250 ரோஹிங்ய ஆண்களை பங்களாதேஷுக்கு அனுப்பி வைக்க சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளதாகவும் இது இந்த ஆண்டின் இரண்டாவது வெளியேற்றமாகும் எனவும் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.
அவர்கள் பங்களாதேஷை சென்றடைந்ததும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ள ரோஹிங்ய சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசார இணைப்பாளரான நேய் சான்ல்வின் இவ்வாறு நாடுகடத்தும் செயற்பாட்டை நிறுத்துமாறும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சவூதி அரேபியா மூன்று இலட்சம் ரோஹிங்ய அகதிகளுக்கு புகலிடம் வழங்கியுள்ளது.
பெரும்பாலான ரோஹிங்யர்கள் குடிவாழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றிருக்கின்றார்கள். அவர்களால் சட்டபூர்வமாக சவூதி அரேபியாவில் வசிக்க முடியும் எனவும் நேய் சான்ல்வின் தெரிவித்தார்.
எனினும், ஜித்தாவிலுள்ள ஷுமையிஸியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சக ரோஹிங்ய மக்களைப் போன்று நடத்தப்படுவதில்லை. மாறாக குற்றவாளிகள் போலவே நடத்தப்படுகின்றனர்.
நேய் சான்ல்வினுக்குக் கிடைத்துள்ள காணொலியொன்றிற்கு அமைவாக இந்த ரோஹிங்யர்கள் பலர் பல ஆண்டுகளுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு வந்து சேர்ந்தவர்கள். கடந்த ஞாயிறுக்கிழமை டாக்காவுக்கான நேரடி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதற்காக ஜித்தா சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை மாலை பங்களாதேஷிற்கு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரோஹிங்ய அடையாளம் ஏற்றுக் கொள்ளப்படாததால் அவர்கள் சவூதி அரேபியாவுக்கு வந்தபோது இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பங்களாதேஷ், நேபாள நாட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே விரல் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் நேய் சான்ல்வின் விபரித்தார்.
மியன்மார் ரோஹிங்ய மக்களின் குடியுரிமையினை 1982 ஆம் ஆண்டு பறித்து அவர்களை நாடற்றவர்களாக மாற்றியது.
-Vidivelli