சேனா படைப்புழுவின் தாக்கத்தினால் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விசவாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையானது விவசாயிகளை கடும் நஷ்டத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
இப்படைப் புழுவின் அந்துப் பருவமானது ஒரே மணித்தியாலத்தில் சுமார் 100 கிலோமீற்றர் தூரம் வரை பறக்கும் வல்லமை கொண்டதாகும். அதுமாத்திரமல்லாமல் இப்படைப் புழுக்கள் 100க்கும் மேற்பட்ட வகையான தாவரங்களையும் பயிரினங்களையும் தாக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளன.
சேனா எனப்படும் படைப்புழுக்கள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடுப்பகுதியளவில் இந்தியாவில் இருந்து நாட்டிற்கு வந்திருக்ககூடும் என சந்தேகிப்பதாக விவசாய திணைக்களத்தின் கன்னொருவ தேசிய விவசாய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு நிலையத்தின் உதவி பணிப்பாளர் சனத் எம்.பண்டார தெரிவித்துள்ளார்.
80 ஆயிரம் ஏக்கர் சோள பயிர் செய்கையில் 45 ஆயிரம் ஏக்கர் படைப்புழுக்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள சுமார் 31 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புச் சோளச் செய்கையில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இப்படைப் புழுக்கள் தாக்கியழித்துள்ளன.
இப்படைப்புழுக்கள் அம்பாறை மாவட்டத்தில் இனங் காணப்பட்டபோது சோளச் செய்கையினை பாரியளவில் தாக்கி வந்தன. பின்னர் நிலக்கடலை, பயற்றை, தக்காளி, வெண்டி, கரும்பு, நெல், இறுங்கு உள்ளிட்ட மரக்கறிப் பயிர் வகைகளை தாக்கி அழித்து வருவது அறியப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் மகாஓயா, தமன, பதியத்தலாவ, லகுகல, அட்டாளைச்சேனை அஷ்ரஃப்நகர், ஆலம்குளம், திருக்கோவில், பொத்துவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் இதன் தாக்கம் வீரியத்துடன் காணப்படுகின்றது.
இதனால் இப்பயிர்ச் செய்கையின் வருமானத்தினை நம்பி பல்வேறு தரப்பிலிருந்தும் கடன்தொகையினைப் பெற்று மேட்டுநிலப் பயிர்ச் செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் கடன்களை அடைக்கமுடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மிகவும் பாரதூரமான முறையில் வேகமாக நாட்டின் பல பகுதிகளிலும் பரவும் சேனா படைப்புழுத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கத்தின் கடமையாகும். இது தொடர்பில் ஜனாதிபதி முதல் அதிகாரிகள் வரை கவனம் செலுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறத.
குறித்த படைப்புழுக்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை மற்றும் பாதிப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது புழுக்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டயீடு வழங்குதல் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைச்சரவையிலும் இந்த விவகாரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையின் விவசாயத் துறையுடன் தொடர்புடைய சகல நிறுவனங்களையும் அழைத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி வாராந்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தில் பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதேவேளை சேனா படைப்புழுவின் தாக்கத்தினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் பி.ஹரிஸன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, ஒரு ஹெக்டெயருக்கு 40 ஆயிரம் ரூபா உயர்ந்தபட்ச இழப்பீடாக வழங்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கவும் நிதி அமைச்சு தயார் நிலையில் உள்ளதாகவும் விவசாய குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் அரசாங்கம் இந்தப் படைப்புழுவின் தாக்கம் மேலும் பரவாது கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியமாகும். இல்லாதபட்சத்தில் நாட்டின் பிரதான விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் நாட்டை மிகப் பெரும் பின்னடைவுக்கும் இட்டுச் செல்லும். இந்தியாவைப் போன்று இங்கும் விவசாயிகள் நூற்றுக் கணக்கில் தற்கொலை செய்து கொள்கின்ற நிலை வரலாம். அவ்வாறான துரதிஷ்ட நிலை ஏற்படாமல் அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli