உலகம் முழுவதிலுமுள்ள யாத்திரிகர்களுக்கு சுற்றுலா வசதிகளை அதிகரிப்பதற்காக சவூதி அரேபியன் விமான சேவை அதிகாரிகள் ஹஜ் அமைச்சுடன் கடந்த செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஹஜ் அமைச்சர் மொஹம்மட் சாலெஹ் பென்டின் மற்றும் அரேபியன் விமான சேவையின் பணிப்பாளர் நாயகம் நாஸ்ஸெர் அல்-ஜெஸ்ஸர் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
இவ்வுடன்படிக்கையின் கீழ் நாட்டின் குறைந்த விலை விமான சேவையான பிளைநாஸ் ஹஜ் அமைச்சின் மத்திய ஆசனப்பதிவு முறைமையினூடாக யாத்திரிகர்களுக்கான பயண வசதிகளை வடிவமைத்துக் கொள்ள முடியும்.
இந்தப் புதிய தொடர்பு சவூதி அரேபியாவுக்கு வருகைதரும் பயணிகளுக்கு போட்டித் தன்மையுடைய விலையில் பயணங்களை மேற்கொள்வதனை உறுதிப்படுத்துமென பென்டின் தெரிவித்தார்.
தேசிய விமான சேவைமூலம் நேரடி விமான சேவைகளை அதிகரித்தல், ஆசன வசதிகளை அதிகரித்தல் மற்றும் புதிய இடங்களுக்கான பயணங்களையும் அறிமுகப்படுத்தல் போன்ற திட்டங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.
அரசாங்க நிறுவனங்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது சபையின் ஆற்றலை மேம்படுத்துவதோடு, விமான சேவை வியாபாரத்தையும் அதிகரிக்கும் என அல்-ஜெஸ்ஸர் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் யாத்திரிகர்களுக்கான சேவையின் தரத்தினை தொடர்ச்சியாக அதிகரிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம் எனவும் தெரிவித்த அவர், 2030 இல் 30 மில்லியன் யாத்திரிகர்கள் சவூதி ஆரேபியாவுக்கு விஜயம் செய்வர் என எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் சவூதி அரேபியன் விமான சேவை யாத்திரிகர்களுக்கென்று பிரத்தியேகமாக டிஜிட்டல் தளத்தினை உருவாக்கவுள்ளது.
-Vidivelli