சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர், லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் பத்தாண்டுகள் ஆகின்றன.
ஆனால் அவரது கொலைக்கு உடந்தையானோர் தண்டிக்கப்படுவது எப்படிப் போனாலும் இதுவரையும் கண்டறியப்படவில்லை. இந்த இலட்சணத்திலேயே ஒரு தசாப்த காலம் உருண்டோடிவிட்டது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி வியாழக்கிழமை காலை வேளை அத்திடிய சந்தியில் வைத்து இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்.
அப்போது உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டமாக இருந்தது. மஹிந்த ராஜபக் ஷவின் முதலாவது ஆட்சிக்காலத்தின் இறுதிக் கட்டமாகவும் இருந்தது. இக்காலம் நாட்டில் கொலை கலாசாரம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. குறிப்பாக ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் அடக்கியொடுக்கப்படும் கலாசாரமே அப்போது நிலவியது. ஆட்சியாளரை விமர்சிப்போர் நாட்டுத் தலைவருக்கு எதிராக செயல்படுவோர், பல சவால்களுக்கும் மத்தியிலேயே பணியாற்ற வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருந்தனர். வெள்ளைவேன் கடத்தல் கலாசாரமும் உச்ச கட்டத்திலேயே இருந்தது. கடத்திக் காணாமலாக்கப்படல், கொலை செய்யப்படல் என்று மனித உயிர்கள் மலினப்படுத்தப்பட்டு மனிதம் புனிதம் கெட்டுப் போயிருந்தது. இதற்கு ஊடகவியலாளர்களும் விதிவிலக்கல்ல.
இந்தக்கால கட்டத்திலேயே தான் பத்திரிகையாளர் லசந்தவின் உயிருக்கும் உலைவைக்கப்பட்டது.
ஆசிரியர்கள் மாணவர்களை சீராக வழி நடத்துவது போன்றே பத்திரிகையாளரும் சமூகத்தையும் நாட்டையும் நல்வழிப்படுத்துவதில் அர்ப்பணிப்புச் செய்பவர்களாவர். அதனாலேயே அவர்களது பதவியும் பத்திரிகை ஆசிரியர் என்றழைக்கப்படுகிறது.
லசந்த விக்கிரமதுங்க துணிச்சலுடன் பேனா பிடிக்கும் ஓர் ஊடகவியலாளராவார். நாட்டின் அவலங்களை, அப்படியே தொட்டுக்காட்டுவதிலேயே பத்திரிகைத் துறையில் தன்னையே அர்ப்பணிப்புச் செய்து வந்தவராவார். குறிப்பாக நாட்டுத் தலைவர்கள், அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்களை விமர்சிப்பதிலும் ஊழல்களை அல்லும் பகலும் உன்னிப்பாக அவதானித்து அச்சு வாகனமேற்றுவதில் கச்சிதமாக காரியமாற்றி வந்தவராவார். இவரின் இத்துணிச்சலே இவரது உயிருக்கு வினையாக அமைந்தது என்று எடைபோடும் நிலைக்கே இவரது கொலை அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
இவரைப்போன்ற ஊடகவியலாளர்கள் பலர், கொலை செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் உள்ளமை சர்வ சாதாரண நிகழ்வாகியுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட இந்த வரிசையில் பிரபல்யமானவர். இவரும் காணாமலாக்கப்பட்டு பல வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் இவர்கள் காணாமலாக்கப்பட காரணமானோர் இது வரையும் கண்டறியப்படாமைதான் சட்டமும் ஒழுங்கையும் வெட்கித் தலைகுனியச் செய்துள்ளது.
சவூதி அரேபிய அரசை விமர்சித்து எழுதிக்கொண்டிருந்த உறுதிமிக்க ஊடகவியலாளர் கசோக்ஜியை நுட்பமான யுக்திகளைக் கையாண்டு படுகொலை செய்த பாவிகள் கூட தற்போது கண்டறியப்பட்டு வழக்குத்தொடரப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் முடிவும் தீர்ப்பும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.
இதேபோன்றுதான் ஊடகவியலாளர் அல்லாவிட்டாலும் ரக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் விபத்து மரணம் என்று அன்று கூறப்பட்டது. பின்னர் படுகொலை என்று நிரூபிக்கப்பட்டுள்ள நிலையிலும் கொலை சூத்திரதாரி இன்னும் இனங்காணப்படவில்லை. இழுபறியோடு வழக்கு விசாரணைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊடகவியலாளர் எக்னெலிகொட மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்படாவிட்டாலும் இது விடயமாக கடற்படை உயர் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டு வழக்கு விசாரணை தொடர்கின்றது. அதிலும் பல தலையீடுகள் காரணமாக இழுபறி நிலையே காணப்படுகின்றது. ஆனால் வழக்கு விசாரணை ஹோமாகம நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதற்கும் இடையூறு விளைவிக்கும் விதத்தில் சிங்கள பௌத்த கடும்போக்கு வாதிகள் நடந்து கொண்டனர். ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரர் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தற்போது சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இதேபோன்று இதர கடத்தல், கொலை விடயங்களிலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
லசந்தவின் கொலைக்கு சில மாதங்களுக்கு முன்னர் அதாவது 2008 இறுதிப் பகுதியில் கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் வெள்ளை வேனில் வந்த குழுவால் கடத்தி காணாமலாக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர்களது வழக்கும் தற்போது பல தவணைகளாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. இதிலும் முன்னைய பரிபாலனத்தின்போது கடமையிலிருந்த கடற்படை உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர். இதற்கும் கடும்போக்கு பௌத்த குருமார்களும், கூட்டு எதிரணியினரும் இடையூறு விளைவித்துக் கொண்டிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.
எனவே அரசியலும் சுயநல சிந்தனையும் புகுந்து விளையாடிக் கொண்டு சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்படுவதில் பல புறத்திலும் தடைகளை விளைவித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த வகையிலே லசந்தவின் கொலை விடயமாக இதுவரை நடந்துள்ள பின்னணியை சற்று உற்று நோக்குவோம்.
லசந்தவின் கொலை அன்றைய ஆட்சிக்குப் பெரும் தலையிடியாகவே அமைந்தது. அன்றும் கொலைகாரர்களைக் கண்டறிவதிலேயே தட்டிக் கழிப்பும் மூடி மறைப்புமே நடந்தேறியதேயன்றி உருப்படியாக நடந்தது ஒன்றுமில்லை. பத்தாண்டுகள் கடக்கும் இன்றும் கூட நாடு அதே நிலையிலேயேதான் உள்ளது.
2009 ஜனவரி 8 ஆம் திகதி காலையில் லசந்தவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஐந்து இலக்கங்கள் கண்டறியப்பட்டன. அவற்றை பயங்கரவாத விசாரணைப் பிரிவு பரிசீலனை செய்தது. அதன் மூலம் ஜேசுதாசன் என்பவரது அடையாள அட்டை இலக்கத்தில் பெறப்பட்ட தொலைபேசி இலக்கம் என தெரியவந்தது. ஜேசுதாஸன் விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது இராணுவ புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பியவங்ஸ என்பவரே தனது ஆள் அடையாள அட்டையைப் பிரயோகித்து மேற்படி தொலைபேசி அட்டை பெறப்பட்டதாக வாக்கு மூலம் அளித்துள்ளார். அப்போது மருதானை திரிப்போலி வர்த்தக சந்தையில் அமைந்துள்ள விசேட புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றுபவர் பியவங்ஸ என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்த ஜேசுதாஸன் 2012 ஆம் ஆண்டு சிறைக் கூடத்திலேயே மரணமடைந்திருந்தார். அதுவரையிலும் பியவங்ஸ என்பவரிடமிருந்து சம்பந்தப்பட்ட விசாரணைக் குழு எத்தகைய வாக்கு மூலத்தையும் எடுத்திருக்கவில்லை.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது லசந்த விக்கிரமதுங்க, வஸீம் தாஜுதீன் உள்ளிட்ட கொலைகள் மற்றும் முன்னைய ஆட்சியின் ஊழல் மோசடி, தில்லுமுல்லுகள் யாவும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றே தேர்தல் பிரசாரம் அமைந்தது. அதன் விளைவாக 2015 ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சி கைமாறியது. பின்னர் மேற்படி விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனால் பலதரப்பட்ட தலையீடுகளால் இவற்றுக்கும் இடையூறு ஏற்பட்டு இழுபறியே நிலவியது. நாட்டைக் காப்பாற்றியோர் தண்டிக்கப்படக் கூடாது என்ற கோசம் ஒரு புறம். இராணுவப் பாதுகாப்புத்துறையினர் காப்பாற்றப்படவேண்டும் என்ற வாதம் மறுபுறம். இவை விசாரணை முன்னெடுப்புக்களை பிசுபிசுக்கவே செய்தன. யார் செய்தாலும் குற்றம் குற்றமே! குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்ற தாரக மந்திரத்திலும் அடி விழவே செய்தது. நீதி பெட்டிப் பாம்பாக்கப்பட்டு அரசியல் இலாபமும் சுயநலமுமே மேலோங்கியிருந்தது.
இந்நிலையில் லசந்தவின் வழக்கும் 2016 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் மேற்படி வழக்கை விசாரணை செய்து கொண்டு வந்த பயங்கரவாத விசாரணைக்குழுவுக்கு இந்த வழக்கை குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்திணைக்களம் பியவங்ஸவிடம் விசாரணையை மேற்கொள்ள முயன்றபோது, இராணுவத்துறை அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தது. நீதிமன்றத்தால் பல தடவைகள் இது விடயமாக கட்டளை பிறப்பித்ததால், ஒரேயொரு சந்தர்ப்பத்தில் பியவங்ஸ அதுவும் இராணுவ உயர் அதிகாரிகளுடனே தான் விசாரணைக்கு முகம் கொடுத்தார். இந்நிலையில் கொலை குறித்து பலமான சாட்சிகள் இல்லையென்று இவ்வழக்கு பலவீனப்பட்டுப் போன நிலையில், 2016 செப்டெம்பர் 27 ஆம் திகதி லசந்தவின் பூதவுடல் நீதிமன்ற ஆணைக்கமைய மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டது. அதன் போது டாக்டர் மொஹான் சில்வாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை மற்றும் மரண விசாரணை அறிக்கையும் அரச பகுப்பாய்வு அறிக்கையும் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதாக உள்ளமையும் தெரிய வந்தது.
எது எவ்வாறாக அமைந்த போதிலும் கொலையாளி கண்டறியப்படாத ஒரு கொலையாகவே இத்தீர்ப்பும் அமைந்தது.
அதனால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ வீரரும் விடுவிக்கப்பட்டார். இதில் இராணுவத்தைக் காப்பாற்றும் உயர்மட்ட தலையீடும் பக்கபலமாக அமைந்தது.
அப்போது ஆட்சியிலிருந்த பாதுகாப்புச் செயலாளரிடமோ, இராணுவத் தளபதியிடமோ இக்கொலை குறித்த எத்தகைய விசாரணைகளும் முன்னெடுக்கப்படாது வெறும் சம்பிரதாய நடவடிக்கைகளே மேற்கொண்டு யாவும் மூடி மறைக்கப்பட்டமையே கண்ட பலனாகும்.
இன்று லசந்தவின் பத்தாவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே இக்கொலை தொடர்பாக எதுவும் கையாலாகாத நிலையில் ஆண்டுகள் தோறும் ஜனவரி 8 ஆம் திகதி இவரது நினைவு தினம் மட்டுமே அனுஷ்டிக்கப்படுகிறது. லசந்த விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என இன்றைய நாளில் பிரார்த்திப்போம்.
-Vidivelli