வேட்பாளர் யார் என்பதை இந்த வருடம் அறிவிப்போம்
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய தயார் என்கிறார் பசில்
இந்த ஆண்டு முடிவடைய முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியின் சார்பில் புதிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்ய தாம் தயாராக உள்ளதாவும், புதிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் வீழ்ச்சி கண்டுள்ள நாட்டினை மீட்டெடுக்க சகலரதும் ஒத்துழைப்புடன் செயற்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலில் வடக்கு கிழக்கு தவிர்ந்து ஏனைய 19 மாகாணங்களையும் தாம் கைப்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் அமைப்புடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் கூறியுள்ளதாவது,
நாம் அரசியல் ரீதியில் பலமான கட்சியாக உள்ளோம், நாம் கட்சியாக செயற்பட ஆரம்பித்த ஒரு ஆண்டுகாலத்தில் 72 ஆண்டுகால அரசியல் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியையும், 67 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், 53 ஆண்டுகால அரசியல் வரலாற்றைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியையும் ஏனைய சிறிய கட்சிகளையும் பின்தள்ளி எமது வெற்றியை மிகப் பலமாக பதிவு செய்துள்ளோம். அடுத்து நடக்கும் தேர்தல்களில் 19 மாகாணங்களிலும் நாம் முன்னணியில் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
அதேபோல் 51 நாட்கள் அரசியல் நெருக்கடியில் நாம் அரசாங்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றோ அல்லது ஆட்சியைக் கொண்டுசெல்ல வேண்டும் என்றோ எந்த முன்னாயத்தமும் இருக்கவில்லை. ஆட்சியை நடத்த இடமளிக்கவும் இல்லை. இப்போது எமக்கு ரணில், சஜித், நவீன் கூட்டணியை விடவும் சர்வதேசத்துடன் போட்டியிட்டே எமது வெற்றியை தக்கவைத்துக் கொள்ளவேண்டியுள்ளது.
எனினும் இந்த ஆண்டு இறுதிக்குள் எமது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையில் உருவாகும் கூட்டணிக்கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்து அடுத்த கட்ட அரசியல் போராட்டத்தில் களமிறங்கும். அதில் இளைஞர் அணியின் முழுமையான ஆதரவும் செயற்பாடும் அவசியமாக இருக்கும். அதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். புதிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் வீழ்ச்சி கண்டுள்ள நாட்டினை மீட்டெடுக்க சகலரதும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-Vidivelli