இன்றைய அர­சியல் சது­ரங்­கத்தில் அடுத்த காய் நகர்த்­தலா ஆளுநர் நிய­மனம்?

0 806
  • தோப்பூர் -எஸ்.ஏ.எம்.அஸ்மி

தற்­போது நாட்டில் இடம் பெற்று வரும் சடு­தி­யான அர­சியல் மாற்­றங்­களால் அர­சியல் களம் தொடர்ந்தும் சூடு பிடித்த வண்­ணமே உள்­ளது. கடந்த இரு மாதங்­க­ளுக்கு முன்னர் ஒக்­டோபர் 26ஆம் திகதி அர­சியல் யாப்­புக்கு முர­ணாக மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மித்­தமை அதனைத் தொடர்ந்து பாரா­ளு­மன்ற கலைப்பு அத­னை­ய­டுத்து ஏற்­பட்ட அர­சியல் மாற்­றங்­களால் ஒரு மாத காலம் நாடே ஸ்தம்­பித்துப் போனது.

நாட்டில் மட்­டு­மல்­லாமல், சர்­வ­தே­சத்தின் கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருந்த இவ்­வி­டயம் மக்கள் போராட்டம், பேரணி, பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­பட்ட சொல்ல முடி­யாத பல்­வேறு அசிங்­கங்­களின் பின்னால் ஒரு படி­யாக உயர்­நீ­தி­மன்றத் தீர்ப்பின் மூலம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டது.

இவ்­வாறு இரு மாத கால போராட்டம் ஓய்­வுக்கு வந்து நாடு வழ­மைக்கு திரும்பிக் கொண்­டி­ருக்­கின்ற இவ்­வே­ளையில் கடந்த 4ஆம் திகதி ஐந்து மாகா­ணங்­க­ளுக்­கான புதிய ஆளுநர் நிய­ம­னத்தின் மூலம் அர­சியல் சது­ரங்­கத்தில் அடுத்த கட்ட அதி­கார போட்­டிக்­கான காய் நகர்த்­தல்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருப்­ப­தனை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

அதிலும், குறிப்­பாக மேல் மாகாண ஆளு­ந­ராக அஸாத் சாலியும் கிழக்கு மாகாண ஆளு­ந­ராக கலா­நிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்­வையும் நிய­மித்­தி­ருக்­கின்­றமை, முஸ்லிம் சமூகம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்­துள்­ளது.

கடந்த, யாப்­புக்கு முர­ணான பிர­தமர் நிய­மனம், பாரா­ளு­மன்ற கலைப்பு ஆகி­ய­வற்றின் போது பெரும்­பான்­மையை நிரூ­பிப்­பது யார்? என்ற நிலையில் சிறு பான்மைத் தலை­மைகள் ஒற்­றைப்­பி­டி­யாக ரணில் விக்கி­ர­ம­சிங்கவின் பக்கம் நின்­ற­தோடு மாத்­தி­ர­மல்­லாமல் நீதி­மன்­றத்தில் பல்­வேறு வாதங்­தளில் கலந்து கொண்­டி­ருந்­த­மையும் இலங்கை அர­சியல் வர­லாற்றுப் பக்­கங்­களில் அழியாப் பதி­வாக மாறி­யி­ருக்­கின்­றது.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் சிறு­பான்மைக் கட்­சி­யினர் கோடிக்­க­ணக்­கான ரூபாய்­க­ளுக்கு பேரம் பேசப்­பட்ட போதிலும் சட்­டத்­திற்கு முர­ணான விட­யத்தில் ஒத்துப் போக முடி­யாது என்ற நிலையை கடைப்­பி­டித்­தி­ருந்­த­மை­யி­னா­லேயே இறுதி வரை எவ­ராலும் வெற்றி கொள்ள முடி­யாமற் போனது.

இவ்­வாறு தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக நின்ற சிறு­பான்மை சமூ­கத்தில் அதிலும் குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து இரு ஆளுநர் நிய­மனம் பெற்­றி­ருப்­பது அப­ரி­மி­த­மான மகிழ்ச்­சியைக் கொடுப்­ப­தோடு கிழக்கு மாகா­ணத்தில் பல்­வேறு கெடு­பி­டி­க­ளுக்கு மத்­தியில் முத­லா­வ­தாக ஒரு முஸ்லிம் ஆளுநர் நிய­மனம் பெற்­றி­ருப்­பது அனை­வ­ரையும் பிரம்­மிக்க வைத்­துள்­ளது.

இதேநேரம் பல்­வேறு அர­சியல் நெருக்­கடி நிலை­க­ளுக்கு மத்­தி­யிலும் ஜனா­தி­பதி, அவ­ருக்கு மிகவும் நெருக்­க­மா­கவும், நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வர்­க­ளாகவும் காணப்­பட்ட கலா­நிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ், அஸாத் சாலி போன்ற ஏனை­ய­வர்­க­ளுமே ஆளு­நர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

இதனால் இந் நிய­ம­னத்தின் மூலம் சுதந்­திரக் கட்­சி­யையும் அதன் செயற்­பா­டு­க­ளையும் விரி­வு­ப­டுத்­து­வ­தோடு சரிந்து கொண்டு செல்­கின்ற முஸ்லிம் சமூ­கத்­தி­னு­டைய ஆத­ர­வினை மீண்டும் தம் பக்கம் இழுத்துக் கொள்­வ­தற்­கான தந்­தி­ரோ­பா­ய­மாக இது அமை­யலாம் என்­பதே பலரின் கணிப்­பாகும். அதே நேரம் இந் நிய­ம­னத்தின் மூலம் யாப்பின் மூல­மாக வழங்­கப்­பட்­டுள்ள விட­யங்­களை எதிர் தரப்­பினர், பிர­யோ­கிக்க முடி­யு­மாக இருந்தால் என்­னாலும் பிர­யோ­கிக்க முடியும் என்ற பதிலை ஜனா­தி­பதி மறை­மு­க­மாக வழங்­கி­யுள்ளார்.

இது இவ்­வா­றி­ருக்க மாகாண ஆளு­ந­ருக்­கு­ரிய அதி­கா­ரங்­களை நோக்கும் போது சரத்து 154 B பிர­காரம், மாகாண சபை செயற்­பா­டுகள் தொடக்கம் மாகாண பொதுச் சேவை வரைக்கும் பல்­வேறு அதி­கா­ரங்கள் அவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. மாகாண சபை , முத­ல­மைச்சர், அமைச்­ச­ரவை காணப்­ப­டு­கின்ற வேளை­யி­லேயே ஆளுநர் அதனுள் தலை­யி­டு­வ­தற்­கான பல்­வேறு சந்­தர்ப்­பங்கள் காணப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் மாகாண சபைகள் கலைக்­கப்­பட்ட கிழக்கு மாகாணம் போன்ற இடங்­களில் முழு­மொத்த அதி­கா­ரமும் ஆளு­ந­ருக்கே வழங்­கப்­பட்­டுள்­ளது.இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் ஆளு­நரின் செயற்­பாடு எவ்­வாறு அமையப் போகின்­றது என்­பதே இன்­றைய பலத்த எதிர்­பார்ப்­பாக மாறி­யுள்­ளது.

ஏனெனில் தேசிய அர­சி­ய­லி­லேயே ஜனா­தி­பதி, பிர­தமர் தரப்­பினர் எதிரும் புதி­ரு­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற இவ்­வே­ளையில், ஜனா­தி­பதி யாப்பின் மூலம் தனக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தின் அடிப்­ப­டையில் தமக்கு சார்­பா­ன­வர்­களை ஆளு­நர்­க­ளாக நிய­மித்­தி­ருக்­கின்றார். இந்­நி­லையில் மாகா­ணத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற, எதிர் தரப்­பி­னரின் செயற்­றிட்­டங்­க­ளுக்கு ஆளுநர் முட்­டுக்­கட்டை போடு­வாரா ? ஒத்­து­ழைப்பு வழங்­கு­வாரா ? தன் கட்சி நலன்சார் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பாரா? என்­பதே தற்­போ­தைய பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.

எது எவ்வாறிருப்பினும் அதிகார வர்க்கத்தின் சகதிக்குள் சிக்குண்டு அல்லல்படுபவர்கள் அப்பாவிப் பொதுமக்களே. கடந்த இரு மாத அரசியல் நெருக்கடியால், நேர்முகப் பரீட்சை , நியமனக் கடிதம் கிடைத்தும் இடைநடுவில் நிறுத்தப்பட்டு எத்தனையோ இளைஞர் யுவதிகள் நிர்க்கதியாகி நிற்கின்றனர்.

எனவே பதவிக்கு வருபவர்கள் எவராக இருப்பினும் தங்கள் பதவிக்கும், அதிகாரத்திற்கும் அப்பாவி பொதுமக்களை பலிக்கடாவாக்காமல் கட்சி, நிற நலன்களுக்கப்பால் மக்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்பதே மக்களின் அபிலாசையாகும்.

Leave A Reply

Your email address will not be published.