வட – கிழக்கு இணைப்பு எமது தீர்மானம் அல்ல
இனப்பிரச்சினையை தீர்க்க இறுதியான சந்தர்ப்பம் இதுவே என்கிறது ஐ.தே.க.
அரசியலமைப்பு செயற்பாடுகளில் இதுவரை தமிழ் தரப்பின் ஒத்துழைப்பு வழங்கப்படாத நிலையில் முதல் தடவையாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் ஈடுபடுகின்றன. இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இனி எப்போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது. எனினும், சமஷ்டியோ, வடக்கு கிழக்கு இணைப்போ எமது தீர்மானமல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அரசியல் கட்சிகள் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல இதனைக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் அனைவரும் இன்று புதிய அரசியலமைப்பு குறித்துப் பேசுகின்றனர். புதிய அரசியலமைப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எனினும் ஒரு தரப்பினர் இதனை தவறான வகையிலேயே சித்தரித்து வருகின்றனர். எமது நாட்டில் இரண்டு தடவை அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு அரசியலமைப்புகளை உருவாக்கும் நேரத்தில் எந்தவொரு தமிழ் கட்சிகளும் அரசியலமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
பண்டாரநாயக்க அம்மையார் உருவாக்கிய போதும் தமிழர் தரப்பு இணங்கவில்லை, பின்னர் ஜே.ஆர். புதிய அரசியலமைப்பினை உருவாக்கிய போதும் அதற்கும் தமிழ்ர் அரசியல் தலைமைகள் இணக்கம் தெரிவிக்கவில்லை. இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் எதிர்ப்பையே முன்வைத்தனர். எனினும், இப்போது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு முதல் தடவையாக தமிழ் கட்சிகளின் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைத்தபோது பிரதான தமிழ் கட்சிகளும் தமது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளன. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகும்.
புதிய அரசியலமைப்பில் சமஷ்டி என்ற பேச்சுவார்த்தையோ வடக்கு, கிழக்கு இணைப்பு என்றதற்கான பேச்சுவார்த்தையோ ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்படவில்லை. இப்போதுள்ள மாகாணசபை முறைமையை பலப்படுத்துவது எப்படி என்ற பேச்சுவார்த்தையை மட்டுமே நாம் முன்னெடுத்தோம். இதுகுறித்து சகல தரப்புடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். சில விடயப்பரப்புகளில் மத்திய அரசாங்கமும் தலையிடும். அதேபோல் மாகாண சபைகளும் கையாளும் தன்மைகள் உள்ளன. இவற்றை கையாள்வது எவ்வாறு என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். அதேபோல் ஒற்றையாட்சி என்ற பதம் குறித்து சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இதில் முக்கியமாக ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பரவலாக்கல் என்ற விடயத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இப்போது நாம் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பொன்றை முன்வைக்கவில்லை. யோசனை யொன்றை மட்டுமே முன்வைத் துள்ளோம். இதில் சகல கட்சிகளின் யோசனைகளும் உள்ளன. இதுகுறித்து அடுத்த கட்டமாக ஆராயவேண்டியது மட்டுமே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli