- ஏ.ஜே.எம். நிழாம்
வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் கிழக்கு வாழ் முஸ்லிம்கள் 34 வீதத்திலிருந்து 12 வீதமாகக் குறைந்து விடுவார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வு பிரதேச அதிகாரப் பரவலே என்பதால் முஸ்லிம்களுக்கும் அதில் பங்கு இருக்க வேண்டும். எனவே தமிழரின் சுய நிர்ணயத்துக்கும் இறைமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் புறம்பாக அவர்களைப் போல் முஸ்லிம்களும் தனித்துவமாக வாழ கிழக்கில் ஒரு மாகாணம் அமைக்கப்பட வேண்டும் என அஷ்ரப் கோரினார்.
மாநிலம், மாகாணம், பிராந்தியம், அலகு என்றெல்லாம் பல்வேறு சமயங்களில் அவர் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவரது கணிப்பில் எல்லாம் ஒன்றையே குறிக்கிறது. முஸ்லிம்களுக்கு மட்டுமா அது இல்லை ஏனைய மாகாணங்களில் உள்ளதுபோல் எல்லா இனமக்களும் வாழலாம். முஸ்லிம்களே அதில் பெரும்பான்மையாக வாழ்வார்கள் எனவும் குறிப்பிட்டார். அது மதரீதியான இஸ்லாமிய பகுதியா? முஸ்லிம் அதிகார அலகு எனவும் அதைக் குறிப்பிட்டிருக்கிறீர்களே. ஷரீஆ அடிப்படையிலான நிலப்பகுதியா எனவும் கேட்கப்பட்டபோது இல்லை சமூகத்தின் தனித்துவத்தைக் குறிக்கவே முஸ்லிம் என்றேன். நிர்வாக உரிமையைக் குறிக்கவே அதிகாரம் என்றேன். ஒரு சிறு நிலப்பரப்பு என்பதைக் குறிக்கவே அலகு என்றேன் எனக்கூறினார். இதன் பரப்பளவு எப்படி? இது எப்படி அமையவேண்டும் என்பது பற்றியெல்லாம் புதிய தலைமுறைக்குத் தெரியாது. காரணம் அஷ்ரபின் அடிச்சுவட்டில் வந்தோர் இதைக் கூறிக்காட்டவே இல்லை.
பலர் சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ஆகிய நகரங்களை இணைத்துக் கல்முனையைத் தலைநகராகக் கொண்டு அவர் கோரிய கரையோர மாவட்டமே முஸ்லிம் அதிகார அலகு என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் விதிவிலக்காகவில்லை. அஷ்ரபின் நெருங்கிய நண்பரான எம்.ரி.ஹஸனலியைத் தொடர்பு கொண்ட பிறகுதான் சரியான விளக்கத்தை என்னால் பெற்றுக்கொள்ள முடிந்தது. முஸ்லிம் அதிகார அலகுபற்றி கடந்தமுறை நான் வழங்கிய தரவு திருத்தப்படவேண்டியதாகும். இதுதான் உண்மை விளக்கம்.
கிழக்கு மாகாணத்தில் திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை என மூன்று மாவட்டங்கள் இருக்கின்றன அல்லவா? நிலத்தொடர்பற்ற முறையில் அம்மூன்று மாவட்டங்களிலுமுள்ள முஸ்லிம் நகரங்களை உள்ளடக்கியதாகவே முஸ்லிம் அதிகார அலகு அமைய வேண்டும். இதற்கு நிலத்தொடர்பற்ற முறையில் இந்தியாவில் அமைந்துள்ள பாண்டிச்சேரி எனும் மாகாணத்தை அஷ்ரப் உவமையாகக் காட்டியிருந்தார்.
வடமாகாண முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் விரும்பினால் இதனோடு இணைந்து கொள்ளலாம். இன்றேல் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்ந்துகொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். இதுபற்றி பலசுற்று பேச்சுவார்த்தைகளை தமிழ் தரப்பினரோடு நடாத்தியிருந்தார். எனினும் தமிழ் ஆயுதப் போராளிகளிடம் சுயாதீனத்தை இழந்திருந்த அவர்களால் இணக்கப்பாட்டுக்கு வர முடியாதிருந்தது. மறுபுறம் தமிழ்பகுதிகளில் ஆயுதக் கலாசாரம் பரவியிருந்ததால் நிராயுத பாணிகளான முஸ்லிம்களால் முஸ்லிம் அதிகார அலகையும் கரையோர மாவட்டத்தையும் கோரும் சூழ்நிலை இருக்கவில்லை.
தற்போது தமிழ்ப் போராளிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுற்று மீண்டும் ஜனநாயக தமிழ்த்தலைவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் சுயநிர்ணய இறைமைக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு சமஷ்டித் தீர்வுக்குள் ஒரே நாட்டில் வாழ்வதற்கும் இசைந்துள்ளார்கள். பிரிவினை கோரமாட்டேன் என சம்பந்தன் உயர்நீதிமன்றத்தில் சபதம் செய்துள்ளார். சமஷ்டி, யாப்புக்கு முரணல்ல என உயர்நீதிமன்றம் பொருட்கோடலும் செய்திருக்கிறது.
அதன்படி மாகாண சமஷ்டி, யாப்புக்கு முரணல்ல என்றிருப்பின் முஸ்லிம்களுக்கான மாகாணமும் யாப்புக்கு முரணல்ல. சமஷ்டி, பிரிவினையல்ல என்றால் முஸ்லிம் அலகும் பிரிவினையாகாது. எனவே, நிலரீதியிலான அதிகாரப் பரவலைப் பகிர்ந்துகொண்டு தமிழர்களும் முஸ்லிம்களும் நிலத்தொடர்பற்ற முறையில் தத்தமக்குரிய தீர்வுகளைக் கண்டுகொள்ள இணங்கவேண்டும். மேலாதிக்க உணர்வின்றி கடந்தகால கசப்பான அனுபவங்களையும் மறந்து புதிய முறையில் அணுக வேண்டும்.
காரணம், தமிழரைப் பகைத்துக் கொண்டு முஸ்லிம்களாலோ முஸ்லிம்களைப் பகைத்துக் கொண்டு தமிழர்களாலோ வடக்கு கிழக்கில் நிரந்தரமாக வாழ முடியாது. பிட்டும் தேங்காயும் போன்று வாழ்ந்த இவ்விரு சமூகங்களும் இடையில் பிணங்கிக் கொண்டதால் தான் பேரின வானரம் இடையில் புகுந்து அப்பம் பங்கிட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு இசைந்தால் இரு பூனைகளுக்கும் எந்த அளவும் எஞ்சாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆயுதமிருக்கும், அழிவுற்ற விரக்தியும் இருக்கும்வரை சூழலுக்கேற்ற மன நிலைக்கு வருவது கடினமேயாகும். உயர்வுச் சிக்கல், தாழ்வுச்சிக்கல் என்றெல்லாம் இருக்கக் கூடாது.
மாறாத வடுக்களை நீக்கி முஸ்லிம்களுக்கு நம்பிக்கையூட்ட ஜனநாயக தமிழ்த் தலைவர்கள் போதிய முயற்சியைச் செய்தாக வேண்டும். சமமான தீர்வுக்கு உத்தரவாதம் வழங்குவதன் மூலமே இத்தகைய நிலைப்பாட்டை அடையலாம். அதாவுல்லாஹ்வும் ஹிஸ்புல்லாஹ்வும் ரிஷாத் பதியுதீனும் கிழக்கைத் தனியாக்க வேண்டும் எனக் கோரினாலும் அஷ்ரபின் விருப்பம் அதுவல்ல. இணைந்த வடக்கு – கிழக்கில் ஓர் அதிகார அலகைக் கிழக்கில் நிலத்தொடர்பற்று ஈட்டிக் கொள்வதேயாகும். வடக்கும்– கிழக்கும் இணைந்தால்தான் அது சாத்தியப்படும். கிழக்கு தனியாகிவிட்டால் காலப்போக்கில் தெற்கு வாழ் பெரும்பான்மையினர் திட்டமிட்டு குடியேற்றப்பட்டு முழு கிழக்கும் கபளீகரம் செய்யப்பட்டு விடும். முஸ்லிம் அதிகார அலகு இல்லாமல் வடக்கையும் கிழக்கையும் இணையவிட்டால் தமிழ் குடியேற்றங்களும் பரவலாக நிகழ்ந்து முஸ்லிம்கள் சிதறுண்டு போகலாம். அதனால்தான் முஸ்லிம் அதிகார அலகின் மூலம் முஸ்லிம்களின் தனித்துவ பாதுகாப்பு இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு கிழக்கில் தமிழர் பரவலாவதற்கு வகை செய்தார். இதன் மூலமே பேரினக் குடியேற்றத்தை வகை செய்தார். இதன் மூலமே பேரினக் குடியேற்றத்தை கிழக்கிலிருந்து முற்றிலும் ஒழிக்க முடியும்.
அரசு தரப்பாகவே ஒருமுறை ஹக்கீம், பிரபாகரனை நேரில் கண்டிருந்தார். அரசு சொன்னதற்காகப் பிரபாகரனையே கண்ட அவர் அஷ்ரப் அகால மரண மடைந்து 18 ஆண்டுகள் கழிந்தும் கூட அவரது இலட்சியக் கனவான கரையோர மாவட்டத்தை அரசுகளுடன் பேசித் தரவில்லை. அதற்கும் உரிய அமைச்சராக முன்பு அதாவுல்லாஹ்வும் இருந்திருக்கிறார் அதைச் செய்யவில்லை.
தற்போது அஷ்ரபின் கட்சியால் வந்த ஹரீஸ் எம்.பி. அப்பொறுப்புக்கு வந்திருக்கிறார். அதற்கு ராஜாங்க அமைச்சராக வந்துள்ள இவரால் அது முடியுமா? இன்னும் ஒரு வருடமே அடுத்த பொதுத் தேர்தலுக்கு இருக்கிறது அதற்குள் கரையோர மாவட்டத்தை சாதிப்பாரா-? கல்முனையே கரையோர மாவட்டத்தின் தலைநகர் என அஷ்ரப் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் தயாகமகே இடமளிப்பாரா? ஹரீஸுக்கு கெபினட் அந்தஸ்தும் இல்லை. தமிழருக்கு சமஷ்டி மாகாணம் அமைவதாயினும் முஸ்லிம்களுக்கு அதிகார அலகு அமைவதாயினும் மத்திய அரசு பல்லின வடிவில் அமைந்திருக்க வேண்டும். பேரின மத்திய அரசாயின் சிறுபான்மைகளுக்கான பிரதேச அதிகாரப் பரவலின் இருப்பு நிச்சயமற்றதாவதோடு நிர்வாக ஊடுருவலும் ஏற்பட்டு விடலாம்.
உத்தேச புதிய யாப்பில் ஏக்கீய ராஜ்ய (ஒற்றையாட்சி) எனும் சிங்களச் சொல்லுக்கு ஒத்தொருமித்த எனும் தமிழ்ச் சொல்லே பயன்படுத்தப்படும் எனவும் இது சிங்கள மக்களுக்கு மட்டுமே உரிய நாடு எனும் அர்த்தத்தைக் குறிக்காது பிரியாத பிளவு படாத பிரிக்கப்பட முடியாத எனும் அர்த்தங்களையே குறிக்கும் எனவும் இடைக்கால அறிக்கைக்குப் பின் குறிப்பிட்டிருந்தார்கள்.
எனினும் சபை முதல்வர் லக் ஷ்மன் கிரியெல்ல கண்டியில் ஒரு கூட்டத்தில் இது பற்றி அண்மையில் பேசுகையில்;
முழுமையான ஏக்கீய ராஜ்ய என்றே குறிப்பிட்டிருந்தார். சுமந்திரன் எம்.பி. ஒன்றையும் சபை முதல்வர் லக் ஷ்மன் கிரியெல்ல வேறொன்றையும் குறிப்பிடுகின்றரார்களா? அண்மையில் கண்டிக்குப் போன பிரதமர் ரணில் தலைமை பிக்குகளிடம் உத்தேச புதிய யாப்பில் பௌத்த மத சாசன முன்னுரிமைகள் தக்கவைக்கப்படும் என உறுதி கூறினார். இடைக்கால அறிக்கையில் அத்தகைய முன்னுரிமைகள் இடம்பெற்றிருக்கவில்லையா? தற்போதிருக்கும் யாப்பிலும் கூட இத்தகைய முன்னுரிமைகளோடு ஏக்கீய ராஜ்ய (ஒற்றையாட்சி) எனும் சொல் காணப்படவே செய்கின்றது. எனினும் இந்த யாப்பு சமஷ்டிக்கு முரணல்ல என உயர்நீதிமன்றம் பொருட்கோடல் செய்திருக்கிறது. பிரிவினை கோர மாட்டேன் என சம்பந்தன் உயர்நீதிமன்றத்தில் சபதமும் செய்திருக்கிறார். பிறகென்ன? ஆங்கிலேயர் தந்த சோல்பரி யாப்பு மத, இன சார்பற்ற பல்லின வடிவில்தான் இருந்தது. 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியரசு யாப்பு தான் பேரினம் சார்ந்து பௌத்த மத சாசன முன்னுரிமைகளை இயற்றி சிறுபான்மைக்காப்பீடான 29 ஆம் ஷரத்தையும் நீக்கியது. இதையே 1978 ஆம் ஆண்டின் நிறைவேற்று அதிகார யாப்பும் இயற்றியிருந்தது. அது சமஷ்டிக்கு முரணானதல்ல என இப்போது உயர்நீதிமன்றம் பொருட்கோடல் செய்திருப்பதை இனப் பிரச்சினைத் தீர்வுக்கான சாதகமாகவே கருத வேண்டியிருக்கிறது. அந்த வகையில் மத்திய அரசு பல்லின வடிவத்தைப் பெறாமலேயே சமஷ்டியை அமுலாக்கலாம் என்றாகிறது. எனினும் ஒரு கேள்வி பேரின யாப்பு பேரின சமஷ்டியையா அனுமதிக்கிறது.
பல்லின நாட்டைப் பேரின வடிவில் ஆள முடியாது. அது சாத்தியமாகும் வழி இல்லாவிட்டால் அது ஒன்றே வழி என நினைத்து வேறொரு வழியை நாடாமலும் இருக்கக்கூடாது. சேதாரத்துடனாவது நகையைத் தக்கவைக்க வேண்டும். சிங்களத் தரப்பினரின் ஒரே நோக்கம் பௌத்த மத சாசன முன்னுரிமைகள். தமிழ் தரப்பினரின் ஒரே நோக்கம் சமஷ்டி உயர்நீதிமன்றத்தின் அண்மைய பொருட்கோடலால் இரண்டும் சாத்தியமாகியிருக்கின்றன. முன்னுரிமை முழு உரிமையா? என்பதற்கு வரையறையும் கட்டுப்பாடும் வேண்டும். இன்றேல் ஏனைய மதங்களுக்குப் பாதிப்பு நேரும். பேரின ஒற்றையாட்சியா? பல்லின ஒற்றையாட்சியா? என்பதிலும் கூட தெளிவு வேண்டும். ஏனெனில் ஒற்றை என்பதிலோ ஒருமித்த என்பதிலோ பல்லின வடிவம் இருக்கப் போவதில்லை ‘ஒற்றை எனும் சொல் சிங்களவருக்கு மட்டுமே என்பதைக் குறிப்பதோடு துன் சிங்ஹலே (முச்சிங்களவர்) எனக் குறிப்பிடப்படும் உடரட்ட, பஹத்தரட்ட, சப்ரகமுவ ஆகிய முச்சமூகத்தாரும் ஒத்தொருமித்த எனவும் அர்த்தப்படுத்தலாம்.
மத மேலாதிக்கத்தால் இலங்கையில் சிறுபான்மைகள் அஞ்சுகிறார்கள். பேரினவாதமும் அவர்களை நிர்க்கதியாக்கியிருக்கிறது. இரண்டும் கலந்த பேரின மத மேலாதிக்கமே அவர்களின் பல்லின புதிய யாப்புக்கான கோரிக்கைக்கும் காரணமாகும்.
சிறுபான்மைகளுக்கு நியாயமான உரிமைகளை வழங்க முற்படும் உத்தேச புதிய யாப்புக்கு அவ்விரண்டுமே தடையாக நிற்கின்றன. எனினும் புதிய யாப்பு மூலம் ஒருமித்த நாடு உருவாக வேண்டும். நேர்மையான அதிகாரப் பகிர்வு வேண்டும். நியாயமான யாப்பையே தமிழர்கள் ஆதரிப்பார்கள். இயற்கையான குடியேற்றங்களை எதிர்க்க மாட்டோம் என்றெல்லாம் அண்மையில் தன்னைச் சந்தித்த ஜெப்ரிவான் ஓர்டன் எனும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் சம்பந்தன் கூறியுள்ளார்.
ரணிலின் அரசைத் தக்கவைக்க தான் வழங்கிய ஆதரவு ஜனநாயகக் கொள்கை ரீதியானது. பிரதமரோ அரசோ இல்லாவிட்டால் ஏற்படும் அழிவுகளைத் தடுக்கவே அவ்வாறு செய்தேன் எனவும் அவர் கூறியிருந்தார். நான் நியாயமாக நம்புகிறேன். இது எனது நாடு இந்நாடு செழிப்புற வேண்டும் என்பதே என் விருப்பம். அந்த அடிப்படையில் என்னால் நம்பிக்கை அற்றவனாக இருக்க முடியாது.
அரசால் பிரதேசங்கள் தோறும் இன விகிதாசார மாற்றங்களைக் கொண்டுவர முனையும் குடியேற்றங்களை நாம் எதிர்க்கிறோம். மக்களே இயல்பாகக் குடியேறுவதை எதிர்க்கவில்லை. திட்டமிட்ட பேரினக் குடியேற்றங்களால் தமிழ் பிரதேசங்களில் இன விகிதாசாரம் மாற்றமடைந்து இனப் பரம்பலில் வலுவிழந்து விடுவார்கள். இதனால் எமது பாரம்பரிய நிலமும் கலாசாரமும் பாதிக்கப்பட்டு விடும். அவற்றைப் பேணுவதில் தமிழ் மக்கள் உள்ளார்ந்த அக்கறையுள்ளவர்கள் எமக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தும் நேர்மையான அதிகாரப் பகிர்வு வேண்டும். புதிய யாப்பில் எமக்கு நியாயம் இருந்தால் மட்டுமே ஆதரவு வழங்குவோம். உரிய திருத்தங்களைக் கொண்டு வர பலமுறை முயற்சி செய்துள்ளோம். புதிய யாப்புக்குத் தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் நலனைக் கருதி இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடகாலமே இருக்கையில் அதற்குள் உத்தேச புதிய யாப்பு இயற்றப்படுமா காலவரையறை விதிக்கப்பட்டதா? நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டனவா? அவை நிகழாமல் சம்பந்தன் இப்படி உறுதிபடக் கூறமாட்டார். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி யாப்பின் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த சூழலில்தான் அதைக் குழப்பியடிக்கப் பிரதமர் மாற்றம் பாராளுமன்றக் கலைப்பு யாவும் நிகழ்ந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனால்தான் ரணிலின் அரசைத் தக்கவைத்தது.
புதிய யாப்பின் வரைபு 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுமந்திரன் எம்.பி.குறிப்பிட்டுள்ளார். அதற்கு இன்னும் ஏறத்தாழ ஒரு மாதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. அதில் முஸ்லிம்களின் அபிலாஷைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனவா? ரணில் முஸ்லிம்களிடமும் பேசி ஹக்கீமும் ரிஷாதும் இதுபற்றி அவரிடம் எடுத்துக்கூறி புதிய யாப்பின் வரைபில் ஏதேனும் இணைத்திருக்கிறார்களா?
யாப்பு விடயத்தில் முஸ்லிம் தலைமைகளுக்கு ஏன் இந்த பொடுபோக்கு? முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் யாப்பை அலட்சியம் செய்கிறார்களே! யாப்பு விடயத்தில் இனியும் முஸ்லிம் சமூகம் இவர்களிடம் தங்கியிருக்க முடியுமா? இதை முஸ்லிம்கள் சமூகமயப்படுத்தி தாமே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
-Vidivelli