கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதான ஏழு சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடிக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை குறித்த 7 சந்தேக நபர்களும் கண்டி – வெலம்பொட பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சிலை உடைப்புக்கள் மற்றும் குருணாகல் – பொத்துஹரையில் இடம்பெற்ற சிலை உடைப்புக்களுடன் தொடர்புபட்டுள்ள குற்றச்சாட்டிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த சிலை உடைப்பு சம்பவங்களின் பிரதான சந்தேக நபர்களாக கருதப்படும் சகோதரர்களான இருவர் தொடர்ந்தும் தலைமறைவாகவுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்ய பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் பொலிஸ் உளவுத்துறையின் உதவியுடன் தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
மேற்படி 7 சந்தேக நபர்களும் கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli