வரவு – செலவு திட்டத்திற்கு முன்னர் சு.க.வினர் பலர் எம்முடன் இணைவர்
ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிப்பு
மார்ச் மாதம் வரவு – செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 20இற்கும் அதிகமான உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டு வரவு – செலவுத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை பலப்படுத்துவார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் வரவு -– செலவுத் திட்டத்திற்குத் தயாராகி வருகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்த வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் எம்முடன் கைகோர்ப்பது போன்று இணைந்து இறுதியில் எம்மையே நெருக்கடிக்கு தள்ளியதை கடந்த காலத்தில் அவதானிக்க முடிந்தது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் மனம் தளராது மக்களின் ஆணையையும் மீறாது ஜனநாயக ரீதியில் போராடும் சகல தரப்பையும் இணைத்துக்கொண்டு கடந்தகால அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து வெற்றி பெற்றோம். அதற்கமையவே எம்மால் மீண்டும் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் சிலர் இன்றும் எம்மை வீழ்த்த வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றனர். கடந்தாண்டு இறுதியில் வரவு -– செலவுத் திட்டத்தை நாம் சபையில் முன்வைக்க எடுத்த முயற்சிகளை ஜனாதிபதியின் அணி தோற்கடிக்க நினைத்தனர். அதற்காக எடுத்த முயற்சிகளின் விளைவாகவே எம்மால் வரவு -–செலவுத் திட்டத்தை சபையில் உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியாது போனது. எனினும் இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை முன்வைத்து நெருக்கடிகளை சமாளிக்க எம்மால் முடிந்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான வரவு- –செலவுத் திட்டத்தை முன்வைக்கத் தயாராகி வருகின்றோம். எனினும் அதனை குழப்பவும் திட்டம் தீட்டப்பட்டு வருகின்றது. அத்துடன் இந்த நாட்டில் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் தீர்வுகளுக்கான முயற்சிகளை எமது ஆட்சியில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முழுமையான ஈடுபாடும் நோக்கமும் எமக்குள்ளது. அதற்கான முயற்சிகள் அரசியலமைப்பு ரீதியாகவும், அரசாங்கம் என்ற வகையில் அமைச்சுகளின் ஊடாகவும் நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli