சவூதி அரேபியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் தலிபான்கள் பங்குபற்ற மாட்டார்கள், பேச்சுவார்த்தைக்கான இடம் கட்டாருக்கு மாற்றப்பட வேண்டும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை தலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை உள்ளெடுக்குமாறு சவூதி அரசாங்கத்தினால் அழுத்தங்கள் முன்வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கே இந் நடவடிக்கையாகும்.
ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு நான்காவது சுற்றாக நடைபெறவுள்ள இப் பேச்சுவார்த்தை 2019 இல் வெளிநாட்டுப் படைகளை வெளியேற்றுவதற்கும் சாத்தியமான யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் தலிபான் அமைப்பிற்கும் அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸல்மே காலில்ஸாட் இற்கும் இடையே நடைபெறவுள்ளது.
பேச்சுவார்த்தை மேசையில் மேற்கு நாடுகளின் ஆதரவைப் பெற்ற ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பிரசன்னமும் இருக்க வேண்டும் என சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற போதிலும், காபூல் அரசாங்கத்தின் நேரடிப் பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவினை கடும்போக்கு இஸ்லாமியக் கிளர்ச்சிக்குழுத் தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.
அடுத்த வாரம் றியாதில் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்து கடந்த மாதம் அபுதாபியில் நிறைவு செய்யப்படாதுள்ள எமது சமாதான முன்னெடுப்புக்களை தொடர விருந்தோம் என தன்னை அடையாளப்படுத்த விரும்பாத ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட உயர்மட்ட தலிபான் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
பிரச்சினை என்னவென்றால் சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத் தூதுக்குழுவினை கட்டாயமாக சந்திக்குமாறு கோருகின்றன. தற்போதைக்கு அது எம்மால் முடியாமலிருப்பதால் நாம் சுவூதி அரேபியாவில் நடைபெற வேண்டிய சந்திப்பினை இரத்துச் செய்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையினை தலிபான் இரத்துச் செய்ததாக அறிவித்த தலிபான் பேச்சாளர் ஸபீஹுல்லாஹ் முஜாஹிட் அக் குழு புதிய பேச்சுவார்த்தைக்கான இடம் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இந்தக் கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதை சவூதி அரேபியத் தூதரகத்திற்கு விளக்கியுள்ளதாக மற்றுமொரு உயர்மட்ட தலிபான் உறுப்பினர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தைப் பொறுத்தவரை அமெரிக்கப் படையினரும் அதன் கூட்டுப் படையும் ஆப்கானிஸ்தானில் இருக்க வேண்டும், வெளியேறிவிடக் கூடாது என விரும்புகின்றது. ஆனால் நாம் வெளிநாட்டுப் படைகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு பெரும் விலையினைச் செலுத்தியுள்ளோம் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாம் ஏன் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் பேச வேண்டும்? ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் அமெரிக்காவையே பிரதான எதிரியாக தலிபான் பார்க்கின்றது. எனவே ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் பேசுவதற்கு முன்னதாக வெளிநாட்டுப் படைகளை திருப்பியனுப்புவதற்கு சட்டபூர்வமாக வொசிங்டனுடனேயே பேச வேண்டும் என்பதே தலிபானின் நிலைப்பாடாகும் எனவும் அவர் தெரிவித்தார்
இராணுவப் படையெடுப்பின் மூலம், அமெரிக்காவின் மிக நீண்டகாலம் புரியப்படும் யுத்தமாக ஆப்கானிஸ்தான் யுத்தம் காணப்படுகின்றது. கோடிக்காணக்கான அமெரிக்க டொலர்கள் செலவாகியிருப்பதோடு இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பிறந்த அமெரிக்க இராஜதந்திரியான காலில்ஸாட்டை கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகள் சந்தித்ததைத் தொடர்ந்து முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்தன. யுத்தத்தில் ஈடுபடும் தரப்புக்களைச் சேர்ந்த அதிகாரிகள் குறைந்தது மூன்று தடவைகள் சந்தித்துக் கொண்ட போதிலும், யுத்தம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
-Vidivelli