பெண்ணொருவர் விவாகரத்துச் செய்யப்படும்போது அது தொடர்பான தகவலை குறித்த பெண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிப்பதற்கான புதிய சட்டம் சவூதி அரேபியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இரகசிய விவாகரத்துக்களைத் தடுப்பதற்காகவும், பெண்கள் தாபரிப்பு முதலிய பாதுகாப்புக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தமது விவாக நிலையினை சரிவர உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் இப்புதிய சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பழைமைவாத மன்னராட்சியுடனான சவூதி அரேபியாவில் கடந்த வருடம் பெண்கள் வாகனம் செலுத்துவதற்கிருந்த தடை நீக்கப்பட்டமை உள்ளடங்கலாக பெண்களுக்கு அதிக உரிமைகளை வழங்கும் செயற்பாடு பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானினால் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து இப் புதிய நகர்வும் இடம்பெற்றுள்ளது.
பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இலக்கின் ஒரு கட்டமாக சவூதி அரேபிய நீதிமன்றங்கள் அத்தகைய விவாகரத்து தொடர்பான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் அனுப்பிவைக்க ஆரம்பித்துள்ளதாக சவூதி அரேபிய நீதியமைச்சு தனது இணைய தளத்தில் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அமைச்சின் இணைய தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் பெண்கள் தமது விவாக நிலையினைப் பரீட்சிக்க முடியும் அல்லது விவாகரத்துப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய நீதிமன்றத்திற்கும் விஜயம் செய்ய முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரபு நாடுகளில் வெறுமனே பெண்களை ஆண்கள் விவாகரத்துச் செய்துவிட்டு சென்றுவிடுகின்றார்கள். இது அவர்களுக்கு சமத்துவத்தை தற்போது வழங்கியுள்ளது என்று உலகளாவிய உரிமை அமைப்பினைச் சேர்ந்த பெண் அதிகாரியான சுஆத் அபூ தையேஹ் தெரிவித்தார்.
‘பெண்கள் ஆகக் குறைந்தது தாம் விவாகரத்துச் செய்யப்பட்டுள்ளோமா என்பதேயேனும் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இது மிகவும் சிறியதொரு நடவடிக்கைதான். எனினும் சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாகும்’ எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும் வெறுமனே பெண்ணொருவர் தான் விவாகரத்து செய்யப்பட்ட தகவலை அறிந்து கொள்வதால் மாத்திரம் தாபரிப்பினை பெற்றுக் கொண்டதாகவோ, அப்பெண் தனது பிள்ளைகளின் பாதுகாவலாகும் உரிமையினைப் பெற்றதாகவோ கருத முடியாது எனவும் அபூ தையேஹ் தெரிவித்தார்.
அண்மைய ஆண்டுகளில் சவூதி அரேபியா தனது எண்ணெய் பொருளாதாரத் தங்கியிருப்பை பன்முகப்படுத்தி வரும் நிலையில் தொழிலாளர் படையில் பெண்களின் வகிபாகத்தினை அதிகரிக்கும் வகையில் அந்நாடு முதன் முறையாக பெண்கள் விளையாட்டரங்குகளுக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதோடு உள்ளூர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையினையும் வழங்கியுள்ளது.
எனினும், பொது இடங்களில் பெண்கள் தளர்வான உடலை முழுவதுமாக மூடக்கூடிய அபாயா ஆடையினை அணிய வேண்டும் என்ற கண்டிப்பான ஆடை விதி உள்ளிட்ட போராட்டங்கள் உள்ளடங்கலாக அதிக சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென சமூக ஊடகங்களில் பெரும்பாலான பெண்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோர் குறிப்பிடுவது என்னவெனில், சவூதி அரேபியாவில் மிகவும் நெருடலாக இருக்கின்ற விடயம் அந்நாட்டின் குடும்பத்தின் பாதுகாவல் தொடர்பான கொள்கையாகும். அதில் பெண்கள் வேலைக்கு செல்வதாயினும், பயணம் செய்வதாயினும், திருமணம் செய்வதாயினும், மருத்துவ சிகிச்சையினைப் பெற்றுக்கொள்வதாயினும் கூட ஆண் உறவினரின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
குடும்பத்தின் ஆண் பாதுகாவலர் முறைமை மிகப் பிரதானமான பிரச்சினை அது நீக்கப்பட வேண்டும். அது பெண்களை அவர்களது வாழ்நாளின் ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுப்படுத்துகின்றது. அந்த முறைமை சவூதிப் பெண்களை மிகவும் நெருக்கடிக்குள்ளாக்குகின்றது எனவும் அபூ தையேஹ் தெரிவித்தார்.
சவூதி அரசாங்கத்தின் மறுசீரமைப்புக்களை பலர் பாராட்டுகின்றனர், எனினும் அந்த மறுசீரமைப்புக்கள் மாற்றுக்கருத்துடைய டசின் கணக்கான பெண் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சில பெண் செயற்பாட்டாளர்கள் மீது சித்திரவதை மற்றும் பாலியல் தொந்தரவுகள் மேற்கொள்ளப்பட்டதாக சவூதி அரேபியா மீது கடந்த நவம்பர் மாதம் சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பன குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. அக்குற்றச்சாட்டுக்களை சவூதி அரேபியா மறுத்துள்ளது.
கடந்த புதன்கிழமை அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சவூதியில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களைப் பார்வையிட்டு அவர்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள், சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது மற்றும் குடும்பத்தினர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என வெளிவரும் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஐக்கிய இராச்சியத்திலுள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்கு தடுப்புக்காவல் மீளாய்வுக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ்பின் பிளன்ட் எழுதிய கடிதத்தில் ஜித்தாவுக்கு அருகில் உள்ள தஹ்பான் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களுடன் பேசுவதற்கு ஒழுங்குகளை மேற்கொள்ள உதவுமாறு இளவரசர் மொஹமட் பின் நவாப் பின் அப்துல் அஸீஸை கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli