உயர்நீதிமன்றுக்கு தமிழ், முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
மதரீதியாக நீதிபதிகள் நியமிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் தெரிவிப்பு
உயர்நீதிமன்றத்துக்கு தமிழ், முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மத அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பிரதான நிகழ்வுகள் இடம்பெற்ற பின்னர், நேற்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டமூலம் மற்றும் ஆளொருவரின் இறப்புக்கான இழப்பீடுகளை அறவிடுதல் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் விமல் வீரவன்ச ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய அரசியலமைப்பு சபையினாலே தீர்மானிக்கப்படுகின்றது. அரசியலமைப்பு சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இருக்கின்றனர். மத அடிப்படையிலே நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக விமல் வீரவன்ச தெரிவிக்கிறார். அவரின் இந்தக் கூற்றில் எந்த அடிப்படையும் இல்லை.
அத்துடன் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள சட்டமூலமானது கடந்த செப்டம்பர் மாதம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதாகும். அதில் சட்டத்துக்கு முரணான விடயங்கள் இருந்தால் அதனை பிரேரணை ஒன்றின் மூலம் நீக்கியிருக்கலாம். அதனை செய்யாமல் தற்போது சம்பந்தமில்லாத குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றனர்.
மேலும், உயர் நீதிமன்றில் பெளத்த, கத்தோலிக்க மதத்தவர்கள் இருக்கின்றனர். இந்து, முஸ்லிம் யாரும் இல்லை. அத்துடன் தமிழ், முஸ்லிம் நீதிபதிகள் இல்லாமை குறைபாடாகும். தமிழ் மொழிமூலமான வழக்குகளை கையாள தமிழ் நீதிபதிகள் இருக்கவேண்டும். அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டி இருக்கின்றது.
மேலும் இரணுவத்துக்கு எதிரான எந்த வழக்கும் சர்வதேசத்திலும் இல்லை, உள்நாட்டிலும் இல்லை. அதனால் பொய் தகவல்களை தெரிவித்து இந்த சபையை அகெளரவப்படுத்தவேண்டாம். இதற்கு முன்னரும் இந்த சபையை நீங்கள் பிழையாக வழிநடத்தியிருந்தீர்கள். நாங்கள் அதனை மாற்றியமைத்திருக்கின்றோம் என்றார்.
-Vidivelli