போகோஹராம் போராளிகள் வடகிழக்கு நைஜீரியாவின் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், முரண்பாடுகள் காரணமாக தமது வாழ்விடங்களை இழந்தவர்களின் தற்காலிக தங்குமிடங்களுக்கும் தீயிட்டுக் கொளுத்தியதாகவும் இராணுவ மற்றும் மனிதாபிமான உதவி வட்டாரங்கள் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல் போர்னோ மாநிலத் தலைநகர் மெயிடுக்உரிக்கு வடகிழக்கே சுமார் 175 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரான் பகுதியில் திங்கட்கிழமை மாலை ஆரம்பமானதையடுத்து பொதுமக்கள் அப்பிரதேசத்திலிருந்து வெளியேறினர்.
ஐ.எஸ். அமைப்பினைப் போன்று செயற்பட்டுவரும் போகோ ஹராம் அமைப்பின் மேற்காபிரிக்க மாநிலப் பிரிவு கிட்டத்தட்ட தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் இத்தாக்குதல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையும் மெயிடுக்உரிக்கு வடமேற்கே 50 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள மகுமெரி இராணுவத் தளத்தினைக் கைப்பற்றுவதற்காக இவ்வாறனதொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் சமூகத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
ரான் பகுதியில் தற்போது உள்ளகரீதியாக இடம்பெயர்ந்த 35,000 பேர் பராமரிக்கப்படுவதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்பகனவே மனிதாபிமான ரீதியில் மோசமான சூழ்நிலையினை எதிர்நோக்கியுள்ள நிலையில் தொடர் தாக்குதல்கள் மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
-Vidivelli