முஸ்லிம்கள் பஸ் வண்டிக்குள் இருக்கிறார்களா அவர்களைக் கொல்ல வேண்டும் என்று பொல்லுகளுடனும், இரும்புக்கம்பிகளுடனும் பஸ்ஸுக்குள் அன்று ஏறியவர்கள் சதகத்துல்லாஹ் மெளலவியை தலையில் பலம்கொண்ட மட்டும் தாக்கினார்கள்.
கண்டி, திகன பகுதிகளில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் பரவிக்கொண்டிருந்த காலமது. கடந்த வருடம் மார்ச் மாதம் 7ஆம் திகதி அன்று இனவாதிகளால் தாக்கப்பட்ட சதகத்துல்லாஹ் மெளலவி 9 மாதங்கள் 19 நாட்களின் பின்பு வபாத்தானர். இனவாதிகளின் இலக்கு நிறைவேறியது.
தாக்கப்பட்ட நாளிலிருந்து அவர் வபாத்தாகும் வரை உணர்வற்று வைத்தியசாலை கட்டில்களிலும், வீட்டிலும் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தார். டிசம்பர் 26 ஆம் திகதி இரவு 11 மணிக்கு கண்டி வைத்திய சாலையில் உயிர்நீத்தார்.
எனது வாப்பாவினால் பேச முடியாதிருந்தாலும், அவர் மோசமாகத் தாக்கப்பட்டு உணர்வுகள் இழந்திருந்தாலும் அடிக்கடி ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என்று கூறிக்கொண்டிருந்தார். தொழவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார் என்று அவரது மகள் டாக்டர் பாத்திமா சக்கூரா எம்மிடம் தெரிவித்ததிலிருந்து இஸ்லாத்தின் மீது அவருக்கு இருந்த பற்று நிரூபணமாகிறது
கடந்த டிசம்பர் மாதம் 26 ஆந் திகதி அன்னார் வபாத்தானதும் கண்டி ஹீரஸ்ஸகலயிலுள்ள அவரது வீட்டுக்கு உறவினர்கள், நலன்விரும்பிகள், நண்பர்கள், உலமாக்கள் என்று படையெடுத்தனர். அடுத்த இரு தினங்களிலும் ஊடகங்களில் அனுதாபச் செய்திகள் பத்திரிகைகளின் பக்கங்களை நிறைத்தன.
அவர் தாக்கப்பட்டு ஒன்பது மாதங்களுக்கும் மேலாக படுத்தபடுக்கையாய் சிகிச்சை பெற்று வந்த காலப்பகுதியில் அவர் தாக்கப்பட்டமை தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத முஸ்லிம் அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகள் அனுதாப செய்திவெளியிடுவதில் மாத்திரம் தீவிரம் காட்டின.
அவருக்கு நடந்தது என்ன?
சதகத்துல்லாஹ் மெளலவி கடந்த வருடம் மார்ச் மாதம் 7ஆம் திகதி காலை 9 மணிக்கு கண்டி ஹீரஸ்ஸகலயிலுள்ள தனது வீட்டிலிருந்து அக்குறணைக்கு ஒரு தேவையின் நிமித்தம் புறப்பட்டுச் சென்றார்
மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட அவர் மோட்டார் சைக்கிளை கண்டி லைன் பள்ளிவாசலில் நிறுத்திவிட்டு கண்டியிலிருந்து அக்குறணைக்கு பஸ் வண்டியிலே சென்றார்.
அக்குறணையில் தனது தேவைகளை நிறைவேற்றிவிட்டு கண்டிக்குத் திரும்புவதற்காக அக்குறணை 6ஆம் மைல்கல்லில் பஸ்ஸில் ஏறியுள்ளார். அவர் பஸ் ஏறி பத்து நிமிடங்களில் பஸ் அம்பத்தென்ன என்ற இடத்தில் அடைந்ததும் இச்சம்பவம் நடத்திருக்கிறது. அப்போது நேரம் மு.ப. 11 மணி.
அந்நேரத்தில் அம்பத்தென்ன பகுதியில் முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள் தீவிரமடைந்திருந்தன. பள்ளிவாசல்களையும் , முஸ்லிம்களின் வீடுகளையும் தாக்குவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கைக்குண்டுடன் சென்றபோது அக்குண்டு தானாக வெடித்ததால் பலியாகியிருந்தான். அப்போது முஸ்லிம்கள் குண்டுவீசி இளைஞனைக் கொன்றதாக செய்தி பரப்பப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் பெரும்பான்மை இனவாதிகள் வாகனங்ளை நிறுத்தி தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது இனவாத கும்பல் சதகத்துல்லாஹ் மெளலவி பயணித்த பஸ்வண்டியில் ஏறி அவரைத் தாக்கியுள்ளது.
அன்று என்ன நடந்தது என சதகத்துல்லாஹ் மௌலவி தாக்கப்பட்ட பின்பு அவருக்கு உதவியாக இருந்த முருத்தலாவையைச் சேர்ந்த மொஹமட் ஐயூப் (57) விளக்கினார்.
பஸ் வண்டி அநுராதபுரம் இ.போ.ச டிப்போவுக்குச் சொந்தமானதாகும். நானும் அந்த பஸ்ஸிலே பயணமானேன். சதகத்துல்லாஹ் மெளலவியை எனக்கு 20 வருடங்களாகத் தெரியும். அம்பத்தென்ன என்ற இடத்தில் பஸ்ஸுக்குள் ஏறிய நால்வர் முஸ்லிம்கள் இருக்கிறார்களா ? அவர்களைக் கொல்ல வேண்டும் என்றார்கள்.
அப்படி ஒருவருமில்லை என்று பஸ்ஸில் பயணித்தவர்கள் கூறினார்கள். அப்போது தலையில் தொப்பியுடனே சதகத்துல்லாஹ் மெளலவி இருந்தார். அவரை இனம் கண்டு பொல்லுகளால் தலையில் தாக்கினார்கள். அவர் மயக்கமுற்று அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்தும் கீழே சரிந்தார். தலை வெடித்திருந்தது. இரத்தம் வேகமாக வெளியேறியது.
பஸ் நடத்துநர் சாரம் ஒன்றினைத் தந்தார். சாரத்தினால் நான் இரத்தத்தைத் துடைத்தேன். பஸ் வண்டியை சாரதி பொலிஸ் நிலையம் கொண்டு செல்லவில்லை. கண்டி நகரிலே பஸ்சாரதி எங்களை இறக்கி விட்டார். நான் சதகத்துல்லாஹ் மெளலவியை கண்டி லைன் பள்ளிவாசலில் ஒப்படைத்து விட்டு திரும்பினேன். அங்கிருந்து அவர் ஹீரஸ்ஸகலயிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பின்பு அவரின் உறவினர் ஒருவரை நான் தொடர்பு கொண்டபோது அவர்வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது என்றார்.
சமூகத்தின் மெளனம்
ஆளுமைகள் நிறைந்த சமூகத்தின் விடியலுக்காய் பணிகள் புரிந்த ஓர் புத்திஜீவியான சதகத்துல்லாஹ் மௌலவி குண்டர்களால், இனவாதிகளால் தாக்கப்பட்டு 9 மாதங்களுக்கும் மேலாக குன்றுயிராகக் கிடந்து உயிர்துறந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏன் சமூகம் மௌனம் காத்தது என்பதுதான் புதிராக இருக்கிறது.
மாவனெல்லை சம்பவங்களினையடுத்து விரைந்து செயற்பட்டுள்ள உளவுப்பிரிவும் பாதுகாப்புப் பிரிவும் சதகத்துல்லாஹ் மெளலவியின் கொலைக்குப்பின்பும் மௌனம் காப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
சர்வமத தலைவர்களின் அமைப்பில் ஏனைய மதத்தலைவர்களுடன் ஒன்றாக அமர்ந்து இன ஐக்கியத்துக்காக தனது காலத்தைச் செலவிட்ட சதகத்துல்லாஹ் மௌலவி கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் இருந்தவர்கள், இந்தக் கொலையைச் செய்தவர்கள் இனம் காணப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும்.
அரசுக்குச் சொந்தமான இ.போ.ச பஸ்வண்டியினுள் வைத்தே அவர் தாக்கப் பட்டிருக்கிறார். இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றால் பஸ் சாரதி பஸ்ஸை நேரடியாக பொலிஸ்நிலையத்துக்குக் கொண்டு சென்றிருக்கவேண்டும். கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையம் தாக்குதல் நடாத்தப்பட்ட இடத்திலிருந்தும் இரண்டு மூன்று கிலோ மீற்றர்களிலே அமைந்துள்ளது. சாரதி கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தையும் கடந்து நேராக கண்டிக்கே பஸ்ஸை கொண்டு சென்று கண்டியில் சகதகத்துல்லாஹ் மௌலவியை இறக்கிவிட்டிருக்கிறார்.
பொலிஸில் வாக்குமூலம்
சம்பவம் நடந்து மூன்று தினங்களின் பின்பே கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு சம்பந்தப்பட்ட பஸ்வண்டி கொண்டுவரப்பட்டுள்ளது. சதகத்துல்லாஹ் மௌலவி தாக்கப்பட்ட பின்பு அவருக்கு உதவியாக இருந்த மொஹமட் ஐயூபும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். பொலிஸார் அவரது வாக்கு மூலத்தைப் பதிவு செய்துள்ளனர். பஸ் வண்டியின் சாரதி மற்றும் நடத்துநரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
வாக்குமூலமளித்த மொஹமட் ஐயூப் இது தொடர்பில் விளக்கமளிக்கையில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு பஸ்வண்டி கொண்டு வரப்பட்டிருந்த போதும் தாக்குதல் இடம்பெற்றபோது பஸ்வண்டியில் இருந்த சி.சி.ரி.வி கமரா அகற்றப்பட்டிருந்தது. அன்று இருந்த சி.சி.ரி.வி கமரா கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தபோது அகற்றப்பட்டிருந்தது என்றார்.
டாக்டர் பாத்திமா சக்கூரா
டாக்டர் பாத்திமா சக்கூரா சதகத்துல்லாஹ் மௌலவியின் மகள். அவர் ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானின் வைத்தியசாலையொன்றில் டாக்டராகக் கடமையாற்றுகிறார். அவர் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில், ‘எமது தந்தையின் இழப்பு எம்மை சோகத்தில் ஆழ்த்தி விட்டது. அவர் எப்போதும் சமூகத்துக்காகவும், சமயத்துக்காகவும் பாடுபட்டவர். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் நல்லுறவினையும் நிலைநாட்டுவதில் மும்முரமாகச் செயற்பட்டார்.
எதுவித குற்றமும் செய்யாத அப்பாவியான எனது தந்தை இனவாதிகளால் கொலை செய்யப்பட்டுவிட்டார். 9 மாதங்களாக அவர் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாதிருப்பதற்கு அரசாங்கம் திட்டங்களை வகுத்துச் செயற்படவேண்டும்.
குற்றவாளிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.
எனது தந்தையின் நினைவாக சமூக ஆர்வலர்களும், சிவில் அமைப்புகளும் ஒன்றிணைந்து சமூகத்துக்காக ஏதாவது ஒன்றினைச் செய்ய வேண்டும். எனது தந்தை வாழ்ந்த ஹீரஸ்ஸகல பகுதியில் சுமார் 210 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றன. சுமார் 800 முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கென்று ஓர் மையவாடி இல்லை. ஜனாஸாக்களை கண்டி–கட்டுகலை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடிக்கே எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. எனவே எனது தந்தையின் நினைவாக இப்பகுதியில் ஓர் மையவாடியை அமைக்க ஏற்பாடுகள் செய்வது நல்லதென நினைக்கிறேன்.
எனது தந்தையின் மருந்து செலவுகளுக்காக 2 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. தந்தை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 3 மாதங்கள் சிகிச்சை பெற்றார். அரசாங்க வைத்தியசாலையிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் நாம் அவருக்கு சிகிச்சையளித்தோம்.
அவர் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நிலையிலும் ‘பாங்கு சத்தம் கேட்கிறது. தொழ வேண்டும்’ என்றே கூறிக்கொண்டிருந்தார். அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்ததால் தலையில் ஒரு சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அவரது இறுதி நாட்களில் மிகவும் கஷ்ட்டப்பட்டார் என்றார்.
மகன் சதீக் அலாம்
சதகத்துல்லாஹ் மௌலவியின் மகன் சதீக் அலாம் கணினி பொறியியலாளர். அவர் தனது தந்தை பற்றி தெரிவிக்கையில், தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த காலப்பகுதியில் தந்தைக்கு அரசாங்கத்தினால் நஷ்ட ஈடாக 2 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டது. அரசியல்வாதிகள் எந்த உதவியும் செய்யவில்லை. தனிநபர்களும், தந்தையின் பழைய மாணவர்களும் உதவிகள் செய்தார்கள்.
எனது தந்தைக்கு ஏற்பட்டது போன்ற சம்பவங்கள் எமது நாட்டில் இனி ஒருபோதும் நடைபெறக்கூடாது என்று நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறான இனவாத செயல்களில், வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் வைத்தியர்களும், தாதிமாரும் ஏனைய ஊழியர்களும் பல உதவிகளைச் செய்தார்கள். அவர்கள் நன்றிக்கு உரியவர்களாவர்.
சமூகத்துக்கும், சமயத்துக்குமென்ற தனது வாழ்நாட்களை அர்ப்பணித்த தந்தையின் நினைவாக சமூகம் ஏதேனும் ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அது புலமைப் பரிசில் நிதியமாக இருக்கலாம் அல்லது பாடசாலைக் கட்டடமாகக்கூட இருக்கலாம் என்றார்.
சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது
சதகத்துல்லாஹ் மௌலவி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் ஏ.சி.எம். அமானுல்லாஹ் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பத்தென்னயில் இடம்பெற்றுள்ளதால் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரே விசாரணைகளை முன்னெடுத்தனர். கட்டுகஸ்தோட்டை பொலிஸார், சகோதரர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரைக் கைதுசெய்து நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த மாதம் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்கள் என அமானுல்லாஹ் தெரிவித்தார்.
நீதி நிலைநாட்டப்பட வேண்டும்
சதகத்துல்லாஹ் மௌலவி இனவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதனாலே எம்மை விட்டும் பிரிந்தார். இதுவோர் கொலையாகும். சதகத்துல்லாஹ் மௌலவிக்கு நேர்ந்த கொடுமையை சிங்கள, ஆங்கில மொழி ஊடகங்கள் ஏன் தமிழ் ஊடகங்கள் கூட வெளிச்சத்துக்குக் கொண்டு வரவில்லை.
அவர் ஒரு மதகுரு, இதேவேளை இந்நாட்டில் பெரும்பான்மை இன, மதகுருவொருவர் இந்நிலைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் நாடெங்கும் வன்செயல்கள் பரவியிருக்கும். அந்த வகையில் முஸ்லிம்கள் பொறுமை காத்திருக்கிறார்கள். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.
இதனை முஸ்லிம் அரசியல் தலை மைகள் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். பாராளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்ப வேண்டும். எமது அரசியல் தலைமைகள் அனுதாபச் செய்திகளுடன் மாத்திரம் அடங்கிப் போகக் கூடாது. சதகத்துல்லாஹ் மௌலவியின் வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
சதகத்துல்லாஹ் மௌலவிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வரலாற்றில் கறைபடிந்த சம்பவமாகும். உயிரிழப்புக்குப் பின்பு நஷ்டஈடுகள் வழங்குவதினால் மாத்திரம் வன்செயல் களுக்குத் தீர்வுகாண முடியாது என்பதை அரசு உணர்ந்து மாற்றுத் திட்டங்களை வகுக்க வேண்டும். நல்லிணக்கம், சகவாழ்வுக்கான அடித்தளம் உறுதியாக அமைக்கப்பட வேண்டும். சதகதுல்லாஹ் மௌலவிக்காகப் பிரார்த்திப்போம்.
-Vidivelli