அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்ட மைத்திரி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடின் ஆதரவளியோம்
பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம திட்டவட்டமாக தெரிவிப்பு
அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நியமிக்க ஆதரவளிக்கப் போவதில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நியமிக்க பொதுஜன பெரமுன ஆதரவளிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்னை பொறுத்தவரையில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும். 19ஆவது திருத்தத்தில் அவருக்குப் போட்டியிட முடியாதென்று எந்த தடையும் இல்லை. அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ வேட்புமனு தாக்கல் செய்தால் அதனை நிராகரிக்கப்போவதில்லை என தேர்தல்கள் ஆணையாளரும் தெரிவித்திருக்கின்றார். அதனால் மஹிந்த ராஜபக் ஷவே எனது தெரிவாகும்.
அத்துடன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருப்பதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் பிழையான வேலைத்திட்டங்களை விமர்சித்துக்கொண்டு நாங்கள் முன்னுக்குசெல்வோம்.
இன்று நாடு அழிவின்பால் சென்று கொண்டிருக்கின்றது. அந்த அழிவுக்கு ஆரம்ப காரணமாக இருந்தது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைந்து மேற்கொண்ட தேசிய அரசாங்கமாகும். நாடு சீரழிந்தபின்னர் பிரதமர் மீது மாத்திரம் குற்றம்சாட்டி ஜனாதிபதி தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றார்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மேற்கொண்ட நடவடிக்கையால் அரசியல் ரீதியில் நாடு மேலும் சீரழிந்தது. பதுளையில் இருப்பவர்தான் மைத்திரி -– மஹிந்த உறவுக்கு தரகர்வேலை பார்த்தார். பின்னர் மஹிந்த ராஜபக் ஷவையும் அவரே இல்லாமலாக்கினார். இவர்கள்தான் மஹிந்த ராஜபக் ஷவுக்கு தேவையற்ற கதைகளை கூறி அவரை இந்த நிலைக்கு தள்ளிவிட்டனர். இவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும்.
மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். நான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் தனக்கில்லை என்பதை தெரிந்துகொண்டே அதனை செய்தார். இவ்வாறு தீர்மானங்களை எடுக்கும் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க என்னால் ஆதரவளிக்க முடியாது. அதனை நான் எதிர்க்கின்றேன் என்றார்.
-Vidivelli