எகிப்தும் இஸ்ரேலும் இணைந்து சீனாய் போராளிகளுக்கு எதிராக செயற்படும்
எகிப்திய ஜனாதிபதி தெரிவிப்பு
சீனாய் தீபகற்பத்திலுள்ள ஆயுதக் குழுக்களுக்கு எதிராக எகிப்து மற்றும் இஸ்ரேல் இணைந்து செயற்படவுள்ளதாக எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தாஹ், எல்-சிசி அமெரிக்க ஊடக நிலையமொன்றிற்குத் தெரிவித்தார்.
எகிப்தில் அரசியல் கைதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர் எகிப்தில் நவீன வரலாற்றில் முதன்முறையாக முன்னர் அவர் தலைமை தாங்கிய இராணுவத்தினரால் முன்னாள் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.
இந்த நேர்காணலை ஒளிபரப்பாக்க வேண்டாம் என எகிப்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை மறுத்த சீ.பீ.எஸ் ஊடக நிறுவனம் எகிப்திய ஜனாதிபதியின் நேர்காணல் முழுவதையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பியது. இந்த நேர்காணலில் எந்தப் பகுதியை ஒளிபரப்ப வேண்டாமென கோரிக்கை விடுக்கப்பட்டது என்பது தொடர்பில் அவ்வூடக நிறுவனம் விளக்கமளிக்கவில்லை. எகிப்து 1979 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கையொன்றை செய்துகொண்டுள்ள நிலையில் இணைந்து பணியாற்றுவது கேள்விக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது. ஐ.எஸ் அமைப்பின் தலைமையிலான போராளிகளுடன் பல ஆண்டுகள் எகிப்திய படையினர் மோதலில் ஈடுபட்ட கரடுமுரடான மலைப்பகுதி மற்றும் பாலைவனப் பகுதிகளை இஸ்ரேல் மற்றும் காஸாவை எல்லைகளாகக் கொண்ட பிராந்தியமான வடக்கு சீனாயில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் எகிப்து இணைந்து செயற்படப் போவதாக கடந்த ஆண்டு வெளியான ஊடக தகவல்களை எகிப்திய இராணுவம் மறுத்திருந்தது.
முன்னொருபோதும் இல்லாதவாறு இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையேயான உறவு நெருக்கமாகியுள்ளதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் ‘உண்மைதான், நாம் இஸ்ரேலியர்களுடன் விரிவான ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.’ என அவர் பதிலளித்தார்.
இஸ்ரேலிய அதிகாரிகள் எல்-சிசி.யின் எகிப்துடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வெளிப்படையாகவே சிலாகித்துப் பேசியுள்ளனர். குறித்த எண்ணிக்கையான படைகளையும் ஆயுதங்களையும் இஸ்ரேலிய எல்லைக்கருகில் வைத்திருக்க முடியும் என 1979ஆம் ஆண்டின் உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் இஸ்ரேலிய எல்லைக்கருகில் படையினர், ஏவுகணைகள், ஹெலிகொப்டர் ஆயுதக் கப்பல்களை பணியில் ஈடுபடுத்துவதற்கான அனுமதியை வெற்றிகரமாக எகிப்து இஸ்ரேலிடமிருந்து பெற்றுக்கொண்டது.
எல்-சிசி 2014 ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவை இரண்டு தடவைகள் நேரடியாகச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கள் எகிப்தில் பெரிய அளவில் ஊடகமயப்படுத்தப் படவில்லை ஏனெனில், எகிப்தில் பெரும்பாலான மக்கள் தமது அண்டை நாடான இஸ்ரேலை பரம விரோத நாடாகக் கருதுகின்றனர், இஸ்ரேலுடனான உறவுகள் சீர்செய்வதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
எகிப்தில் 60,000 அரசியல் கைதிகள் இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறதென எல்-சிசி.யிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் எப்படி இந்தத் தரவுகளைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை எனத் தெரிவித்த அவர் எப்போதெல்லாம் சிறுபான்மையினரால் தீவிரவாத சிந்தனை திணிக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் அவர்களது எண்ணிக்கையினைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். குறித்த குற்றத்தைச் செய்தமைக்காக சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டிருப்பவர்களே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என எல்-சிசி கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார். எனினும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களோ விசாரணைகள் எதுவுமின்றி இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் சட்டங்களிலுள்ள விடயங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதோடு நீதிபதிச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்குப் பதிலாக நாட்டை பாதுகாத்தல் என்ற விடயத்திலேயே அக்கறை செலுத்துகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர். அல் ஜஸீரா ஊடகவியலாளர் மஹ்மூட் ஹுஸைன் தனது குடும்பத்தினரைச் சந்திக்க 2016 டிசம்பர் மாதம் நாட்டுக்கு வந்த வேளையில் கைது செய்யப்பட்டார்.
ஹுஸைன் எவ்வித விசாரணைகளுமின்றி எகிப்திய சிறையில் 743 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஊடகங்கள் மீதான இறுக்கமான கட்டுப்பாடு, மனித உரிமைக் குழுக்கள் மீதான கட்டுப்பாடுகள் உள்ளடங்கலான மாற்றுக்கருத்துக்களை அடக்குவதற்கான நட வடிக்கைகளின் ஒரு பகுதியே இந்தத் தடுத்து வைப்புக்களாகும். சர்வாதி காரியான ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிராக 2011 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சி மூலம் பெறப்பட்ட பெரும்பாலான சுதந்திரங்கள் பல மீண்டும் பழைய நிலைமைக்குச் சென்றுள்ளன.
-Vidivelli