பேதங்களின்றி நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவேன்
வீடமைப்பு நிர்மாணத் துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித்
எமக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பேதமின்றி எமது நாட்டு மக்களுக்காக உச்ச அளவில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவேன் என வீடமைப்பு நிர்மாணத் துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை நகரில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சரை வரவேற்பதற்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பிரதான நகரங்கள் எங்கும் பாரியளவில் மக்களினால் வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இதில் பிரதி அமைச்சர் திலிப் வெதஆரச்சியுடன் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, வீதி நெடுகிலும் அமைச்சரை வரவேற்பதற்காக பதாதைகளுடன் வாகனப் பேரணிகளும் இடம்பெற்றன.
வீடமைப்பு நிர்மாணத் துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ இங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது ஒக்டோபர் 26 நிகழ்வின் பின்பு மீண்டும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களினை ஆரம்பிப்பதற்காக வருகின்ற இந்த பயணத்தில் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும்.
நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் நாட்டில் வாழக் கூடிய உரிமை இருந்தால் அந்த மக்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமை இருந்தால் இந்த மக்களுக்கு தங்களுக்கென்றே காணி உரிமையினை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தினதும் பொறுப்பு என நான் நினைக்கின்றேன். காணி உரிமை இல்லாத பிரசைகள் பெயருக்கு மாத்திரம் பிரசைகளாக பல்வேறு அரசாங்கங்களும் கருதி செயற்பட்டுள்ளது.
எமது நாட்டு பிரசைகளின் காணி உரிமைக்கு எவ்வித பெறுமதியினையும் யாரும் பெற்றுக் கொடுக்கவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டிலுள்ள சகல பிரசைகளுக்கும் காணி உரிமையினை பெற்றுக் கொடுத்து அதனை சட்ட ரீதியானதாக மாற்றியமைத்து அரசியல் யாப்பிற்குட்படுத்த வேண்டுமென்ற தெளிவான கருத்தில் இருக்கிறார்கள்.
நானும் அதே கருத்தில்தான் இருக்கிறேன். கடந்த இரண்டு மாத காலத்தில் அரசியல் யாப்பினை மீறி சட்டவிரோதமான முறையில் அரசாங்கம் ஒன்று உருவானது. இதற்கு எதிர்ப்பினை தெரிவித்து நாம் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினூடாக நீதிமன்றிற்கு சென்றோம். நாம் இதனூடாக எமது அரசியல் மற்றும் சனநாயக உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொண்டோம். எமது உரிமைகள் மீறப்பட்டால் நீதிமன்றின் உதவியை நாடுவதற்கான உரிமை சகலருக்கும் உண்டு. இதற்கு நாட்டு மக்களின் பொருளாதார உரிமைகளும் உள்ளடக்கப்படல் வேண்டும் எனவும் நான் நம்பிக்கை கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.
-Vidivelli