மதீனாவிலுள்ள புனித பள்ளிவாசலின் முன்னணி இமாமும் பிரசாரகருமான மார்க்க அறிஞர் ஒருவர் மிக மோசமான சூழ்நிலையில் சிறைவைக்கப்பட்டிருந்ததன் காரணமாக உயிரிழந்ததாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மதீனாவில் அமைந்துள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் குர்ஆன் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதியான ஷெய்க் அஹமட் அல்-அமாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமானார். அவர் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் அவர் மரணித்துள்ளதாக சவூதி அரேபிய பிரசாரகர்கள் மற்றும் மார்க்க அறிஞர்களின் கைது தொடர்பில் கண்காணித்து ஆவணமாக்கலில் ஈடுபட்டுள்ள சமூக வலைத்தள பிரசாரக் குழுமமான ‘மனச்சாட்சியுள்ள கைதிகள் அமைப்பு’ தெரிவித்துள்ளது.
வேண்டுமென்றே கவனிக்காமல் விட்டமையே 69 வயதான நபரின் மரணத்திற்கு காரணமாக அமைந்ததாக அக் குழுமம் சவூதி அரேபிய சிறை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளது.
ஷெய்க் அஹமட் அல்-அமாரியின் நெருங்கிய சகாக்களில் ஒருவரும் முஸ்லிம் அறிஞருமான சபார் அல்-ஹவாலி மீதான நடவடிக்கையின் போது கடந்த ஆகஸ்ட் மாதம் அல்-அமாரி தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என லண்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பொன்றின் பணிப்பாளரான யஹ்யா அஸ்ஸிரி தெரிவித்தார்.
-Vidivelli