இஸ்லாம் தீவிரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. மாவனெல்லையில் இடம்பெற்ற புத்தர்சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்கள் போன்றனவற்றை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இச்சம்பவங்கள் தொடர்பில் குற்றபுலனாய்வுப் பிரிவு தீர விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கும் மக்களின சக வாழ்விற்கும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும் உலமா சபை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணாந்துவிடம் உறுதியளித்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினது தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த சனிக்கிழமை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணாந்துவை அவரது காரியாலயத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் முஸ்லிம் சமூகத்தின் தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடுகளை விளக்கியது.
இக் குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி, உதவிச்செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸிம், ஊடக செயலாளர் பாஸில் பாரூக் மற்றும் ரபீக் (எக்ஸ்போ லங்கா), மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணாந்து உடனான கலந்துரையாடல் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி கருத்து தெரிவிக்கையில்;
‘ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினை நாம் எதிர்க்கிறோம்’. அந்த அமைப்பின் செயற்பாடுகள் இஸ்லாத்துக்கு முரணான தென்று உலகில் உலமா சபையே முதன் முதல் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து பிரகடனம் ஒன்றினை வெளியிட்டது. இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதம் இல்லை என்பது புலனாய்வு பிரிவினரின் தகவல்கள் மூலம் இதற்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் பாதுகாப்பு செயலாளருக்குத் தெளிவுபடுத்தினோம்.
இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது. அதனை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. உலமா சபை நாட்டின் பாதுகாப்புக்காக தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அனைத்து இன மக்களிடையே சகவாழ்வினை உறுதி செய்ய வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடராக இடம்பெறுகின்றன.
இந்தப் பணிகளில் சிவில் சமூக அமைப்புகளும், தரீக்காக்களும், இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளும் எமக்கு உதவி செய்கின்றன என்பதனை தெளிவுபடுத்தினோம். தேசிய நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டினையும் இனங்களுக்கு இடையில் நல்லுறவினையும் வளர்ப்பதற்காக நாம் அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகள் மற்றும் பௌத்த மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்தோம்.
அனர்த்தங்களின் போது இன, மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களுக்கும் உதவிகளை நல்கி வருகிறோம் என்பதனையும் தெரிவித்தோம்.
தீவிரவாதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமையை நாம் உடனடியாகக் கண்டித்தோம். இதன் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இஸ்லாம் தீவிரவாதத்தை அனுமதிக்கவில்லை. சகவாழ்வினையும் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வுகளையுமே இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது என்றும் தெரிவித்தோம் என்றார்.
பாதுகாப்பு செயலாளருக்கு உலமா சபையின் வெளியீடான ‘சமாஜ சங்வாதய’ என்ற நூல் பொதியும் கையளிக்கப்பட்டது.
சந்திப்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் உட்பட பாதுகாப்பு செயலகத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
-Vidivelli