ஐந்தாறு தடவைகள் சவூதி அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னரே இலங்கைக்கு இவ்வருடத்திற்கான ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநராக பதவியிலுள்ள ஹிஸ்புல்லா 10 நாட்கள் திருட்டு அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து இதனை செய்ய முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து ஏ.எச்.எம்.பௌஸி எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னர் ஹஜ் விடயத்தை நேர்த்தியாக முன்னெடுத்து செல்கின்றோம். நான் நல்லாட்சி அரசாங்கத்தின் இனநல்லிணக்க இராஜாங்க அமைச்சராகத்தான் பதவிவகித்தேன். அத்துடன் சுதந்திரக் கட்சி உறுப்பினராக இருந்தும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஹலீம், ஹஜ் விடயத்தில் அனுபவம் உள்ளவன் என்ற வகையில் என்னுடன் பல்வேறுவகையிலும் கலந்தாலோசித்து தனது நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அத்துடன் இன்னும் பல சிரேஷ்ட உறுப்பினர்களிடமும் ஆலோசனைபெற்று திறம்பட ஹஜ் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இங்கு கட்சி பேதம் பார்க்கப்படவில்லை. அரசியல் போட்டித்தன்மைகளும் இருக்கவில்லை.
நாங்கள் ஒன்றிணைந்தே சவூதி ஹஜ் அமைச்சுடன் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை கடந்த ஒரு வருடமாக மேற்கொண்டோம். நாம் பெயர் போட்டுக்கொள்ள இதனை விளம்பரப்படுத்திக்கொள்ளவுமில்லை. ஹிஸ்புல்லாவின் அமைச்சுக்குக் கீழ் 10 நாட்கள் வரை முஸ்லிம் சமய விவகார அமைச்சு கெசட் செய்யபட்டிருந்தது.
அதற்கு முன்னர் என்னிடம் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சு தரப்பட்டது. எனினும் அமைச்சர் யாரும் நியமிக்கப்படவில்லை. புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சு உதய கம்மன்பிலவுக்கு வழங்கப்பட்டது. அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டனர். பின்னர்தான் ஹிஸ்புல்லாவின் அமைச்சின் கீழ் குறித்த விடயம் வர்தமானியின் மூலம் கொண்டுவரப்பட்டது. இந்தக் குறுகிய காலத்திற்கு ஹஜ் கோட்டா அதிகரிப்பை அவரால் செய்ய முடியாது. ஏனெனில் ஹஜ் விவகாரத்துடன் நான் பல வருட அனுபவம்கொண்டவன் என்ற ரீதியில் இது மிகவும் சிரமமான காரியமாகும். நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்த கோட்டா அதிகரிப்பு கிடைத்தது என்றார்.
-Vidivelli