மள்வானை ரக்ஸபானையில் கடைத்தொகுதி ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீயினால் நான்கு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மள்வானை ரக்ஸபானையில் கடைத் தொகுதியொன்றில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தீப்பிடித்துள்ளது.
இதனால் அந்த கடைத்தொகுதியிலிருந்த சுமார் நான்கு கடைகள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன. குறித்த கடைத்தொகுதியிலிருந்த புடைவைக் கடையிலேயே முதலில் தீப்பற்றியுள்ளதுடன் பின்னர் ஏனைய கடைகளுக்கும் தீ பரவியுள்ளதாகத் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று அதிகாலை 1.30 மணியளவில் புடைவை (கட் பீஸ்) கடைக்குள் தீப்பற்றி எரிவதை அருகில் இருக்கும் குடியிருப்பாளர்கள் கண்டு சப்தமிட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து அங்கு குழுமிய பிரதேச மக்கள் தீயணைப்பு படை மற்றும் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவித்துள்ளனர். இருந்தபோதும் தீயணைப்பு படை குறித்த இடத்துக்கு வருவதில் ஏற்பட்ட தாமதத்தால் கடைத்தொகுதி முற்றாக தீயில் எரிந்து சாம்பராகியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பியகம தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னரே தீயணைப்பு படையினர் குறித்த இடத்துக்கு வந்ததாகவும் அவர்களின் தீயணைப்பு பெளசரில் போதுமாளவு நீர் இருக்கவில்லை என்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். பெளசரிலிருந்த நீர் முடிவடைந்த பின்னரும் தீ தொடர்ந்து பற்றிக் கொண்டிருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் குறிப்பிட்ட கடைத்தொகுதி களனி ஆற்றுடன் இணைந்ததாகவே அமைந்துள்ளது. தீயணைப்பு வாகனத்தில் நீர் நிறைவடைந்ததும் களனி ஆற்றிலிருந்து நீரை குழாய் ஊடாக எடுப்பதற்கு முயற்சித்த போதிலும் அதற்குத் தேவையான குழாய்கள் தீயணைப்பு படையினரிடம் இருக்கவில்லை. அதனால் பிரதேசவாசிகள் அங்கிருந்த வீடுகளில் இருந்து நீர் குழாய்களை கொண்டுவந்து பொருத்தியே ஆற்றில் இருந்து நீரை எடுத்து தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மேலும் கடைத்தொகுதிக்கு ஏற்பட்ட தீயானது நாசகார செயலா அல்லது வேறு காரணங்களா என்பது தொடர்பாக பியகம பொலிஸார் பல கோணங்களிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் குறித்த ஆடை கடையானது ரக்ஸபானையைச் சேர்ந்த பியகம பிரதேச சபை உறுப்பினரான அரசியல்வாதி ஒருவரின் சகோதரருடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல் அறிக்கை
இதேவேளை குறித்த தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் ரக்ஸபான ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெ ளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள நான்கு கடைகள் தீயில் முற்றாக சேதமுற்றமை தொடர்பாக பல்வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.
இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின் படி கடைத்தொகுதியின் பின்னால் இருந்த சிறிய குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ விரைவாகப் பரவியதால் மேற்படி கடைகள் எரிந்தன என்று தெரியவந்துள்ளது.
எனவே இத் தீ விபத்து இன ரீதியாக மேற்கொள்ளப் பட்ட தாக்குதல் என்ற ரீதியில் செய்திகளைப் பரப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேற்படி தீ மேலும் பரவாமல் இருக்க கடுமையாகப் போராடிய ஊர் ஜமாஅத்தினருக்கும் பொலிஸ் மற்றும் தீயணைப்புப் படையினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளது.
-Vidivelli