மூன்று மாதங்களில் கிழக்கு மக்களை திருப்திப்படுத்துவேன்
பக்கச்சார்பாக செயற்படமாட்டேன் என்கிறார் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்
- ஆங்கிலத்தில்: மிருதுலா தம்பையா
- தமிழில்: ஏ.ஆர்.ஏ. பரீல்
Q கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தின் தமிழ் பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. உங்களது நியமனத்துக்கு எதிராக தமிழ் சமூகம் ஏன் செயற்படுகிறது?
முஸ்லிம் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டால் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அதனை எதிர்க்கின்றனர். குறிப்பிட்ட ஹர்த்தால் வெற்றியளிக்கவில்லை. அதிகமான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. சிலரே பிரச்சினைப்பட்டுக் கொள்கிறார்கள். சிலரே கடைகளை மூடியிருந்தார்கள். சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது கடைகளைத் திறந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே ஹர்த்தால் தோற்றுப் போய்விட்டது.
நான் அவர்களை குற்றம் சுமத்தவில்லை. ஏனென்றால் கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலைமை இதுதான். தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டால் முஸ்லிம் சமூகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கும். அவர்கள் தமிழ் ஆளுநர்மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆளுநர் என்ற வகையில் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினைப் பிரயோகித்து கிழக்கு மாகாண சபையின் கீழ், உடனடியாக செயலகம் ஒன்றினை நிறுவவுள்ளேன். இந்த செயலகத்தின் பணி ஒவ்வொரு பிரச்சினையையும் ஆராய்ந்து எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் அவற்றைத் தீர்த்து வைப்பதாகும். இதன் மூலம் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள முடியும். இன்றைய சூழ்நிலையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்வதைவிட சமூகங்களுக்கிடையில் உறவுகள் கட்டியெழுப்பப்பட வேண்டும். சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்துவதே எனது கடமையாகும்.
Q மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படுவதை பிற சமூகங்கள் விரும்புவதில்லை என்கிறீர்கள், இதுவே கிழக்கின் இன்றைய நிலைமை என்கிறீர்கள். ஏன் இப்படிக் கூறுகிறீர்கள்?
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் சமூகத்தினரின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அநேகம் இருக்கின்றன.
காணி, கலாசாரம், பாடசாலைகள், தொழில்வாய்ப்புக்கள், அபிவிருத்திகள் எனப்பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளன. இதனால் இரு சமூகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கு, இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அனைத்துப் பிரதிநிதிகளும் ஒற்றுமைக்கு முக்கியம் கொடுத்துள்ளார்கள். அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் அவர்கள் ஒன்றுபட்டு வாழ்வார்கள் என எதிர்பார்க்க முடியாது
Q கிழக்கில் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கு மூன்று சமூகத்தினதும் சமரச முயற்சியாளராக செயற்படுவீர்களா?
எனது சமயம் இஸ்லாமாக இருந்தாலும் ஆளுநர் என்ற வகையில் நான் பொதுவான மனிதன். கிழக்கில் அமைக்கவிருக்கும் செயலகத்துக்கு மூன்று சமூகத்திலிருந்தும் ஒவவொரு பிரதிநிதியை நியமிப்பேன். அவர்கள் தங்களது சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு செயற்படுவார்கள். இந்த வகையில் நான் பொதுவானவனாகவே இருப்பேன். செயலகத்தின் மூலமாக பிரச்சினைகளை குறுகிய காலத்தினுள் தீர்ப்பேன். பிரச்சினைகள் இனங்காணப்பட்டதும் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் ஊடாக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து தீர்த்து வைப்பேன்.
Q நீங்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டதும் உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நீங்கள் உங்கள் சமூகத்துக்கு மாத்திரம் உதவி செய்வீர்கள். பிரச்சினைகளின் போது பக்கசார்பாக நடந்து கொள்வீர்கள் என தெரிவிக்கப்படுவது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
நான் இப்போது ஆளுநராக இருக்கிறேன். என்னால் பக்கசார்பாக செயற்படமுடியாது. எனது கடமையில் நான் பொது மனிதனாகவே செயற்படுவேன். எனது கடமை பொதுவானதாகவே இருக்கும். பக்கசார்பாக இருக்காது என நூறு வீதம் உறுதி செய்கிறேன்.
நான் ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதும் கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் எனது சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள், தந்தையர்கள், மகள்கள் மற்றும் மகன்கள் ஆவர்.
ஆளுநர்கள் கொழும்பிலிருந்தே நியமிக்கப்படுகிறார்கள். அவர்களால் தமிழ்பேச முடியாது. கிழக்கு மாகாணத்தில் 80 வீதமானவர்கள் தமிழ் மொழி பேசுபவர்கள். அவர்களால் சிங்களம் பேச முடியாது. என்னைப் பொறுத்தவரையில் மூன்று மொழிகளிலும் பேச முடியும், தொடர்பாடல்களைச் செய்ய முடியும்.
என்னால் மூன்று சமூகங்களைச் சேர்ந்த மக்களுடனும் அவர்களது மொழியில் தொடர்புகொள்ள முடியும். தமிழ் பேசத்தெரியாத ஆளுநர் நியமிக்கப்பட்டால் அவர்களால் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களால் கிழக்கு மாகாண மக்கள் யுத்தத்தினால் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியாது. அத்தோடு கிழக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பு அவர்களுக்கு தெரியாது. அவர்களால் குறுகிய காலத்தில் மக்களின் பிரச்சினைகளை அறிந்துக் கொள்ளமுடியாது. நான் கிழக்கை சேர்ந்தவன். என்னால் மூன்று மொழிகளிலும் பேசமுடியும். புவியியல் அமைப்பு எனக்குத் தெரியும் . தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடியும்.
இதேவேளை நான் பதவியேற்றுள்ள இந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் ஒருவர் இல்லை. அமைச்சர்கள் இல்லை. சபையொன்று இல்லை. இந்நிலையில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சபையின் அதிகாரங்களைப் பிரயோகித்து என்னால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். இந்த சவால்களை ஏற்றுக் கொண்டு இரவு பகலாக நான் எனது கடமையில் ஈடுபடுவேன். தீர்க்கப்படாத பிரச்சினைகளை இதன் மூலம் விரைவில் தீர்த்து வைக்கமுடியும்.
Q கிழக்கில் தீவிரவாத குழுக்கள் இயங்கி வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. ஒரு புதிய ஆளுநர் என்ற வகையில் இந்தக் குழுக்களால் உருவாக்கப்படும் பிரச்சினைகளை எவ்வாறு கையாளப்போகிறீர்கள்?
நான் இல்லை என்று கூற மாட்டேன். அங்கே அவ்வாறான சில குழுக்கள் உள்ளன. எங்களது சில பிள்ளைகள் தீவிரவாதிகளாக மாறியுள்ளனர். அவர்கள் சமூகத்துடன் இணைந்தவர்களாக இல்லை. எதிர்காலத்தில் பிரச்சினைகளை உருவாக்காது அவர்களை நாம் வழிநடத்துவோம். அவர்கள் நிலைப்பாட்டை புரிந்துகொண்டு பிரதேசத்தில் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்கு ஒத்துழைப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். நாட்டின் நிலைமையை புரிந்துகொள்வதற்கு அவர்களை அறிவுறுத்த வேண்டும். இந்த பணியினை நாம் முன்னெடுப்போம்.
Q ‘எங்கள் பிள்ளைகள்’ என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் -?
எல்லோரும் எனது பிள்ளைகள். அவர்கள் முஸ்லிம் பிள்ளைகள், தமிழ் பிள்ளைகள்.
Q வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் இரண்டு மாகாணங்களிலும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்து தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது. நீங்கள் எந்தக்கருத்தை ஆதரிக்கின்றீர்கள்?
நிச்சயமாக வடக்கு – கிழக்கு இணைப்பை நான் ஆதரிக்கமாட்டேன். உச்ச நீதிமன்றம் இரண்டு மாகாணங்களையும் வெவ்வேறாகப் பிரித்தது. நான் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வேன். வட கிழக்கு இணைப்பை ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன்.
Q கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இந்தியாவின் ஆர்வமும் பங்களிப்பும் பற்றி உங்கள் கருத்து என்ன?
இந்தியா எங்களது அயல்நாடு. அங்கே ஒருதொகை தமிழ் பேசும் மக்களும் இருக்கிறார்கள். இந்தியா எமது அயல்நாடு என்பதால் இந்தியர்கள் எமக்கு உதவி நல்க முன்வந்திருக்கிறார்கள். நான் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் இந்திய உயர் ஸ்தானிகரை சந்திக்கவுள்ளேன். கிழக்குக்கு உதவிகள் நல்குமாறு அவரை வேண்டிககொள்ளவுள்ளேன்.
கிழக்கின் அபிவிருத்திப் பணிகளுக்காக இந்திய அரசாங்கத் திடமிருந்து ஆகக்கூடிய உதவிகளைப் பெற்று ஒன்றிணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன்.
Q முஸ்லிம்களின் அரசியல் வகிபாகம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவு வழங்கினார்கள். பின்பு வேறு கட்சிகளையும் ஆதரித்தார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்பு நிலைமை மாறியது. ஆரம்பத்தில் முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்தார்கள். தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கினார்கள். தற்போது இரு சமூகத்தவர்களும் பல கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். மக்கள் அம்பாறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அக்கட்சி மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நிறைவேற்றத் தவறி விட்டது. அதன்பின்பு மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் சாய்ந்தனர். இந்தக்கட்சியும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாவிட்டால் வேறொரு கட்சியை தெரிவு செய்து கொள்வார்கள். சமூகத்துக்கும் கிராமத்துக்கும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை கட்சிகள் நிறைவேற்ற வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். வாக்குறுதிகள் தமது பிரதிநிதிகளால் நிறைவேற்றப்படாவிட்டால் மக்கள் தங்களது எண்ணங்களை மாற்றிக்கொள்வார்கள்.
Q நீங்கள் ஆளுநராக நியமிக்கப்பட்ட உடனே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உங்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பு பற்றி கூறுங்கள்?
இடம்பெற்ற யுத்தத்தினால் தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். நாங்கள் எந்த அமைச்சுப்பதவிகளையும் பொறுப்பேற்கவில்லை. எதிர்க்கட்சியில் அமர்ந்து எங்களது உரிமைகளுக்காக போராடுவோம் என்றார். எங்களுக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்றார். நான் உங்களை நம்புகிறேன். தயவுசெய்து எங்களது மக்களை கவனித்துக்கொள்ளுங்கள். கடந்த காலங்களில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றார்.
அவர் காணி மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடினார். அனைவருக்கும் சமமாக நேர்மையான முறையில் எனது கடமையைச் செய்வதாக அவருக்கு உறுதியளித்தேன். கடந்த 9 ஆம் திகதி புதன்கிழமை மக்களைச் சந்திக்கும் தினமாகும். அன்று சுமார் 800 பேர் வந்து என்னை சந்தித்தார்கள். அன்று அதிகமான பிரச்சினைகளுக்கு நான் தீர்வு வழங்கினேன். மக்கள் இந்த விடயத்தை சம்பந்தனிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
அநேக மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்வதற்காக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து அவர்களுக்கான உங்கள் உதவிகளைத் தொடருங்கள் என்று சம்பந்தன் கூறினார்.
Q கிழக்கில் தனியான கரையோர மாவட்ட அலகொன்றினை நீங்கள் தொடர்ந்தும் ஆதரிக்கிறீர்களா?
இது ஒரு நியாயமான கோரிக்கையாகும். கரையோர மாவட்ட கோரிக்கை தமிழ் மொழி பேசும் மக்களின் கோரிக்கையாகும். தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவரும் தமது தேவைகளுக்கு அம்பாறை மாவட்ட செயலகத்துக்கே செல்ல வேண்டியுள்ளது. அங்கே அனைத்து கடமைகளும் சிங்கள மொழியிலேயே நடைபெறுகின்றன. அம்பாறை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அதிகாரிகளினால் தமிழில் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாதுள்ளது. அவர்கள் சிங்களத்திலேயே பேசுகிறார்கள். சிங்கள மொழியிலேயே கடமையாற்றுகிறார்கள்.
எமது தலைவர் அஷ்ரப் கரையோர பிரதேசங்களில் தமிழில் கடமையாற்றும் நிர்வாக அலகொன்றையே கோரினார். அதன் அதிகாரி முஸ்லிமாக அல்லது தமிழராக இருக்கலாம். அதிகாரிகள் தமிழில் பேசி மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென விரும்பினார். கடந்த 30 வருடங்களாக இங்கு சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டார்கள்.
Q பிரச்சினைகளை மூன்றே மூன்று மாதங்களில் எவ்வாறு தீர்க்க முடியும்?
80 வீதமான பிரச்சினைகள் நியாயமானவை. ஊழியர் ஒருவர் பொத்துவிலிலிருந்து புல்மோட்டைக்கு இடமாற்றப்படுகிறார். இந்த இடமாற்றத்துக்கு எந்தவித காரணமும் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் கஷ்டப் பிரதேசத்தில் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக இடமாற்றப்படுவதென்றால் பொத்துவிலில் கஷ்ட பிரதேசங்கள் இருக்கின்றன.
முறைமை சீராக இல்லை. நிலுவையிலுள்ள அனைத்து முறைமைசார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படி பொறுப்பான அதிகாரிக்கு தெரிவித்திருக்கிறேன். பெப்ரவரி 28 ஆம் திகதிவரை காலக்கெடு வழங்கியுள்ளேன். மார்ச் 1 ஆம் திகதி முதல் நான் புதிய ஒழுங்கு முறையினை ஆரம்பிக்கவுள்ளேன். அதிகாரிகள் தமது கடமைகளைச் சிறப்பாக செய்வார்கள். நான் ஒரு நாள் ஆளுநரல்ல. நான் முழு நேர ஆளுநர்.
Q முறையற்ற இடமாற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஆளுநருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளுவீர்கள்?
இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாக எனக்குக் கூறப்பட்டது. இதற்கென நான் தனியான குழு ஒன்றினை நியமித்துள்ளேன். இரு வாரங்களில் இது தொடர்பான அறிக்கையொன்றினை எனக்குச் சமர்ப்பிக்கும்படி குறிப்பிட்ட குழுவைக் கோரியுள்ளேன்.
Q கிழக்கில் சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் எவ்வாறு செயற்படுவீர்கள்?
இந்த விவகாரம் பற்றி நான் இதுவரை தேவையான தகவல்களைத் திரட்டிக் கொள்ளவில்லை. அதனால் கருத்து கூறமுடியாது. பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பிறகு கலந்துரையாடலாம்.
Q கிழக்கில் நீண்டகாலமாக தீவிரமடைந் துள்ள காணி பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பீர்கள்?
காணிப் பிரச்சினைகள் அதிகமாக இங்கு உள்ளன. எல்லைகள் தொடர்பிலே அதிகமான பிரச்சினைகள் உருவாகியுள்னன. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆளுநர் நடமாடும் சேவையொன்று அறிமுகப்படுத்தப்படும்.
Q காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கையாள்வீர்களா?
காணி அதிகாரங்களை 13 ஆம் திருத்த சட்டத்தின் கீழ் நான் முழுமையாக கையாள்வேன். எவராவது என்னை தடுத்தால் நான் நீதிமன்றுக்குச் செல்வேன். அரசியலமைப்பின் மூலம் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவரும் என்னைத் தடுக்க முடியாது.
Q நீங்கள் அமைச்சர் பதவியில் சரியாக கடமையாற்றாததனாலேயே ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது உண்மையா?
இல்லை இல்லை நான் மிகவும் திறமையாக செயற்பட்ட நல்லவோர் அமைச்சர். நான் ஒரு பணி செய்ய வேண்டும் நான் திறமையானவன் என நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே எனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தேன்.
நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் ஓர் ஆளுநர் பதவியை மாத்திரம் பெற்றுக்கொள்ளவில்லை. எனது தொகுதியிலிருந்து இராஜினாமா செய்துள்ளேன். கிழக்கில் ஒரு சபையில்லை, முதலமைச்சர் ஒருவர் இல்லை. அதனால் கிழக்குக்கு சென்று நான் சேவையாற்ற வேண்டும்.
மக்கள் எனது நியமனத்தை எதிர்ப்பார்கள் என்று நான் அறிவேன். நீங்கள் பிரச்சினை ஒன்றினை உருவாக்கினாலே உங்களால் அதற்கான தீர்வினை தேடிக்கொள்ளமுடியும்.
நன்றி: சிலோன் டுடே.
-Vidivelli
மாண்புமிகு எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஆளுநராக நியமனம்பெற்றதும் தமிழர் தலைவர் சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியமை வரலாற்று முக்கியத்துவமுள்ள நகர்வாகும். மிகக்குறுகிய காலத்தில் தமிழர் மத்தியில் எதிர்ப்பு குறைந்துள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும். ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.