சவூதி சிறையிலுள்ள பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களை பார்வையிட அனுமதிக்குமாறு வேண்டுகோள்

0 619

அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சவூதியில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களை பார்வையிட்டு, அவர்கள் சித்திரவதை செய்யப்படுகின்றமை, சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகினறமை மற்றும் குடும்பத்தினர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படாமை போன்ற குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்திலுள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்கு, தடுப்புக்காவல் மீளாய்வுக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ்பின் பிளன்ட் எழுதியுள்ள கடிதத்தில் ஜித்தாவுக்கு அருகிலுள்ள தஹ்பான் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களுடன் பேசுவதற்கு ஒழுங்குகளை மேற்கொள்ள உதவுமாறு இளவரசர் மொஹமட் பின் நவ்வாப் பின் அப்துல் அஸீஸை கேட்டுள்ளார்.

சவூதி அரேபியாவுக்கான எமது விஜயத்தின்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து நேரடித் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென நாம் எதிர்பார்க்கின்றோமென நேற்று எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ள பிளண்ட், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளையும் சந்தித்து நேர்காணல் மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பெண்கள் வாகனம் செலுத்துவதற்கான உரிமை தொடர்பில் பிரசாரங்களை மேற்கொண்ட எட்டுப் பெண் செயற்பாட்டாளர்கள் மின்சாரம் செலுத்தப்பட்டு, ஆண்கள் தலையை மூடும் துணியை பொருத்திக் கட்டும் ஒரு வகைக் கயிறால் அடித்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல சர்வதேச மனித உரிமை குழுக்கள் குற்றம்சாட்டியிருந்தன.

அப்பெண்கள் பாலியல் தொந்தரவுக்குட்படுத்தப்பட்டதாகவும், வன்புணர்வு செய்வதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான மனித உரிமைக் குழுக்களால் முன்வைக்கப்பட்டுள்ள மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுக்கள் சவூதி அரேபிய அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட முன்னேற்றகரமான மறுசீரமைப்புக்களின் நம்பகத்தன்மையை மிக மோசமாகப் பாதிக்கின்றன எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குற்றச்சாட்டுக்களை றியாத் மறுத்துள்ளது.

அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை சவூதி அரேபிய அரசாங்கம் முற்றிலுமாக மறுக்கின்றது. ‘கருத்துக்கள்’ அல்லது ‘தகவலறிந்த வட்டாரங்கள்’ என்ற மேற்கோள்களுடான விடயங்கள் கண்மூடித்தனமானவையாகும். அவை தவறானவையுமாகும் என ஊடக அமைச்சு வெளியிட்டிருந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களாக லவுஜைன் அல்-ஹத்லொல், அஸீஸா அல்-யூஸெப், எமான் அல்-நப்ஜான், நௌப் அப்டெல் அஸீஸ், மயால் அல்-ஸஹ்ரானி, சமார் பதாவி, நஸ்ஸிமா அல்-சாதா மற்றும் ஹாதூன் அல்-பாஸ்ஸி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சவூதி அரேபிய ஊடகவியலாளரும் சவூதி அரேபியாவை கடுமையாக விமர்சித்து எழுதி வந்தவருமான ஜமால் கஷோக்ஜி கடந்த ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி இஸ்தான்பூலிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச சந்தேகப்பார்வையால் சவூதி அரேபியா திணறிக்கொண்டிருக்கும் நிலையில் இக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையானது சவூதியை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.