அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மற்றும் கன்பரா நகரங்களிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு சந்தேகத்திற்கிடமான பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசர சேவைப் பிரிவினர் மற்றும் அவுஸ்திரேலிய சமஷ்டிப் பொலிஸார் பொதிகளை ஆய்வுக்குட்படுத்தியதாகவும் அதற்கான பின்னணி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களோ அல்லது அதிகாரிகளுக்கு இதனால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டனவா என்பது தொடர்பிலோ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
அவுஸ்திரேலியாவிலுள்ள எந்தெந்த வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு சந்தேகத்திற்கிடமான பொதிகள் அனுப்பி வைப்பட்டிருந்தன என பொலிஸார் குறிப்பிடவில்லை. எனினும் மெல்பேர்னிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய துணைத் தூதரகங்களுக்கு சந்தேகத்திற்கிடமான பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு டசினுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதரகங்களுக்கு இவ்வாறான பொதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ள அதேவேளை, பொதிகளினுள் கட்டட நிர்மாணத்திற்குப் பயன்படுத்தப்படும் புற்றுநோய் மற்றும் ஏனைய உடல்நலப் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய அஸ்பெஸ்டஸ் வைக்கப்பட்டிருந்ததாக தூதரக அலுவலர்கள் தெரிவித்தனர்.
மெல்பேர்னிலுள்ள கிரேக்கம், இத்தாலி, ஸ்பெயின், தாய்லாந்து, இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், எகிப்து, டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் துணைத் தூதரகங்களுக்கு சந்தேகத்திற்கிடமான பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பான விபரங்கள் தெரியவரவில்லை.
-Vidivelli