வடக்கு மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்குவோம்

0 852

வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை அரசாங்கமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

குறித்த வெள்ளம் காரணமாக 38,209 குடும்பங்களைச் சேர்ந்த 118,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2827 குடும்பங்களைச் சேர்ந்த 8936 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து 27 முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் பலர் வெள்ளம் வடிந்து மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ள போதிலும் முழுமையாக தமது வீடுகள், வாழிடங்களை இழந்தோர் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

வெள்ள அனர்த்தத்தினால் 2 பேர் மரணமடைந்துள்ளனர். 170 வீடுகள் முழுமையாகவும் 3506 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பெருமளவிலான விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளதுடன் கால்நடைகளும் அதிகளவில் இறந்துள்ளன. சுமார் 43 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளதுடன் வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் சில இடங்கள் மாத்திரம் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பினை நிவர்த்தி செய்வதற்கு சுமார் 3 ஆயிரம் மில்லியன் ரூபா தேவைப்படும் என கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களினால் கணிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விரு மாவட்டங்களில் கூரைத் தகடுகள், நில விரிப்புகள், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள், கூரை விரிப்புகள் என்பன முதன்மைத் தேவையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளவர்களுக்கு வீடுகளை திருத்திக் கொள்வதற்கு முதற்கட்டமாக 10,000 ரூபாவும் மதிப்பீட்டுப் பணிகளின் பின்னர் 250,000 வரையில் நிதியுதவி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிலைமை காரணமாக வட மாகாணத்தில் பெருமளவிலான விளைநிலம் நீரில் மூழ்கியுள்ளதால் ஏக்கருக்கு 40,000 ரூபா வரையில் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  சுமார் 28 குளங்களும் சேதமடைந்துள்ளன. இவற்றை புனரமைக்க 31 மில்லியன் ரூபா நிதி தேவைப்படும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பலத்த பாதிப்புகளைச் சந்தித்துள்ள குறித்த மாவட்டங்களில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். எனினும் மேல் மாகாணத்திலும் தெற்கிலும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் தொண்டு நிறுவனங்கள், சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தை வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் காண்பிக்கவில்லை எனும் விமர்சனமும் இப்போது முன்வைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் பலர் இந்த அனர்த்தத்தின்போது தமது பங்களிப்பை போதுமானளவு வழங்கியிருக்கவில்லை எனும் குற்றச்சாட்டையும் மறுப்பதற்கில்லை.

இம்முறை வடக்கில் வெள்ளம் ஏற்பட்ட காலப்பகுதியானது கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட விடுமுறை காலம் என்பதால் உரிய முறையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட பலரால் முடியாமல் போனது எனும் காரணமும் முன்வைக்கப்படுகிறது.

எது எப்படியிருப்பினும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களுக்கு தேவையான உதவிகளை இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் செய்ய வேண்டியது சகல தரப்புகளினதும் கடப்பாடாகும்.

குறிப்பாக, இவ்வாறான அனர்த்தங்களின்போது முஸ்லிம் அமைப்புகள் களத்திலிறங்கிச் செயற்படுவது வழக்கமாகும். அந்தவகையில் வடக்கு வெள்ள அனர்த்த நிவாரணப் பணிகளில் முஸ்லிம் அமைப்புகள், பள்ளிவாசல் நிர்வாகங்கள் கவனம் செலுத்தி மனிதாபிமான உதவிகளை சேகரித்து வழங்க முன்வர வேண்டும். இதன் மூலம் தமிழ்- – முஸ்லிம் நல்லுறவுக்கும் வலுச்சேர்க்க முடியும். இது குறித்து சகலரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.