குமார் சங்கக்கார சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே என்னிடம் கலந்துரையாடினார். மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் குமார் சங்கக்காரவுக்கும் தனக்குமிடையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றும் வெறும் 10 நிமிடங்கள் மாத்திரமே இருவரும் கலந்துரையாடியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் குமார் சங்கக்காரவுக்கு இடையில் இரண்டு மணிநேர பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
நேற்று புதன்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
குமார் சங்கக்காரவுக்கும் எனக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது உண்மை. ஆனால் அவ்வாறான கலந்துரையாடல்கள் இயல்பானதே. வழமையாக இடம்பெறும் சாதாரண கலந்துரையாடலாகவே அது அமைந்திருந்தது. 2 மணி நேரம் கலந்தரையாடவில்லை. 10 நிமிடங்கள் மாத்திரமே கலந்துரையாடினோம்.
தற்போதைய சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பாகவே குமார் சங்கக்கார என்னிடம் வினவியிருந்தார். “இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசியல் தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், இந்த வருடம் தேர்தலுக்குரிய காலப்பகுதி ஆகையால் இந்தப் பிரச்சினைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றோம். ஆகவே இது இந்தப் பிரச்சினைகளுக்குத் தற்போதைய நிலைமைகளில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, புதிய அரசாங்மொன்று உருவாக்கப்பட்டதன் பின்னர் சுகாதார வேலைத்திட்டகளில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்போம்” என்றே அவருக்கு நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.
குமார் சங்கக்காரவை போன்று அனைத்து துறைசார்ந்தவர்களும் என்னுடன் கலந்துரையாடுவார்கள். இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி வேட்பானர் குறித்து எந்தவிதக் கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. குமார் சங்கக்காரவுக்கும் ஜனாதிபதியாகும் விருப்பமும் இல்லை. விளையாட்டுத்துறையில் ஒருவரிடம் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பேசவதற்கான தேவை எதுவும் இல்லை. அரசியலில் உள்ளவர்களிடமே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடுவது சிறந்ததாக அமையும் என்றார்.
-Vidivelli