கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் முயற்சியால் வெள்ளவத்தையில் முஸ்லிம் மாணவிகளுக்கான தேசிய பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை மெரைன் டிரைவ் பிரதேசத்தில் நிறுவப்படவிருக்கும் குறித்த பெண்களுக்கான மும்மொழி தேசிய பாடசாலைக்கு ஆயிஷா கல்லுரி என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிப் பத்திரத்தில் நேற்றுமுன்தினம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஒப்பமிட்டார்.
குறித்த பாடசாலையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அப்பாடசாலையில் பிள்ளைகளை சேர்க்க விரும்புவோர் இசுருபாயவிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கான பிரிவு மற்றும் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் உள்ளிட்டோரை தொடர்புகொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
1994 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் வெள்ளவத்தை – தெஹிவளை பகுதியில் முஸ்லிம் பெண்கள் பாடசாலையொன்றை நிர்மாணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். எனினும் துரதிஷ்டவசமாக அப்போது அதனை செய்ய முடியாமல் போனது.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு குறித்த பாடசாலையை ஆரம்பிப்பதற்கான திட்ட அறிக்கையை தயாரித்ததுடன் பிரதமரின் ஆலோசனையுடன் அமைச்சரவை பத்திரமொன்றையும் தயாரித்து கல்வியமைச்சர் மூலமாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
தனியாக முஸ்லிம் பாடசாலை ஆரம்பிக்க முடியாது என்ற நிலையில் குறித்த யோசனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வருடம் சகல மாணவர்களையும் உள்ளீர்க்கும் வகையில் யோசனையொன்று தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டபோது அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அரசியல் சூழ்ச்சி காரணமாக ஏற்பட்ட குழப்பகரமான நிலைமை காரணமாக இவ்விடயம் தடைப்பட்டது. தற்போது மீண்டும் இதனை நடைமுறைப்டுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெள்ளவத்தை மெரின் டிரைவ் பகுதியிலுள்ள வர்த்தக கைத்தொழில் அமைச்சுக்கு சொந்தமான காணியொன்றை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் பேசி பெற்றுக்கொண்டுள்ளோம். கட்டட நிர்மாணப்பணிகள் மிக வேகமாக நடைபெறவுள்ளன.
கொழும்பு வாழ் முஸ்லிம் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதில் இருக்கும் தடைகளையும், நெருக்கடிகளையும் நிவர்த்தி செய்யும் நோக்கில் இப்பாடசாலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய பாடசாலை மும்மொழிகளிலும் பல்லின சமூகங்களும் இணைந்து கல்வி கற்கக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
கதீஜா மகளிர் கல்லூரி, ஆயிஷா மகளிர் கல்லூரி என்ற இரண்டு பெயர்கள் இதற்கு சிபார்சு செய்யப்பட்டன. இந்நிலையில் ஆயிஷா மகளிர் கல்லூரி என்ற பெயர் கல்வியமைச்சரால் இறுதி செய்யப்பட்டது.
இப்பாடசாலையில் இவ்வருடத்திலிருந்தே கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்றார்.
-Vidivelli