ஐ.எஸ்.இற்கு எதிரான யுத்தத்தின் பின்னர் ஈராக்கைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளதாக பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் ஜியீன் யுவெஸ் லி ட்ரியான் தெரிவித்துள்ளார்
கடந்த திங்கட்கிழமை பக்தாதில் ஈராக் வெளிநாட்டமைச்சரை சந்தித்த லி ட்ரியான் இந்த உதவி ஈராக்கில் மிகவும் சேதத்திற்குள்ளான பகுதிகளைக் கட்டியெழுப்புவதற்காகப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மீள்கட்டுமானப் பணிகளுக்கு 88 பில்லியன் அமெரிக்க டொலர் தேவையென ஈராக் திட்டமிடல் அமைச்சு மதிப்பீடு செய்துள்ளது. கடந்த வருடம் குவைத்தில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் ஈராக் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியீட்டம் செய்துகொண்டது.
ஈராக்கின் சிறுபான்மையினரான யெஸீதி சமூகத்திற்கு உதவி வழங்கியமைக்காக ஈராக் வெளிநாட்டமைச்சர் மொஹமட் அல்ஹாகிம் பிரான்ஸுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். இந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் வடக்கு ஈராக்கினை ஐ.எஸ். கிளர்ச்சிக்காரர்கள் குறுகிய காலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது ஆயிரக்கணக்கான யெஸீதி மக்களை அடிமைகளாக வைத்திருந்ததோடு கொலையும் செய்தனர். ஈராக்கிலும் சிரியாவிலும் ஆள்புலப் பிரதேசரீதியாக தோற்கடிப்பதற்கான சர்வதேசக் கூட்டணியில் பிரான்ஸும் ஒரு அங்கத்துவ நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli