தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்: சிங்கள – முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலையீடே தீர்வுகாண முடியாமைக்கு காரணம்
மேயர் ஜாலிய ஒபாத தெரிவிப்பு
‘சிங்கள அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் தலையீட்டினாலேயே தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமலிருக்கிறது. தம்புள்ளை முஸ்லிம்களும் சிங்களவர்களும் பேச்சுவார்த்தைகள் நடாத்தி இப் பிரச்சினைக்கு தாமதமில்லாமல் தீர்வு காண வேண்டும்’ என தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத தெரிவித்தார்.
தம்புள்ளை புனித பூமி எல்லைக்குள் அமைந்துள்ள தம்புள்ளை பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக்கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த வெள்ளிக்கிழமை தம்புள்ளை ஓய்வு விடுதியில் (ரெஸ்ட் ஹவுஸ்) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள், தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத ஆகியோர் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் வினவியபோதே தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
‘நாட்டில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்தில் வடக்கு, கிழக்கு பகுதி முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வடக்கிலிருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களிடம் கப்பம் அறவிடப்பட்டது. பலர் உயிர்களைப் பலி கொடுத்தனர். நாட்டில் மீண்டும் இவ்வாறான நிலை உருவாகக் கூடாது. முஸ்லிம்களும் சிங்களவர்களும் நல்லுறவுடன் வாழவேண்டும். அதற்கு பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
வெள்ளிக்கிழமை நடந்த கலந்துரையாடல் எவ்வித தீர்மானங்களுமின்றி முடிவுற்றது. தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும். எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி பிரச்சினைகள் சுமுகமாக தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களது சுயநலன்கருதியே தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் செயற்படுகின்றனர். அவர்கள் தூரநோக்கோடு செயற்பட வேண்டும் என்றார்.
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினரும் மாத்தளை, இரத்தோட்டை, தொகுதிகளுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் அமைப்பாளருமான எஸ்.வை.எம். சலீம்தீன் கருத்து தெரிவிக்கையில்;
‘தம்புள்ளை மேயர் தம்புள்ளையிலிருந்தும் 19 கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள நிக்கவட்டவன பகுதியிலே தம்புள்ளை பள்ளிவாசலை நிர்மணிக்க காணியொன்று தருவதாக கூறுகிறார்.
பள்ளிவாசல் ஐவேளை தொழுவதற்கு வசதியாக தம்புள்ளையிலேயே அமைய வேண்டும். அதனால் தம்புள்ளையிலேயே காணி வழங்கப்பட வேண்டும். நிக்கவட்டவன பகுதிக்கு பள்ளிவாசலை அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை.
முன்னாள் அமைச்சர் சம்பிக்கரணவக்கவினால் ஏற்கனவே காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அக்காணி பள்ளிவாசலிலிருந்து 150 மீற்றர்களுக்கப்பால் புனித பிரதேச எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது. அக்காணியே எமக்கு வழங்கப்பட வேண்டும். இல்லையேல் பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை.
இவ்விகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளோம் என்றார்.
-Vidivelli