- ஏ.ஆர்.ஏ. பரீல்
இவ்வருடம் இலங்கைக்கான ஹஜ் கோட்டா 500 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ள அதேவேளை, சவூதி அரேபியாவில் ஹஜ் ஏற்பாடுகளுக்கான கட்டணங்கள் 5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியும் கிடைக்கப்பெற்றுள்ளது.
அத்தோடு சவூதி அரேபியா வற்(VAT) வரியையும் 5 வீதமாக அதிகரித்துள்ளது என்ற தகவல்கள் ஹஜ் விண்ணப்பதாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளதுடன் அசௌகரியங்களுக்குள்ளாக்கியுள்ளன. கடந்த 14 ஆம் திகதி சவூதி அரேபியா ஜித்தாவில் சவூதி அரேபிய ஹஜ், அமைச்சருக்கும், இலங்கையின் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலைமையிலான குழுவினருக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஹஜ் முஸ்லிம்களின் இறுதிக் கடமையாகும். பொருளாதார வளமும், உடல் ஆரோக்கியமுமுள்ள ஒவ்வொரு முஸ்லிம் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அரச ஹஜ் குழு மற்றும் ஹஜ் முகவர்கள் ஆகிய தரப்புகள் ஒன்றிணைந்தே ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுக்கின்றன. ஒவ்வொரு வருடமும் சவூதி ஹஜ் அமைச்சினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஹஜ் கோட்டா முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
2015 ஆம் ஆண்டில் புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டதும் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கென தனியான ஓர் அமைச்சு ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். முஸ்லிம் சமய விவகார அமைச்சராக எம்.எச்.ஏ. ஹலீம் நியமிக்கப்பட்டார். அவரால் ஹஜ் கோட்டா பகிர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஹஜ் யாத்திரிகர்களின் நலன் கருதியே இம்மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஹஜ் யாத்திரிகர்களுக்கு தாம் விரும்பும் ஹஜ் முகவர்களைத் தெரிவு செய்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர்களின் பெயர், விபரங்கள், அவர்களது ஹஜ் கட்டணங்கள் என்பன பத்திரிகைகள் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டன. இந்தப் பணிகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டது. இதனால் கட்டணம் அறவிடல் மற்றும் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் ஹஜ் முகவர்களிடையே போட்டியேற்பட்டது. ஹஜ் கட்டணங்களிலும் வீழ்ச்சியேற்பட்டது.
சிறந்த சேவைகளை வழங்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஹஜ் முகவர்களை நாடியே ஹஜ் விண்ணப்பதாரிகள் சென்றனர். ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சில விதிமுறைகளை வழங்கியிருந்தது. நீதிமன்றம் வழங்கிய ஹஜ் வழிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக ஹஜ் முகவர்கள் சிலர் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர். ஹஜ் கோட்டாவை பழைய முறைப்படியே பகிர்ந்தளிக்கும் படி உத்தரவிடும்படியே நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாலும் புதிய முறையிலான கோட்டா பகிர்வு முறையே தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வருடம் இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா சவூதி ஹஜ் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமும், சவூதி ஹஜ் அமைச்சரும் சவூதியில் கையொப்பமிட்டுள்ளனர். சவூதி அரேபியா ஒவ்வொரு நாட்டினதும் முஸ்லிம் சனத் தொகைக்கேற்பவே ஹஜ் கோட்டாவை ஒதுக்குகிறது. இதன் அடிப்படையில் சில வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு 2240 ஹஜ் கோட்டாவே வழங்கப்பட்டது. என்றாலும் கடந்த வருடம் சவூதி மன்னரின் அங்கீகாரத்துடன் இலங்கைக்கு 2800 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டது. இவ்வருடம் 3000 ஹஜ் கோட்டா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் ஹலீம் சவூதி ஹஜ் அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளினையடுத்து ஹஜ் கோட்டா 3500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு விண்ணப்பித்தவர்களில் அநேகர் ஹஜ் கடமையில் ஆர்வமற்றவர்களாக இருப்பதாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் தெரிவித்துள்ளார்.
3000 ஹஜ் விண்ணப்பதாரிகள் தங்களது பயணத்தை, மீள கையளிக்கத்தக்க பதிவுக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி உறுதி செய்யுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வேண்டப்பட்டார்கள். அதற்கான கடிதங்களும் திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்பட்டன. உறுதி செய்வதற்கு கால எல்லை வழங்கப்பட்டது. ஆனால் 3000 விண்ணப்பதாரிகளில் சுமார் 700 பேரே தங்களது பயணத்தை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஹஜ் யாத்திரைக்காக விண்ணப்பித்து விட்டு ஏன் அவர்கள் பயணத்தை உறுதி செய்யவில்லை என்பதை அரச ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கண்டறிய வேண்டும்.
2018 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தை மீள கையளிக்கத்தக்க பதிவுக்கட்டணம் 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி உறுதி செய்து கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் 700 பேர் காத்திருக்கிறார்கள். தங்களது பயணத்தை மீண்டும் உறுதி செய்யுமாறு அவர்களும் வேண்டப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திணைக்களம் ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்த நிலுவையிலுள்ள அனைவருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது. 25 ஆயிரம் ரூபா பதிவுக்கட்டணத்தைச் செலுத்தி பயணத்தை உறுதி செய்யும் படி அவர்கள் வேண்டப்பட்டுள்ளனர். 4000 விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்பு பயணத்தை உறுதி செய்யுமாறு திணைக்களம் கோரியுள்ளது.
ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்தவர்கள் தங்களது பயணத்தை உறுதி செய்வதில் இவ்வாறு தயக்கம் காட்டுவதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை திணைக்களம் கண்டறிய வேண்டும். திணைக்களம் தற்போது யாத்திரிகர்களைத் தெரிவு செய்யும் முறைமையில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
ஹஜ் கடமைக்காக சிரமம்பாராது ஆர்வமுடன் விண்ணப்பித்தவர்கள் தங்கள் பயணத்தை உறுதி செய்வதில் அக்கறையின்றி இருக்கிறார்கள். என்றால் இதன் பின்னணியில் நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும்.
25 ஆயிரம் ரூபா பதிவுக்கட்டணம் செலுத்துவது இறுதி நேரத்தில் ஹஜ் வாய்ப்பு கிட்டாமல் போகலாம் என்ற அச்சம் அதிகரித்த ஹஜ் கட்டணம், ஹஜ் முகவர்கள் மீதான நம்பிக்கையின்மை என்பன காரணமாக இருக்கலாம். இதேவேளை ஹஜ் கோட்டா பகிர்வில் அரசியல் செல்வாக்கு செலுத்தப்படுவதாகவும் ஹஜ் முகவர்கள் சிலர் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
ஹஜ் விஷேட சட்டம்
ஹஜ் யாத்திரிகர்களின் நலன் கருதியும், ஹஜ் முகவர்களின் ஊழல்களைத் தடுப்பதற்காகவும் அமைச்சர் ஹலீம் ஹஜ் சட்ட மூலமொன்றினை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்தச்சட்ட வரைபு ஹஜ் முகவர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் பொது மக்களின் கருத்துகளையும் உள்ளடக்கியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்ட மூலமொன்றினை இயற்றுவதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இச்சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றிக் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்பட்டால் ஹஜ் ஏற்பாடுகளில் நிலவும் அரசியல் தலையீடு மற்றும் சில ஹஜ் முகவர்களின் செல்வாக்கு என்பனவற்றுக்கு முடிவு கட்ட முடியும்
வரிகள் அதிகரிப்பு
கடந்த 14 ஆம் திகதி சவூதி அரேபியா ஜித்தாவில் இடம்பெற்ற அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் சவூதி ஹஜ் அமைச்சருக்கிடையிலான கலந்துரையாடலின் போது சவூதி அரேபியாவில் ஹஜ்ஜாஜிகளின் போக்குவரத்துக்காக அறவிடப்படும் கட்டணம் ஒருவருக்கு 1029 சவூதி ரியாலிலிருந்து 1449 சவூதி ரியாலாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 5 வீத வற் வரியும் மேலதிகமாக அறவிடப்படவுள்ளது. இது ஜித்தா, மக்கா, மதீனா, அரபா, முஸ்தலிபா, மினா, ஜித்தாவுக்கிடையிலான போக்குவரத்து கட்டணமாகும்.
அத்தோடு முஅல்லிம் கட்டணமும் இவ்வருடம் 5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக 5 வீதம் வற் வரியும் அறவிடப்படவுள்ளது. ஹஜ்ஜாஜிகள் மினாவில் தங்குவதற்கு இரண்டு தட்டு கட்டிலுக்கென தலா ஒருவருக்கு 180 ரியால்கள் அறவிடப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாக வற் வரியும் அறவிடப்படவுள்ளது. சவூதி அரேபியாவில் இவ்வாறு வரிகள் அறவிடப்படவுள்ளமை நிச்சயமாக ஹஜ் கட்டணத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். அத்தோடு தற்போது இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்து அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்திருக்கிறது.
2018 ஆம் ஆண்டு ஹஜ் காலகட்டத்தில் ஒரு அமெரிக்க டொலரை கொள்வனவு செய்ய 142 ரூபாய்களே செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இன்று 180 ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான நெருக்கடியான காலகட்டத்தில் இவ்வருடம் ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் ஹஜ் பயணத்துக்காக கூடிய கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளதால் விமான டிக்கட்டுகளுக்கும் கடந்த வருடங்களை விட கூடுதலான தொகையைச் செலுத்த வேண்டியுள்ளது.
இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு 92 முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நேர்முகப்பரீட்சையொன்று நடத்தப்பட்டே இத்தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.
ஹஜ் கட்டணம்
இவ்வாறான சூழ்நிலை யில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஹஜ் கட்டணமொன்றை நிர்ணயிப்பதுடன் வழங்கப்பட வேண்டிய சேவைகளையும் குறிப்பிட்டு ஹஜ் முகவர்களுடன் ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுக் கொள்ள வேண்டும்.
கட்டணங்கள் சாதாரண சேவை, விஐபி (VIP) சேவை என தரப்படுத்தப்பட்டு அதற்கேற்றவாறு நிர்ணயிக்கப்படலாம்.
அத்தோடு முதற் தடவையாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கும், வயது முதிர்ந்த யாத்திரிகர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
ஹஜ் முகவர்கள் ஹஜ் ஏற்பாடுகளை ஒரு புனித பணியாக முன்னெடுக்க வேண்டுமேயன்றி வர்த்தக நோக்கோடு இலாப மீட்டும் தொழிலாக மேற்கொள்ளக் கூடாது.
-Vidivelli