முஸ்லிம் அலகு முதல் கிழக்கு ஆளுநர் வரை

0 812
  • ஜுனைட் நளீமி

கிழக்கு ஆளுநர் நியமனத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட    ஹர்த்தால் கடையடைப்பு வெற்றியளிக்காத நிலையில் கிழக்கில் அண்மைக்காலமாக வேகம் பெற்றுவரும் இனத்துவ முறுகல்  நிலை குறித்து சிறுபான்மை இனங்கள் சிந்திக்கவேண்டிய காலப்பகுதிக்குள் தள்ளப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் பெரும்பான்மையின் அடக்குமுறைகளுக்கு எதிராக தன்னுடன் ஒன்றித்துப் போராடிய சமூகத்தின் மீதே தமிழ் ஆயுதக் குழுக்கள் தமது துப்பாக்கிகளை நீட்டின. இதனால் முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையுடன் விரும்பியோ விரும்பாமலோ ஒன்றித்துப் போகவேண்டிய சூழலை ஏற்பட்டது. தமிழினத்தின் ஆயுதப்போராட்டம் முடிவுறும்வரை பகடைக்காயாக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது யுத்தத்திற்குப் பின்னரான இனச்சுத்திகரிப்பு அடக்குமுறை அவ்வப்போது வலிமைபெற்றுச் செல்வதனை அவதானிக்க முடியும்.

கடந்த காலங்களில் இரு பெரும்பான்மை கட்சிகளும் தமது வாக்கு வங்கியினையும் ஆட்சிக் கதிரையினையும் தமிழ் சகோதர இனத்தின் மீதான அச்ச நிலையினையும் போராட்டக்குழுக்களின் தாக்குதல் விளைவுகளையும் மூலதனமாக வைத்து தெற்கில் அரசியல் செய்ய முற்பட்டனர். யுத்தத்திற்குப் பின்னரான முள்ளிவாய்க்கால் துன்பியல் நிகழ்வின்பின் தமக்கான தேர்தல் பிரசாரங்களுக்கான பேசுபொருளாக முஸ்லிம்கள் மீதான இனவெறியினையும் போலியான பிரசாரங்களையும் முன்னெடுத்து செல்கின்றனர். இத்தகைய உள்ளக ஆட்சி அதிகாரப்போட்டியினை  சாதகமாகப் பயன்படுத்தி பிராந்திய வல்லாதிக்க சக்திகள் தமது காலூன்றலுக்குத் தேவையான மறைமுக நிகழ்ச்சித்திட்டங்களையும் அரங்கேற்றி வருகின்றன.

சிங்கள தேசியவாத எண்ணக்கருவும் சிறுபான்மையும்

யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் தமிழ் சமூகம் முற்றிலும் தோல்வி மனப்பான்மையில் சரணாகதி மனோநிலையில் வாழ்ந்துவருகிறது. தமிழீழ தாயகப்பகுதிகளில் பெரும்பான்மை சமூகங்களின் திட்டமிட்ட செயற்கையான சனத்தொகை பரம்பல் அதிகரிப்பு, தொடரும் அதியுயர் பாதுகாப்பு வலய காணிப்பிரச்சினை, முப்படையினருக்குமான இராணுவ முகாம்களின் பேரில்  மேற்கொள்ளப்பட்ட காணி அபகரிப்புக்கள், புதிதாக முளைவிட்ட பௌத்த வழிபாட்டுத்தலங்கள் என்பன தமிழ் மக்களின் மனதில் நீறுபூத்த நெருப்பாக எரிந்துகொண்டிருந்தாலும் புலிகளுக்குப் பின்னரான தாயகப்பகுதிகளில் இவற்றினை எதிர்த்துக் குரல்கொடுக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மாத்த்திரமே காணப்பட்டது.

சர்வதேச அரங்கில் புலிகளுக்குப் பின்னரான தமிழர்கள் மீதான அனுதாப அலைகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக அரசியல் நீரோட்டமும் இலங்கை அரசு மீது தீர்வு முயற்சிக்கான அழுத்தங்களை பிரயோகித்ததுடன் பேரினவாத சிந்தனைகொண்ட அரசுகளுக்குத் தலையிடியாகவும் அமைந்தது. எனவே இவற்றினை வெற்றிகொள்ள  இரண்டு வழிமுறைகள் பிரயோகிக்கப்பட்டன.

  1. ஆயுத ரீதியாக தமிழர் போராட்டத்தினை பலவீனப்படுத்தியதுபோன்று அரசியல் ரீதியாகவும் பலவீனப்படுத்தல்.
  2. சர்தேச பார்வையில் தொடர்ந்தும் இலங்கையை அமைதியற்ற ஒரு நாடாக காண்பித்தல்.

முதலாவது வழிமுறையினை நிறைவேற்ற நிகழ்ச்சி நிரல்கள் நகர்த்தப்பட்டன. கருணா அம்மான் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உருவாக்கப்பட்டது. கிழக்கில் அக்கட்சி பலம்பெறுமென அஞ்சி கருணா – பிள்ளையானுக்கிடையிலான பிளவுகள் ஏற்படுத்தப்பட்டு கிழக்கு மக்களின் பலம் குறைக்கப்பட்டது. இதன் விளைவாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கிழக்கு அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டது. மறுபுறம் பெரும்பான்மை கட்சிகள் தமது உறங்கு கலங்களான தமது ஆதரவாளர்களை இயங்கு நிலைக்கு தயார்படுத்தலை மேற்கொண்டன.

வடக்கில் ஈபிடிபி, ஆனந்த சங்கரி போன்றவர்களுக்கு பெரும்பான்மை அரசுகள் வழங்கிய அந்தஸ்தும் சலுகைகளும் அபிவிருத்தி அரசியல் குறித்து தமிழ் மக்களின் எண்ணங்களை திசைதிருப்பியது. உரிமை, தீர்வு என்ற கோஷங்களுக்கப்பால் நினைவேந்தல் நிகழ்வுகளையாவது செய்யமுடியவில்லை என்ற ஆதங்கம், திட்டமிட்ட குடியேற்ற நிகழ்வுகள் மீதான எரிச்சல் என்பன தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கையாலாகாத்தனமாக பிரஸ்தாபிக்கப்பட்டது.

மாற்றீடு அரசியல் என்ற கோஷம் வலுப்பெற்று மீண்டும் டயஸ்போராவின் கண்காணிப்பில் விக்கி தலைமையிலான அரசியல் கட்சியாக பரிணாமம் பெறுகின்றது. மர்ஹூம் அஷ்ரபுக்கு பின்னரான  முஸ்லிம் கட்சிகள் கட்சியைப் பாதுகாப்பதா? உரிமைக்காக குரல்கொடுப்பதா? என்ற தேர்வுநிலைப் போராட்டத்தில் சிக்கி சீரழிந்ததுபோல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் புதிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டியேற்பட்டது. எனவேதான், தமது வல்லாதிக்கத்தினை நிறுவ நல்லாட்சி என்ற அரசில் மறைகரமாக செயற்படவேண்டி ஏற்பட்டது.

இதன் விளைவு தமிழ்மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் வாக்குவங்கியில் சரிவினை ஏற்படுத்தி இருப்பதனை நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கின்றன. இந்தவகையில் தமிழர் போராட்டத்தை மழுங்கடிப்புச் செய்து பெரும்பான்மை அதில் வெற்றி கண்டுள்ளது. குறைந்தது இணைந்த வடகிழக்கில் சமஷ்டி ஆட்சி முறைமை என்ற கோஷம் கிழக்கு கிழக்காவே இருக்கட்டும் என்ற கிழக்கு பெரும்பான்மை தமிழர் கோஷமாக மேலெழ ஆரம்பித்துள்ளது. வடக்குக்கு நாம் அடிமை இல்லை என்ற கோஷம் கொண்டே பிள்ளையான் தலைமையிலான கட்சி மாகாணத்தில் முதலமைச்சர் கதிரையினை பெற்றுக்கொண்டது. இன்று வரை கருணா அம்மான் தலைமையிலான ஸ்ரீலங்கா தமிழ் மக்கள் சுதந்திரக் கட்சிகூட பிரிந்த கிழக்கில் தமிழர் அதிகாரம் என்ற கோஷத்தில் பயணிப்பதனை  காணமுடியும்.

தமிழீழ தாயக பூமியில் தமிழ் சகோதர இனத்துடன் பேச்சுவார்த்தை மூலம் ஒன்றித்து வாழ வேண்டுமென்ற அரசியல் சிந்தனையே  தந்தை செல்வா காலப்பகுதி தொடக்கம் முஸ்லிம் அரசியலில் காணப்பட்டு வருகின்றது. மர்ஹூம் அஷ்ரப்  இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார அலகு குறித்தே பேசிவந்துள்ளார். அரசு – புலிகள் பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனோடு மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் தரப்பின் ஒப்பந்த முயற்சி மத்திய பெரும்பான்மை அரசின் அச்சத்திற்கு ஆட்பட்டது. எதிர்காலத்தில் மீண்டும் இரு சமூகங்களும் பழையன மறந்து கைகோர்ப்பதன் விளைவு தனிநாட்டு கோரிக்கைக்கு வழிசமைக்கும் என்று எண்ணியதன் விளைவாக முஸ்லிம் கட்சிகளை பிரித்து பலவீனப்படுத்தி பேரினவாத கட்சிகளில் கரைந்துபோக நிகழ்ச்சி நிரல்களை மேற்கொண்டன.

அதில் வெற்றியும்கண்டு முஸ்லிம் கட்சிகள் தமது அடையாளம் மறந்து பேரினவாத கட்சிகளின் தரகர்களாக அவ்வக்கட்சிகளின் பிரதிநிதிகளாகவே பாராளுமன்றம் நுழையவேண்டி ஏற்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட வகையில் சிறுபான்மையினை பலவீனப்படுத்தியது போன்று சர்வதேசத்தின் பார்வையினை உள்ளக அவசரகால நிலையில் வைத்துக்கொள்வதான நாடகத்தை அரங்கேற்றவேண்டிய தேவை காணப்பட்டது. கிரீஸ் மனிதன் தொடக்கம் திகன கலவரம் வரை ஆட்சிமாற்றத்திற்கான துரும்பாக பயன்படுத்தியதுபோன்று சர்வதேசத்தின் பார்வையை வேறு ஒரு பக்கம் திருப்பிவிடுவதற்கான திட்டமிட்ட  நிகழ்ச்சி நிரலாக அமைந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம்

நாட்டினை அவசரகால சூழ்நிலையில் வைத்துக்கொள்ளவும் முன்னாள் போராளிகளை அரசியல் கைதிகளாக தொடர்ந்தும் தடுத்து வைத்துக்கொள்ளவும் இராணுவ நோக்கில் அவசியம் என்பதுபோல் தேசிய அரசியலில் சர்வதேச அழுத்தங்களை தவிர்ந்துகொள்வதற்கும் புலிகளின் மீளுருவாக்கம் இன்றியமையாத ஒன்றாக அமைகின்றது. தென்னிலங்கை அரசியலில் புலிகள் மீளுருவாக்க செய்தியானது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது. கடந்த வருடம் முல்லைத்தீவில் இராணுவ வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம், மாவீரர் தினமன்று மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார்மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் என்பன   சோர்விழந்த தமிழ் சமூகத்திற்கு புத்துயிரளிப்பதாக எண்ணத்தோன்றினாலும் இலங்கை இனப்பிரச்சினை தீர்வினை பின்தள்ளுவதற்கான மறைகரம் என்பதனை தமிழ்மக்கள் எண்ணத்தவறியுள்ளனர்  என மூத்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கின்றார்.

அதேபோன்று யுத்தத்திற்குப் பின்னரான தாயகப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தால்கள், இனவாத செயற்பாடுகள் அனைத்துக்கும் ஏற்பாட்டாளர்களாக, இயங்குநர்களாக தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு சவாலாக அமைந்தவர்கள், போராட்டங்களை காட்டிக்கொடுத்தவர்கள், தமிழ் மக்களால் துரோகிகள் என் முத்திரை குத்தப்பட்டவர்கள், முன்னாள் போராளிகள் என்ற பெயரில் மீட்பர்களாக வலம்வருவது தாயக பூமியில் சிறுபான்மை இனங்கள் விட்டுக்கொடுப்புக்களுக்கு மத்தியில் தீர்வினை பெரும்பான்மை சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு தொடர்ந்தும் தடையாக அமையும்.

அண்மைக்கால முஸ்லிம் – தமிழ் இனமுறுகல்

தேசிய அரசியலில் சிறுபான்மை இனங்களின் போராட்ட ஒழுங்கு தோல்விகண்டு வருகின்ற நிலையில் வடகிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் சிறுபான்மை இனங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு வழிசெய்வதோடு திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல்முறைமாற்றமும் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைப்பதாக அமையும். இந்நிலையானது பாராளுமன்ற சட்டவாக்கத்தில் இலகுவில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பேரினவாத அரசு பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும். மறுமுனையில் சிறுபான்மை சமூகங்கள் இரண்டும் தனக்கு ஒருகண் போனாலும் எதிரிக்கு இரண்டு கண்கள் போகவேண்டும் என்ற மனநிலையில் செயற்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

தேசிய அரசியல் நோக்கில் பெரும்பான்மை கட்சிகள் தமது அரசுகளை அமைத்துக்கொள்வதற்காக முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையும் பௌத்த பேரினவாத அலைகளையும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முற்படுவதுபோன்று வடகிழக்கில் பன்னாட்டு தரகர்களாகவும் பேரினவாத கட்சிகளின் முகவர்களாகவும் செயற்படுபவர்கள் தமது குறுகிய இலாபங்களுக்காக சிறுபான்மை மக்களின் உரிமைகளை நசுக்கிவிட முனைவதனை அவதானிக்க முடிகின்றது.

இதேபோன்று கிழக்கில் துளிர்விட்டுள்ள முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகளுக்குப் பின்னால் தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களே செயற்படுகின்றார்கள் என்பது தெளிவான உண்மையாகும்.

கிழக்கில் அண்மையில் முஸ்லிகள் மீதான தாக்குதலுக்கும், ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு அப்பாவி தமிழ் மக்களை நிர்ப்பந்தித்ததற்கும் பின்னணியில் இவர்களே இருந்தார்கள் என்பது ஊடக செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.

முஸ்லிம் மாகாணத்திலிருந்து முஸ்லிம் முதலமைச்சர் வரை

சிறுபான்மைக் கட்சிகளின் ஜீவமரணப் போராட்டங்கள் தொடரும் நிலையில் ஆட்சி அதிகாரத்திற்கான அடுத்தகட்ட நிலைக்கு பெரும்பான்மைக் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக அடுத்த சில மாதங்களில் தேர்தலொன்று எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்தலொன்றுக்குத் தயாராகும்படி ஜனாதிபதி  தமது கட்சி முக்கியஸ்தர்கள் சந்திப்பில் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் ஐக்கிய தேசியக்கட்சி அனைத்து அமைச்சு அதிகாரங்களையும் வைத்துள்ள நிலையில் தேர்தல் ஒன்றை எதிர்கொள்வது ஜனாதிபதி தலைமையிலான கட்சிக்கு சவாலாகவே அமையும்.

எனவே, மாகாணங்களின் அதிகாரங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு ஆளுநர் என்ற துருப்புச்சீட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. அண்மைய முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட கலவரங்களினால் ஜனாதிபதி மீதான நல்லபிப்பிராயங்களும் முஸ்லிம் சமூகத்தில் நலிவடைந்துள்ளது.

எனவே, இவற்றினை நிமிர்த்திக்கொள்வதற்காக கொழும்பில் முஸ்லிம் ஆளுநரும், முஸ்லிம்கள் செறிவாக வாழும் கிழக்கில் முஸ்லிம் ஆளுநரும் தமிழர்கள் செறிவாக வாழும் வடக்கில் தமிழ் ஒருவர் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலையில் இந்நியமனங்கள் கிழக்கில் முஸ்லிம் கட்சிகளின் வாக்குவங்கிகளில் பாரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்தாவிடினும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மீது எதிரலைகளை தோற்றுவிப்பதன் மூலம் கருணா – பிள்ளையான் அணியினர் மீதான சார்பு நிலையினை தோற்றுவிக்கும். இதனால் இவர்கள் சார்ந்த ஜனாதிபதி கூட்டணிக்கே சாதகமாக அமையும். வட கிழக்கிற்கு வெளியே குறிப்பாக மேல் மாகாணத்தில் முஸ்லிம் ஆளுநர் நியமனம் சிறுபான்மைக்கெதிரான கோஷங்களை வலுப்பெறச்செய்ய வாய்ப்புள்ளது. எதிர்வரும் நாட்களில் மேல் மாகாண ஆளுநருக்கெதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை  கொண்டுவரப்படவுள்ளதாக வெளியாகிவரும் செய்திகள் இதனையே புலப்படுத்துகின்றன.

கிழக்கின் தற்போதைய ஆளுநர் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரானவர் என்றும் தமிழ் சகோதர இனத்திற்கு எதிரானவர் என்ற பிரசாரம் அப்பாவி தமிழ் மக்களை உசுப்பிவிடுவதாகவே உள்ளது.  ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வைப் பொறுத்தமட்டில் வடகிழக்கு இணைப்புக்கு எதிரானவராகக் கொள்ள முடியாதுள்ளது. ஆரம்ப காலங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான நிலத்தொடர்பற்ற அதிகார அலகு குறித்த நிலைப்பாட்டினை கொண்டிருந்தவர். பிற்பட்ட காலங்களில் தொடர்ந்தும் முஸ்லிம்கள் போராட்டக் குழுக்களாலும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்டபோது தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து தமது இருப்புக்களையும் உரிமைகளையும் குறைந்தபட்ச பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் மாற்று அரசியல் செயற்பாட்டாளராக பயணித்ததில் நியாயப்பாடுகள் இல்லாமல் இல்லை. வடகிழக்கினை திட்டமிட்டு பிரிப்பு செய்த பெரும்பான்மை தேசியவாத கட்சியுடன் ஒட்டி உறவாடும் சிலர் தற்போதைய ஆளுநருக்கெதிராக வடகிழக்கு இணைப்பிற்கு எதிரானவர் எனக் கூறிக்கொண்டு ஹர்த்தால் போன்ற இனக்குரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களது அரசியல் வங்குரோத்து நிலையினையே கோடிட்டுக்காட்டுகின்றது.

மறுபுறம் வட மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் தமிழீழ தாயகக்கோட்பாட்டில் நம்பிக்கை இழந்தவர் மாத்திரம் அல்லாமல் இந்திய கருத்திட்டமான 13வது சட்டமூலத்துடனேயே தமது அரசியல் பார்வையினை கொண்டவர். முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் இக்கருத்தினையே கொண்டிருந்தமை புதிய ஆளுநரை தாம் புகழ்ந்து வரவேற்க காரணமாய் அமைந்தது. புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக தனது எழுத்துக்களில் திடப்படுத்திய வடமாகாண ஆளுநரை  கட்சிபேதங்கள் மறந்து வரவேற்க முன்வந்த தமிழ் தரப்பு, கிழக்கில் முஸ்லிம் ஒருவர் ஆளுநராக வருவதை எதிர்ப்பது தமிழ் – முஸ்லிம் உறவு குறித்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநரைப் பொறுத்தவரையில் அவர் ஓட்டமாவடி கோவிலை இடித்தவர் என்ற குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. ஏனெனில் 1990களில் தமிழ் – முஸ்லிம் உறவு வன்முறைகளால் விரிசலடைந்தபோது  புலிகளுக்கும் முஸ்லிம் தரப்புக்குமிடையில் இடைத்தரகராக தற்போதைய ஆளுநர் செயற்பட வேண்டியேற்பட்டது.

கிழக்கிற்கான மின்சார விநியோகத்தை புலிகள் தகர்த்தபோது புலிகளது உள்ளார்ந்த கோரிக்கைகள் அரச தரப்பின் உதவியோடு தற்போதய ஆளுநர் ஊடாகவே நிறைவேற்றப்பட்டன என்பது வரலாற்று உண்மை. இந்தவகையில் ஓட்டமாவடி கோவில் காணியை விற்பனை செய்வதில் கோவில் பரிபாலன சபைக்கும், புலிகளுக்கும், அப்போதைய மாவட்ட அரச அதிபர் மற்றும் முஸ்லிம் தரப்புக்கும் மத்தியஸ்தத்தை தற்போதைய ஆளுநர் வகித்துள்ளார்.

மாத்திரமல்லாமல், கடந்த காலங்களில் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக இருந்தபோதும் குறைந்தது மாவட்டத்தில் முஸ்லிம்கள் யுத்தகாலங்களில் இழந்த ஒரு துண்டு காணியைக்கூட ஹிஸ்புல்லாஹ் மீளப்பெற்றுக்கொடுக்கவில்லை என்ற கசப்பான உண்மையும் உள்ளது. அதுமாத்திரமல்லாமல் குறைந்தது மீள்குடியேறி வாழும் முஸ்லிகளின் காணிகளுக்கு ஒப்பங்களைக்கூட பெற்றுக்கொடுக்கவில்லை என்ற குற்ச்சாட்டும் முஸ்லிம் தரப்பிடம் காணப்படுகின்றது. தமிழ் சகோதர இனத்துடன் புரிந்துணர்வு அடிப்படையிலேயே காணி விடயம் பேசித்தீர்க்கவேண்டும் என்ற ஆளுநரின் நிலைப்பாடு மறுபுறம் முஸ்லிம் தரப்பை எரிச்சலூட்டாமலும் இல்லை.

ஆகமொத்தத்தில், ஆளுநர் என்ற துருப்புச்சீட்டு பல்முனை அரசியல் ஆடுகளத்தில் பரீட்சார்த்தமாக வீசப்பட்டுள்ளது. மறுபுறம் கிழக்கின் ஆளுநராக ஒரு முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் வரக்கூடாது என்ற எண்ணத்துக்கு மத்தியில் இணைந்த வடகிழக்கில் முஸ்லிகள் தமிழ் தரப்பிடம் இருந்து எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற கசப்பான உண்மையினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மௌனத்தில் இருந்தும், இனவாதத்தை மூலதனமாக கொண்டுள்ள சில தமிழ் தரப்புகளிடம் இருந்தும் முஸ்லிம் சமூகம் புரிந்துகொள்ள வாய்ப்பாக உள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.