மகாநாயக்க தேரர்களை சிலர் தவறாக திசை திருப்ப முயற்சிப்பது கவலைக்குரியது
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
நாட்டை பிளவுபடுத்துவதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டு வரப்போவதாக சில அரசியல்வாதிகள் மகாநாயக்க தேரர்களை தவறாக திசை திருப்ப முயற்சிப்பது கவலைக்குரியதாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் இதுவரையும் முன்வைக்கப்படாத நிலையில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி, இனவாதத்தை தூண்டுவதற்கு ஒரு சாரார் முயற்சித்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.
அலரி மாளிகையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பிரதமர் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார்.
புதிய அரசியலமைப்பை முன்னெடுத்து நாட்டை பிளவுபடுத்தப் போவதாக தெரிவிப்பவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மக்களுக்கு அப்பட்டமான பொய்களை தெரிவிப்பது விந்தையாகவுள்ளது. இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி இனவாதத்திற்கு தூபமிடவும் நாட்டுக்கு தீவைக்கவும் முயற்சிக்க வேண்டாம் என அத்தகையோரை தாம் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்புக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். சில ஊடகங்கள் இல்லாத அரசியலமைப்பை இருப்பதாக காட்ட முயற்சிக்கின்றமை கவலைக்குரியதாகும். நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாகவும் பொலிஸ் துறையை சீர்குலைக்கப் போவதாகவும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர். பொலிஸ் தொடர்பான கருத்துக்கள் அரசியல் கட்சி, முதலமைச்சர்களின் யோசனைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கருத்துக்களையும் அரசியலமைப்பு யோசனைகளில் முன்வைக்க முடியும். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கும் அரசியல் தீர்வு அவசியமாகும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
-Vidivelli