ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து உருவாக்கவுள்ள கூட்டணியிலிருந்தே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான அபேட்சகர் தெரிவு செய்யப்படுவாரென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ பத்தரமுல்லையிலுள்ள தனது காரியாலயத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இருகட்சிகளும் இணைந்த கூட்டணியிலிருந்து போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வெளியிடுவோம். பொதுஜன பெரமுனவிலிருந்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் தனித்தனியாக ஜனாதிபதி அபேட்சகர்கள் களமிறக்கப்படமாட்டார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாத்துக்கொள்வது ஜனாதிபதியின் பொறுப்பாகும். அந்தப் பொறுப்பினை ஜனாதிபதி நிச்சயம் நிறைவேற்றுவார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கூட்டணியொன்றினை அமைப்பதினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசாங்கத்தை எதிர்த்து செயற்படுபவர்களை இந்தக் கூட்டணியில் இணைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார். இதேவேளை பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியை அமைக்கும் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடுத்துவரும் தேர்தல்களில் மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளது. கூட்டணியுடன் இணைத்துக் கொள்வதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியினால் பணிக்கப்பட்டுள்ளார்.
-Vidivelli