சமஷ்டி பற்றி தெரியாதவர்கள் பிரிவினை வாதத்தை தூண்டி வருகின்றனர்
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன
சமஷ்டி என்றால் என்னவென்று தெரியாதவர்களே பிரிவினை வாதத்தை தூண்டிவருகின்றனர். பிரிவினை வாத பிரசாரம் இல்லாமல் இவர்களால் அரசியல் செய்யமுடியாது. ஒற்றையாட்சிக்குள்ளே அதிகார பகிர்வு இடம்பெறும் என சுகாதார மற்றும் போசணை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கம் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தப் போவதாக மேற்கொள்ளப்படும் பிரசாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
அரசியலமைப்பு வரைபு எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட இருக்கின்றது. பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்த பின்னரே அரசியலமைப்பு தயாரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும். அத்துடன் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு இடம்பெறவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
என்றாலும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக சிலர் விளங்கிக்கொள்ளாமல் நாட்டை பிரித்து வழங்கப்போவதாகவும் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தப் போவதாகவும் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் சமஷ்டி என்றால் என்ன? அதிகார பகிர்வு என்றால் என்ன? என்று தெரியாமல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனை விளங்கிக்கொள்ளாமலே நாட்டை பிரித்து சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தப்போவதாக பிரசாரம் செய்கின்றனர்.
அத்துடன் இவர்கள் 1950 முதல் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொண்டு சென்றதாலே நாட்டில் யுத்தம் ஏற்படும் நிலைக்கு சென்றது. மீண்டும் அவ்வாறான நிலையை யாரும் விரும்பமாட்டார்கள். ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு இடம்பெறுவதை எவ்வாறு சமஷ்டி ஆட்சி என்று தெரிவிக்க முடியும். அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக இவர்கள் என்னவேண்டுமானாலும் தெரிவிப்பார்கள்.
அத்துடன் எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு செல்லவேண்டும் என தெரிவித்து வருகின்றன. தற்போதைய நிலையில் தேர்தலுக்கு செல்லவேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அவ்வாறில்லாமல் இவர்களுக்கு தேர்தல் தேவை என்பதற்காக தேர்தலை நடத்த முடியாது. மேலும் நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலே ஆரம்பமாக இடம்பெறும் சாத்தியம் இருக்கின்றது என்றார்.
-Vidivelli