ஞானசார தேரரின் விடுதலை குறித்து கவனம் செலுத்துங்கள்
ஜனாதிபதியிடம் அஸ்கிரிய – மல்வத்து பீடங்கள் கோரிக்கை
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அச்சமயத்தில் ஏற்பட்ட ஆவேசமான மனநிலையின் வெளிப்பாடாகவே அவருடைய செயற்பாடு அமைந்திருந்தது என்பதைக் கருத்திற்கொண்டு அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அஸ்கிரிய – மல்வத்து பீடங்கள் கோரியுள்ளன.
இவ்விடயத்தை வலியுறுத்தி அஸ்கிரிய பீடம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டின் வரலாற்றின் ஆரம்ப காலப்பகுதியில் இருந்தே மகாநாயக்க தேரர்கள் பௌத்த மதத்தின் பாதுகாப்பு, நாட்டின் நலன் குறித்த விடயங்களில் ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளமை அனைவரும் அறிந்த விடயமாகும். நாட்டில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையில் நாட்டிற்காக தம்மை அர்ப்பணித்து செயற்பட்ட இராணுவ வீரர்களுக்கு சிக்கல்கள் ஏற்படுகையில் அவர்களைப் பாதுகாப்பது முக்கியமான கடமை என்ற அடிப்படையில் தமது கருத்துக்களை வெளியிடும் பொருட்டு இந்நாட்டில் வாழும் பெரும்பான்மையான தேரர்கள் முன்வந்திருக்கின்றார்கள்.
இத்தகையதொரு நிலையில் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீரென தோன்றிய ஏதோவொரு மனநிலையின் காரணமாக வெளிப்படுத்திய கருத்து, செயல் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் அமைந்ததாகக் குறிப்பிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் அவரின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் கடந்த சில நாட்களாக ஆராய்ந்து போது, நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்கும் அதேவேளை ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஞானசாரருக்கு விடுதலை வழங்க முடியுமாயின் அது முக்கியத்துவம் மிக்கதாக அமையும் என்ற விடயம் ஆலோசிக்கப்பட்டது. இக்கடிதத்தின் ஊடாக ஞானசார தேரரை விடுதலை செய்வது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் எனக் கோருகின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஞானசாரரின் விடுதலையை வலியுறுத்தி மல்வத்து பீடம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் காரணமாக ஞானசார தேரர் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அச்சமயத்தில் ஏற்பட்ட ஆவேசமான மனநிலையின் வெளிப்பாடாகவே அவருடைய செயற்பாடு அமைந்திருந்தது என்பதைக் கருத்திற்கொண்டு அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
-Vidivelli