பாதுகாப்பு, நாட்டின் நலன் குறித்த விடயங்களில் ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளமை அனைவரும் அறிந்த விடயமாகும். நாட்டில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையில் நாட்டிற்காக தம்மை அர்ப்பணித்து செயற்பட்ட இராணுவ வீரர்களுக்கு சிக்கல்கள் ஏற்படுகையில் அவர்களைப் பாதுகாப்பது முக்கியமான கடமை என்ற அடிப்படையில் தமது கருத்துக்களை வெளியிடும் பொருட்டு இந்நாட்டில் வாழும் பெரும்பான்மையான தேரர்கள் முன்வந்திருக்கின்றார்கள்” என்றும் குறித்த பீடங்கள் குறிப்பிட்டுள்ளன.
நாட்டில் இன, மத குரோதங்களை ஏற்படுத்தி அமைதியின்மையை தோற்றுவித்த ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்தமை பாரிய குற்றமாகப் பார்க்க வேண்டும். இந்த விடயமல்லாது, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குள்ளாகி அவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அதிகமான குற்றச்சாட்டுகளுக்குள்ளான நபர் ஒருவரை விடுவிப்பதற்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவது பல்வேறு மட்டத்தில் அவரின் விடுதலைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன.
குறிப்பாக சுதந்திரக் கட்சியினர் ஞானசார தேரரின் விடுதலைக்காக மும்முரமாக செயற்படுகின்றமை புலப்படுகின்றது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினர் இதில் அசட்டை போக்கை கையாள்கின்றனர். கடந்த புதனன்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சுதந்திர தின நிகழ்வு தொடர்பிலான செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியபோது, “சுதந்திரத்தினத்தன்று ஞானசார தேரர் விடுதலை செய்யப்படுவாரா?” என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது, கடும் கோபத்துடன் இந்த விடயம் குறித்து ஜனாதிபதியிடம்தான் கேட்கவேண்டும். ஏனெனில் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் அவரிடம்தான் இருக்கிறது. எனவே அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்றார்.
ஏற்கனவே கண்டி வன்முறைகளின் சூத்திரதாரி அமித் வீரசிங்க பிணையில் விடுதலையாகியிருக்கிறார். அத்துடன், ஞானசார தேரருக்கும் விடுதலை வழங்குவதானது இந்த சூழலில் ஆபத்தானதாகவே கருதவேண்டியிருக்கிறது. ஏனெனில் தற்போது முஸ்லிம் தரப்பில் ஆங்காங்கே விடப்பட்டிருக்கும் தவறுகளை பயன்படுத்தி மீண்டுமொரு வன்முறைக்கு நாட்டை இட்டுச்செல்லலாம் என்ற அச்சம் எழுவது சாதாரணமானதே.
எனவே, நீதித்துறைக்கு சவால் விடுத்தவருக்கு சுதந்திர தினத்தன்று விடுதலையளிப்பதானது, அந்த நாளில் நீதித்துறைக்கு சாவுமணி அடிப்பதாகவே கருதவேண்டியிருக்கிறது.
-Vidivelli