இலங்கையில் உள்ள அரபுக் கல்லூரிகளை வலுவூட்டும் நோக்கில் “சமூகத்தையும் தேசத்தையும் கட்டியெழுப்புவதில் அரபுக் கல்லூரிகளின் வகிபாகம்” எனும் கருப்பொருளில் அரபுக் கலாசாலை அதிபர்கள், போதனாசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்காக அகில இலங்கை அரபுக் கல்லூரிகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்த மாநாடு கண்டி, தஸ்கர அல்–ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியில் கடந்த 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெற்றத. இம் மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- இலங்கை முஸ்லிம் சமூகம் வரலாறு நெடுகிலும் பிற சமூகங்களுடனும் சமயத்தவர்களுடனும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகின்ற சமூகம் என்ற வகையில் மதத்தின் பெயராலோ அல்லது இனத்தின் பெயராலோ இடம்பெறும் எந்தவொரு மத நிந்தனை செயற்பாட்டையும் சட்டத்தை மீறிய தீவிர போக்குகளையும் அது அங்கீகரிக்காது. அதனடிப்படையில் இஸ்லாத்தின் பெயராலும் முஸ்லிம்களின் பெயராலும் இடம்பெறும் எந்தவொரு தீவிரவாத மற்றும் மத நிந்தனையோடு தொடர்புபட்ட நிகழ்வாக இருந்தாலும் அதனை ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக இலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றியம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது.
- இந்நாட்டில் இயங்கும் அரபுக் கலாசாலைகள் முன்னைய காலங்களை விட தாய் நாட்டையும் தேசத்தையும் கட்டியெழுப்பும் பணியில் முழு மூச்சாக செயற்பட வேண்டும்.
- இலங்கையில் சமாதானத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் பணியில் அரபுக் கலாசாலைகளும் உலமாக்களும் முன்பை போலவே தொடர்ந்தும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
- நாட்டில் போதைப் பொருள் பாவனை பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் சூழலில் போதைப் பொருளற்ற வாலிப சமூகமொன்றை கட்டியெழுப்பவும் சிறந்த பண்பாடுள்ள எதிர்கால தலைமுறையை உருவாக்கவும் அரபுக் கல்லூரிகள் தொடர்ந்தும் பாடுபட வேண்டும்.
- இன, மத, குல, கட்சி பேதங்களை மறந்து தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காகவும் தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் சகல முஸ்லிம் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இந்நாட்டின் சர்வ மதத்தலைவர்களுடனும் சமூகத்தலைமைகளுடனும் கைகோர்த்து உழைக்க வேண்டும்.
- இலங்கை அரபுக் கலாசாலைகளுக்கு ஒன்றரை நூற்றாண்டு கால வரலாறு உண்டு. அவற்றை உருவாக்குவதில் உழைத்த முன்னோடிகள் நன்றியோடு நினைவுகூரத்தக்கவர்கள். அந்த முன்னோடிகளை எமது இளம் தலைமுறையினரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வகையில் அவர்கள் தொடர்பான விழிப்புணர்வு அரபுக் கலாசாலைகள் மட்டத்தில் அரபுக் கல்லூரிகள் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும்.
- பெரும் அர்ப்பணத்துடனும் தியாகத்துடனும் நம் நாட்டு அரபுக் கலாசாலைகளை வெற்றிகரமாக நிர்வகித்து வருகின்ற நிர்வாகிகள், அதிபர்கள், ஆசான்கள் போன்ற அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு நிறைவான நற்கூலியை வாங்கியருள வேண்டும் என இச்சபை பிரார்த்திக்கிறது.
- இலங்கை அரபுக் கலாசாலைகள் தொடர்ந்தும் வலுவூட்டப்பட வேண்டும் எனவும் அவற்றை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் இலங்கை அரபுக் கலாசாலைகள் ஒன்றியத்தினூடாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இம் மாநாடு வலியுறுத்துகின்றது.
-Vidivelli