சுதந்திரமான அடிமையற்ற ஊடகத்துறை இருக்குமானால் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு பலம் பெறும்
வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச
சுதந்திரமான அடிமையற்ற ஊடகத்துறை இருக்குமானால் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதோடு அது பலம்பெறுமென வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகெடிய பிரதேச செயலகப் பிரில் நைகல பிரதேசத்தில் சகலருக்கும் நிழல் மீள் எழுச்சிபெறும் கம்உதாவ திட்டத்தின் கீழ் நான்கு உதாகம மாதிரிக் கிராமங்களுக்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த கிராமங்கள் ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க மாதிரிக் கிராமம், உபாலி தென்னகோன் மாதிரிக் கிராமம், கீத் நொயார் மாதிரிக் கிராமம் மற்றும் போத்தல ஜயந்த மாதிரிக் கிராமம் எனும் ஊடகவியலாளர்களின் பெயர்களிலான மாதிரிக் கிராமங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளன.
இக் கிராமங்களில் காணிகள் கிடைக்கப் பெற்ற பயனாளிகளுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்காக ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான வீடமைப்பு கடனும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான வீடமைப்பு உதவிகளும் வழங்கப்படவுள்ளன. வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணிகள் தனியாரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுவது இந்த கிராமங்களின் விசேட அம்சமாகும்.
வீடமைப்பு நிர்மாணத் துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ இங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது, உண்மையைக் கூறியதால்தான் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு தனது உயிரைப் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் கூறிய உண்மை என்ன? அது மிக் விமான கொள்வனவு தொடர்பானது ஆகும். இவர் மாத்திரமன்றி உபாலி தென்னகோன் பல தடவைகள் பல தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் கீத் நொயார், போத்தல ஜயந்த ஆகிய ஊடகவியலாளர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகி உடலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்கள். இவர்களை முடியுமான அளவு தாக்கி பிரதான பாதையில் வடிகானுக்கு அருகில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார்கள்.
இவ்வாறான மிகவும் கொடூரமான செயலைச் செய்த அரசியல் குழுக்கள் இன்று எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு ஒன்றும் அறியாதவர்கள் தெரியாதவர்கள் போன்று காண்பிக்க முயற்சி செய்து வருகிறார்கள். இவர்கள் நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டுமெனக் கூறி வருகிறார்கள்.
இந்த நான்கு கிராமங்களும் வேறெந்த பிரதேங்களில் அன்றி வீரகெடியவில் நிர்மாணிக்கப்படுவதும் விசேட அம்சமாகும். இந்த நான்கு ஊடகவியலாளர்களும் நாட்டு மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்த முயற்சி செய்ததினாலேயே ஒருவர் உயிரை பலி கொடுத்து ஏனைய மூவரும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவர்கள் திருட்டு, ஊழல், இலஞ்சம் மற்றும் மோசடிகளை ஆதாரங்களுடன் நாட்டிற்கு எடுத்துக் காட்டினார்கள். இந்த ஊடகவியலாளர்க ளுக்காக நாம் எமது உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
-Vidivelli