இராணுவ அலுவலக பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்ர நியமனம்
அடுத்த இராணுவத் தளபதியாகவும் நியமனம் பெறும் வாய்ப்பு
இராணுவத் தளபதிக்கு அடுத்தபடியாக உள்ள உயர் பதவியான இராணுவத்தின் அலுவலக பிரதானி பதவிக்கு மனித உரிமைகள் விவகாரத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான மேஜர் ஜெனரல் சவேந்ர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தின் அலுவலக பிரதானியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சம்பத் பெர்னாண்டோ கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஓய்வுபெற்ற நிலையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 மேஜர் ஜெனரல்களில் இருந்து அவர் இவ்வாறு இராணுவ அலுவலக பிரதானியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை இராணுவத்தின் மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்பாக இருந்துவந்த மேஜர் ஜெனரல் சவேந்ர சில்வா நேற்று முதல் இவ்வாறு இராணுவ அலுவலக பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இராணுவத் தலைமையகம் உறுதி செய்தது.
இராணுவத்தில் அலுவலக பிரதானியாக சவேந்ர சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத் தளபதி இல்லாத போது அவர் பதில் இராணுவத் தளபதியாக செயற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனைவிட பெரும்பாலும் இராணுவத்தின் அடுத்த தளபதியாக இராணுவ அலுவலக பிரதானியாகக் கடமையாற்றும் நபரே தெரிவு செய்யப்படும் நிலையில், லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவுக்கு அடுத்து, சவேந்ர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்படும் சாத்தியம் தற்போது அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் சுட்டிக்காட்டின.
1984 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்திருந்த மேஜர் ஜெனரல் சவேந்ர சில்வா, இறுதிக்கட்ட யுத்தத்தின்போது 58 ஆம் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய நிலையில், அப்படைப் பிரிவால் பாரிய மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டதாக குற்றமும் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே அவர் இராணுவத்தின் மிக முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். இராணுவத்தின் 19 ஆவது பயிற்சிக் குழுவின் உறுப்பினரான மேஜர் ஜெனரல் சவேந்ர சில்வா எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி தனது 55 ஆவது வயதை பூர்த்தி செய்யும் நிலையில், அவருக்கு சேவை நீடிப்பு வழங்கி இராணுவத் தளபதியாக அவரை ஆகஸ்ட் 18 ஆம் திகதியின் பின்னர் நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இராணுவத்தின் அலுவலக பிரதானி போட்டியில் முன்னணியிலிருந்த மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகேக்கு 55 வயது எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதியே பூர்த்தியாகின்றது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் மேஜர் ஜெனரல் சவேந்ர இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே இராணுவ அலுவலக பிரதானி பதவிக்கு நியமிக்கப்படலாமென படைதரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் ஏற்கனவே இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த இராணுவ அலுவலக பிரதானி பதவிக்கான பரிந்துரைப் பட்டியலிலுள்ள யாழ். கட்டளைத் தளபதியாக தற்போதுள்ள மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி எதிர்வரும் ஜூலை 22 ஆம் திகதியும், மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன எதிர்வரும் ஏபரல் 21 ஆம் திகதியும், மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க ஜூன் 15 ஆம் திகதியும், மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் ஏப்ரல் 25 ஆம் திகதியும், மேஜர் ஜெனரல் குமுது பெர்னாண்டோ ஒக்டோபர் 25 ஆம் திகதியும் தமது 55 வயதினை பூர்த்தி செய்கின்றனர்.
55 வயதின் பின்னர் பாதுகாப்பு படைகளில் சேவையாற்ற சேவை நீடிப்பு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
தற்போது இராணுவத் தளபதியாகவுள்ள லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள சேவை நீடிப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதியே நிறைவுக்கு வருகின்றது.
ஏற்கனவே இராணுவ அலுவலக பிரதானிகளுக்கு சேவை நீடிப்பு வழங்கியமை, அவர்கள் அவ்வாறு இராணுவத் தளபதியானமை போன்ற முன்னுதாரணங்கள் உள்ள நிலையில் சவேந்ர சில்வாவுக்கும் அது சாத்தியப்படுமென்று பதுகாப்பு அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தாபய ராஜபக் ஷ கடமையாற்றிய காலங்களில் பலகல்ல, ஜி.ஏ.சந்ர சிறி, நில்டயஸ், தயா ரத்னாயக்க உள்ளிட்டோருக்கு அலுவலக பிரதானி பதவியில் கடமையாற்ற பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் தயா ரத்நாயக்க உள்ளிட்டோர் பின்னாளில் இராணுவத் தளபதியாகினர்.
அதேபோல் தற்போதைய ஜனாதிபதி மைத்திரியின் அனுமதியுடன் தற்போது ஓய்வுபெற்ற இராணுவ அலுவலக பிரதானி சம்பத் பெர்னாண்டோவுக்கும் ஏற்கனவே பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே மேஜர் ஜெனரல் சவேந்ர சில்வாவுக்கு எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி 55 வயது நிறைவடைந்தாலும் அவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டு பின்னர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-Vidivelli