குருணாகல் , பொதுஹர பகுதியில் உருவச்சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள, மாவனெல்லை, கண்டி சிலை உடைப்பு விவகார சந்தேக நபர்கள் 7 பேரும் நேற்று பொல்கஹவல நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது பொதுஹர சம்பவம் தொடர்பில் அந்த ஏழு பேரையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பொல்கஹவல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலை பொதுஹர பொலிஸ் பிரிவின் கட்டுபிட்டிய வீதியில் கோண்வல பகுதியில் இருந்த உருவச் சிலைகள் சேதமாக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் பொதுஹர பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.இந் நிலையில் ஏற்கனவே கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் மாவனெல்லை பொலிஸ் பிரிவில் 2 பாதையோர புத்தர் சிலைகள் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன. இது தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், 2018 டிசம்பர் 26 ஆம் திகதி அதிகாலை 3.00 மனியளவில் வெலம்பொட பொலிஸ் பிரிவின் லெயம்கஹவல பகுதியில் மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை அடையாளம் தெரியாதோரின் தாக்குதலால் சேதப்படுத்தப்பட்டது. அதனை அண்டிய பகுதியில் இருந்த மேலும் மூன்று சிறு சிலைகளும் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
இந் நிலையில் அதே திகதியில் அதிகாலை 4.00 மணியளவில் மாவனெல்லை திதுருவத்த சந்தியில் உள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அந்த சிலையை தாக்க மோட்டார் சைக்கிளில் வந்ததாக கூறப்படும் இருவரில் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து மாவனெல்லை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னரேயே இந்த சிலை உடைப்பு விவகாரத்தில் மேலும் 6 பேரை பொலிசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த கேகாலை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபர்கள் ஏழு பேரும் தேடப்படும் மேலும் இரு சந்தேக நபர்களும் இணைந்து சிலை உடைப்பு சம்பவங்களை அரங்கேற்றியுள்ளதாக மாவனெல்லை நீதிவானுக்கு அறிவித்திருந்தனர். அத்துடன் அவர்கள் பொதுஹர உருவச் சிலை உடைப்பு விவகாரத்திலும் தொடர்புபட்டுள்ளதாக கூறிய நிலையிலேயே, நேற்று அவர்கள் பொதுஹர சம்பவம் தொடர்பில் பொல்கஹவல நீதிவான் முன் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போதே அவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணா கடந்த ஜனவரி 2 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli