சிரிய அரசாங்கத்துடன் சுமுக உறவினை ஏற்படுத்திக் கொள்வதற்காக நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதற்கோ அல்லது டமஸ்கஸில் கட்டார் தூதரகத்தைத் திறப்பதற்கோ எந்த ஒரு அவசியமும் இல்லையென கட்டார் வெளிநாட்டமைச்சர் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய கட்டார் வெளிநாட்டமைச்சர் ஷெய்க் மொஹம்மட் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, அரபு லீக்கில் சிரியாவின் அங்கத்துவம் வழங்குவதற்கு எதிராகத் தொடர்ந்தும் கட்டார் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.
தற்போது எட்டு ஆண்டுகால யுத்தமாக மாறியுள்ள சிரிய அரசாங்கத்தின் வன்முறையுடனான பதில் நடவடிக்கைக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு அரபு லீக்கிலிருந்து சிரியா இடைநிறுத்தப்பட்டது.
சிரியா, அரபு லீக்கிலிருந்து இடை நிறுத்தப்படுவதற்கு எந்தக் காரணங்களின் அடிப்படையில் கட்டார் ஆதரவளித்ததோ, அதே காரணங்கள் இன்னும் அங்கே காணப்படுகின்றன. நாம் அவற்றில் எவ்வித முன்னேற்றகரமான விடயங்களையும் காணவில்லை எனவும் அல் தானி தெரிவித்தார்.
ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு வழங்கியவர்கள் உள்ளிட்ட சில நாடுகள் அவரும் அவரது நேச நாடுகளும் வெற்றிகரமான முன்னேற்றத்தைக் கண்டுள்ள நிலையில் அவருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகம் டமஸ்கஸில் தனது தூதரகத்தைத் திறந்தது. பிராந்தியத்தில் எதிரியாகப் பார்க்கப்பட்ட ஜனாதிபதி அஸாத்துடனான இராஜதந்திரத் தொடர்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கான நகர்வாக இது பார்க்கப்படுகின்றது எனினும் அவரது படைகளுக்கு எதிராக சண்டையிட்ட கிளர்ச்சிக்காரர்களுக்கு அது முன்னர் ஆதரவு வழங்கியிருந்தது.
தூதரகம் மீளத் திறக்கப்படுவதன் நோக்கம் சிரியாவுடனான உறவினை சுமுக நிலைக்குக் கொண்டு வருவதும் அரபு, சிரிய விவகாரங்களில் பிராந்தியத் தலையீடுகள் இடம்பெறும் ஆபத்தை தடுப்பதுமாகும் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்ததாக சவூதிக்குச் சொந்தமான அல்-அரேபியா தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்திருந்தது.
ஈரானும் துருக்கியும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிர்நிலை நாடுகளாகும், அவற்றின் படைகள் சிரியாவில் உள்ளன. மோதலில் எதிரெதிர்த் தரப்பினருக்கு அவை ஆதரவளித்து வருகின்றன.
-Vidivelli