பூச்சியத்தை விடவும் குறைந்த குளிர் மற்றும் மருத்துவ வசதியின்மை ஆகியவற்றினால் சிரியாவில் குறைந்தது 15 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.
உறையவைக்கும் குளிர் காரணமாக சிரிய – ஜோர்தான் எல்லையில் அமைந்துள்ள ருக்பான் முகாமில் எட்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான முகவரகமான யுனிசெப் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். அமைப்பிற்கும், அமெரிக்க ஆதரவுடன் செயற்பட்டு வரும் சிரிய ஜனநாயகப் படைக்கும் இடையே வடகிழக்கு நகரான ஹாஜினில் நடைபெறும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்திருந்த நிலையில் மேலும் ஏழு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
உறைய வைக்கும் குளிர் மற்றும் மிக மோசமான வாழும் சூழல் என்பன சிறுவர்களுக்கு உயிராபத்தான நிலையினைத் தோற்றுவித்துள்ளதென யுனிசெப் அமைப்பின் பிராந்தியப் பணிப்பாளர் கீர்ட் கெப்பலாயிரே தெரிவித்தார்.
ஒரு மாதத்தில மாத்திரம் குறைந்தது எட்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் பெரும்பாலானவர்கள் நான்கு வயதிற்கும் குறைவானவர்கள். இவர்களுள் பிறந்து ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த குழந்தை ஒன்றும் அடங்கும்.
சிரியாவுக்கும் ஜோர்தானுக்கும் இடைப்பட சூனியப் பிரதேசத்தில் ருக்பான் பகுதி அமைந்துள்ளது இங்கு யாரும் சென்றடைய முடியாத நிலை காணப்படுகின்றது.
அப் பகுதியின் மொத்த 45,000 சனத்தொகையில் எண்பது வீதமானவர்கள் பெண்களும் சிறுவர்களுமாவர். இப்பகுதியில் சிசு மரண வீதம் அதிகமாகக் காணப்படுவதாகவும் கெப்பலாயிரே தெரிவித்தார்.
சிரியாவில் கிளர்ச்சிக்காரர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற இடங்களிலிருந்து அவர்களை விரட்டியடிப்பதற்காக வடக்கில் ஐ.எஸ். அமைப்பிற்கும் சிரிய ஜனநாயகப் படைக்கும் இடையே இடம்பெறும் கடுமையான மோதல்கள் காரணமாக சுமார் 10,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்காகவும், அமெரிக்க விமானத் தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் கடும் மழையினை ஏற்படுத்திய திடீரென உருவான குளிரான காலநிலை மற்றும் பனிப்பொழிவினிடயே தப்பியோட வேண்டியிருந்தது.
மோல் பிரதேசங்களிலிருந்து தப்பிச்சென்று பாதுகாப்புத் தேடிய குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தன. பல நாட்களாக தங்குதவதற்கு இடமோ அடிப்படை வசதிகளோ இன்றி காத்திருக்க வேண்டியேற்பட்டது.
பயங்கரமானதும், கஷ்டங்கள் நிறைந்ததுமான பயணமே ஹாஜின் பகுதியில் ஏழு சிறுவர்கள் உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்திருந்தது. அவர்களுள் பெரும்பாலானவர்கள் ஒரு வயதிற்கும் குறைந்த குழந்தைகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.எஸ். கிளர்ச்சிக்காரர்களும் அவர்களது குடும்பத்தினரும் இடம்பெயர்ந்த மக்களோடு ஒன்று கலக்க முயற்சிப்பதாக சிரிய ஜனநாயகப் படை தெரிவித்துள்ளது.
அண்டை நாடான லெபனானில் ஆயிரக்கணக்கான சிரிய அகதிகள் கடந்த வாரம் ஏற்பட்ட நோர்மா புயல் காரணமாக பாதிக்கப்பட்டனர். நோர்மா புயல் முறையற்ற விதத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களை வெள்ளத்தில் மூழ்கடித்ததோடு, ஏனைய இடங்கள் பனியால் மூடப்பட்டன.
பெருக்கெடுத்த ஆற்றில் விழுந்ததன் காரணமாக எட்டு வயதுச் சிறுமியொருவர் உயிரிழந்தார்.
உதவி வழங்கும் அமைப்புக்களின் குழுமமான மருத்துவப் பராமரிப்பு மற்றும் சர்வதேச நிவாரண அமைப்புக்களின் ஒன்றியம் புயல் காரணமாக லெபனானில் உள்ள 250,000 சிரிய அகதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மதிப்பீடு செய்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்கிழமை இரவு மிரியம் எனும் புயல் தாக்கவுள்ளதாக முன்னெச்செரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-VIdivelli